தூத்துக்குடி மாவட்டத்தில் டிஜிட்டல் போர்டுகள் வைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஆட்சியர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. ஆட்சியர் மகேஷ்வரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
திருமணம், திருவிழா மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும், தற்காலிக டிஜிட்டல் போர்டுகள் 5 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு 3 தினங்களுக்கு முன்னரும், நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு பின்னர் 2 நாட்கள் மட்டும் போர்டுகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படும்.
அதற்கு மேல் வைக்கப்படும் போர்டுகள் அனைத்தும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் அகற்றப்படும். அதற்கான செலவுத்தொகை, போர்டுகள் வைத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதற்கான உத்தரவு மாநகராட்சி, நகராட்சி,பஞ்சாயத்து, நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நிரந்தர போர்டுகள் வைப்பதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவில் டிஜிட்டல் போர்டுக்கான நீளம், அகலம், வாசகம், வைக்கப்படும் இடம் குறித்த விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும். மனு தொடர்பாக, வருவாய்த்துறை, காவல்துறை அறிக்கைக்கு பின்னர், போர்டுகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையும் வசூலிக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் மகேஷ்வரன் தெரிவித்தார்.
தகவல்:
www.tutyonline.net
|