காயல்பட்டினத்தில், “காக்கும் கரங்கள்” (SAFE HANDS WELFARE ASSOCIATION) என்ற பெயரில் களமிறங்கிப் பணியாற்றும் அமைப்பு துவக்க விழா, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் (USC) 30.01.2011 அன்று நடைபெற்றது.
இரத்தப் பிரிவு கண்டறியும் இலவச முகாம்:
துவக்கவிழாவையொட்டி அன்று காலையில், காயல்பட்டினம் அரிமா சங்கத்துடன் இணைந்து இரத்தப்பிரிவு கண்டறியும் இலவச முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 160 பேர் கலந்துகொண்டு தமது இரத்தப்பிரிவை இலவசமாக பரிசோதித்தறிந்து கொண்டனர். அவர்களில் சுமார் அறுபது பேர் இரத்த தானம் செய்வதற்கு ஒப்புதலளித்துள்ளனர்.
துவக்க விழா:
அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்ற அமைப்பின் துவக்க விழாவிற்கு, காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். பேரவை துணைத்தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனை தலைவருமான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, குருவித்துறைப் பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அய்க்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்முறை:
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அமைப்பின் நோக்கம்:
அமைப்பின் ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரசாக் அமைப்பு குறித்த விளக்கவுரையாற்றினார். இவ்வமைப்பு நகர்நலப் பணிகளில் களமிறங்கிப் பணியாற்றுவதற்காக துவக்கப்பட்ட அமைப்பென்றும், பல்வேறு நகர்நல அமைப்புகள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு களப்பணியாற்ற முறைப்படி அழைத்தால் அதனைச் சிரமேற்று செய்ய ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அமைப்பிற்கென்று இரத்த தானம், நகர சுகாதாரம், கல்வி, சமூக விழிப்புணர்வு என சில செயல்திட்டங்கள் இருந்தாலும், இப்பணிகளை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புகளுக்கு என்றும் துணையாகவே இருக்கும் என்றும், எந்த அமைப்பிற்கும் போட்டியாக எதையும் இவ்வமைப்பு செய்யாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாழ்த்துரை:
அவரைத் தொடர்ந்து, கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், அய்க்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், காயல்பட்டினம் அரிமா சங்க செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், அய்க்கிய சமாதானப் பேரவையின் மண்டல பொறுப்பாளர் மவ்லவீ செய்யித் சுலைமான் மன்பஈ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திவாகரன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இரத்த தானத்தின் மகிமை:
டாக்டர் பாவநாசகுமார் தனதுரையில், இரத்த தானம் செய்ய வேண்டியதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம் பின்வருமாறு:-
18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண், பெண் யாரும் இரத்த தானம் செய்யலாம்...
இரத்த தானம் செய்வதால் உயர் இரத்த அழுத்தம், தாழ் இரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது...
இரத்த தானம் செய்வதற்கு முன், தானம் செய்பவருக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படுவதால், அப்பரிசோதனைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது...
இரத்த தானம் செய்த பின்னர் குளிர்பானம், சிறு தின்பண்டங்கள், இயன்றளவுக்கு தண்ணீர் உட்கொள்வது நல்லது...
இரத்த தானம் செய்த பின்னர் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்காவது வலுவான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்தல் தவிர்க்க வேண்டும்...
ஒருவரின் உடலிலிருந்து தானமாக 300 மில்லி லிட்டர் இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதற்கு ஒரு யூனிட் என்று சொல்லப்படும். இதுகாலம் வரை ஒரு யூனிட் இரத்தத்தைக் கொண்டு ஓர் உயிரை மட்டுமே காப்பாற்றும் நிலையிருந்தது. விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக இன்று அதே அளவு இரத்தத்தின் மூலம் நான்கு உயிர்களைக் காப்பாற்றவியலும்.
காரணம், இரத்தத்தில் சிவப்பனுக்கள், வெள்ளையனுக்கள், ப்ளாஸ்மா, ப்ளேட்லெட்ஸ் என நான்கு உட்பொருட்கள் உள்ளன. நோயாளிக்கு இவை நான்குமே ஒரே நேரத்தில் தேவைப்படுவதில்லை. எனவே, எது தேவையோ அதை அவருக்கு தனியே பிரித்தளிக்க முடியும். இந்த வகையில்தான் ஒரு யூனிட் இரத்தத்தைக் கொண்டு நான்கு உயிர்களைக் காக்க முடிகிறது...
நல்ல ஆரோக்கியமான உடல் நலம் கொண்டுள்ள ஒருவர் வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை இரத்த தானம் செய்யலாம்...
இரத்த தானம் செய்தோர் - செய்யாதோரை ஒரே வகையான ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தியதில், இரத்த தானம் செய்யும் வழமையுள்ளோருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைவாக உள்ளதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்...
இவ்வாறு டாக்டர் பாவநாசகுமாரின் உரை அமைந்திருந்தது.
நிறைவு:
இறுதியாக காக்கும் கரங்கள் அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எஸ்.கே.அப்துல் காதிர் என்ற பாலப்பா நன்றி கூற, துஆவுடன் விழா நிறைவுற்றது. விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்கள்:
S.M.B.முஹம்மத் அஸ்ஹருத்தீன்,
செயற்குழு உறுப்பினர்,
காக்கும் கரங்கள் நல அமைப்பு,
காயல்பட்டினம். |