திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய ரயில்சேவையை துவங்கி வைத்தார்.
திருச்செந்தூர் - நெல்லை இடையே தினசரி மூன்று நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு மாலை 4.10 மணிக்கு திருச்செந்தூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் 2 மாதங்களுக்கு ஒரு முறை தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த ரயில் சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும் என கேரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது.
ஜெயதுரை எம்பி தலைமை வகித்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஏகே.கோயல் வரவேற்றார்.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பயணிகள் ரயில் சேவையை நாட்டுக்கு அர்ப்பணித்து துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த ஆண்டு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க விழாவில் இதே போல் கலந்து கொண்டேன். தற்போது திருச்செந்தூர் - நெல்லை இடையே ரயில் பணிகள் சேவையை துவக்கி வைக்கும் வாய்ப்பை வழங்கிய தெற்கு ரயில்வேக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பகுதி மக்கள், வியாபாரிகள் அனைவரும் இங்கு வரும் தமிழக முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்பது தான். அந்தஅளவிற்கு இப்பகுதி மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு உள்ளனர். தென்கடைகோடியான இப்பகுதி மன்னார்வளைகுடா எல்லை பகுதியாக உள்ளது.
சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் சேவையை இங்கு இல்லை. இங்கு ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும். காரைக்குடி - தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே புதிய ரயில் வழித்தடத்திற்கு ஆய்வுக்கு உத்தரவிப்பட்டுள்ளது. அப்போது தூத்துக்குடி, மீளவிட்டான், திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் சேவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை வரும் போது இப்பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் வெங்கட சுப்பிரமணியம், மூத்த மண்டல வர்த்தக மேலாளர் ஹோசியார் சந்த், மூத்த மண்டல மேலாளர் (செயலாக்கம் ரகுராமன், திருச்செந்தூர் ரயில் நிலைய மேலாளர் வீரமணி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் சண்முகரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
www.tutyonline.net
|