தமிழக அரசு ஆண்டுதோறும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களையும், அரசு சொத்துகளையும் பாதுகாத்த பொதுமக்கள் மற்றும் அரசு
ஊழியர்களுக்கு பேரறிஞர் அண்ணா பெயரில் பதக்கம் வழங்கி வருகிறது.
இவ்விருது பெறுபவருக்கு ரூபாய் 5000
மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், ரூபாய் 25,000 க்கான காசோலையும் வழங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால்
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அண்ணா பதக்கத்தினை முதலமைச்சர் கருணாநிதி குடியரசு தின விழாவின் போது வழங்கினார். இந்த ஆண்டு அண்ணா
பதக்கம் நான்கு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
(1) கடந்த 4.3 .2009 அன்று மதியம் 12 மணியளவில், இரயில்வேயின் இருவழிப் பாதையில் வண்டி வருவதை அறியாது பாலத்தை கடக்க முயன்ற
பள்ளிச்சிறுவனை தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது ஓடிச்சென்று தூக்கி அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து காப்பற்றிய, மதுரை
மாவட்டத்தை சேர்ந்த தென்னக ரயில்வேயில் டிராபிக் போர்ட்டராக பணிபுரியும் திரு ரெ. விவேகானந்தன்
(2) கடந்த 5 .5.2010 அன்று கோவை வனக்கோட்டம் தடாகம் ரிசர்வ் பாரெஸ்ட், சேம்புக்கரை பகுதியில் மாலை 4.00 மணியளவில் ஆய்வு
களத்தணிக்கைப் பணிகளை முடித்துக் கொண்டு கோவை திரும்பிக் கொண்டிருந்த வேளையில் காட்டு பகுதியிலிருந்து துரத்திய மதம் பிடித்த ஒரு
பெண் யானையிடமிருந்து காப்பாற்றுவதற்காக சிறிய காட்டுப்பாதையில் வாகனத்தை பின்னோக்கி செலுத்தி வாகனத்திலிருந்த அனைவரையும்
காப்பாற்றிய வாகன ஓட்டுனரான திரு ஜெ. ரவி
(3) கடந்த 20 வருடங்களாக, இது நாள் வரை 500 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிணங்களை தகவலின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக குளம், கிணறு, சாலை போன்றவற்றில் கிடப்பதை கண்டறிந்து உரிய முறையில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரேத பரிசோதனை செய்து, பரிசோதனை முடியும் வரை உடனிருந்து புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய பணிகளை எவ்வித பிரதிபலனும் பாராமல் செய்து வருவதோடு, விபத்துக்குள்ளான பல நபர்களை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தும், ஒருமுறை மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் பேரூந்தில் 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில், பேரூந்தின் ஒரு டயர் கழன்று பேரூந்து சென்று கொண்டிருந்தபோது தனது டெம்போவில் விரைவாகச் சென்று அப்பேரூந்தை வழிமடக்கி, ஓட்டுனரிடம் விவரத்தினை எடுத்துக்கூறி விபத்தினை தடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. செ. ராஜகோபால்
(4) கடந்த 18.9.2009 அன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில், உயர் மின் அழுத்த விநியோகத்தின் காரணமாக
மின்சார கம்பிவிடம், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தன்னுயிரையும் பொருட்படுத்தாது, நோயாளிகளை சிதறி ஓடவிடாமல் ஒருங்கிணைத்து,
மருத்துவமனையில் இருந்த கார்பன் டய் ஆக்சைட் நிரம்பிய தீ அணைப்பானைக் கொண்டு தீயை முற்றிலும் அணைத்து, தீயினைப் பராவாமல்
தடுத்ததோடு, உயிர்சேதமும் ஏற்படாமல் தடுத்த கடலூரை சேர்ந்த திரு. த. ராஜேஷ்குமார்
தகவல்
தமிழக அரசு செய்தி வெளியீடு
|