காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசலையொட்டி கிழக்கே செல்லும் குறுக்குச் சாலையின் மேல்முனையில் அமைந்துள்ளது AKL 3 என்ற எண்ணுடைய நியாயவிலைக் கடை. காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, ஆசாரிமார் தெரு ஆகிய தெருக்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இக்கடையிலேயே பொருட்கள் வாங்க வேண்டும்.
04.02.2011 வெள்ளிக்கிழமை மாலையில் இக்கடையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்கின்றனர்...
தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பத்து முதல் பதினைந்து கார்டுகள் வரை ஒரே நேரத்தில் பொருட்கள் வழங்குவதால், பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் உட்பட இயலா நிலை பொதுமக்கள் பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை...
சரக்கு வந்து முதல் நாள் விட்டு அடுத்த நாள் வாங்க வந்தால் சரக்கில்லை என்று கடைக்காரர் சொல்கிறார்...
எப்போதும் எடை குறைவாகவே அளக்கப்படுகிறது...
இலவச வேஷ்டி சேலை பலருக்கு வழங்கப்படவில்லை...
சரக்கு இருப்பு குறித்த தகவல் பலகையில் எந்த தகவலும் இல்லை...
கடை திறப்பதோ தாமதமாக... அடைப்பதோ நேரம் வந்தவுடன்...
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு அனைவரும் சென்ற பின்னர் பொருட்கள் பதுக்கப்படுகிறது...
இவை அக்கடையில் பொருள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் பலரின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து, கடை அலுவலர் கோஸ்லேயிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இக்கடையில் 1092 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் என்றும், சென்ற மாதம் சீனி 900 பேருக்கு மட்டுமே அனுப்பித் தரப்பட்டது என்றும் தெரிவித்த அவர், சரக்கு முடிந்துவிட்ட நிலையில் வாங்க வரும் எஞ்சிய 200 பேருக்கு கொடுக்க இயலாமல் போவதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், தன் புறத்திலிருந்து இதில் எத்தவறும் நிகழவில்லை என்றும் தெரிவித்தார்.
பொங்கல் இலவச வேஷ்டி சேலை 700 பேருக்கு மட்டுமே வந்தது என்றும், எனவேதான் பலர் வாங்க முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முகைதீன்,
இங்கு நியமிக்கப்படும் அலுவலர்கள் துவக்கத்தில் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.. சரக்கு எடை போட்டு கொடுப்பதற்காக இக்கடையில் இருக்கும் அலியார் தெருவைச் சார்ந்த முகைதீன் அப்துல் காதர் என்பவர்தான் அனைவரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்...
வேண்டுமென்றே எடையைக் குறைத்து மக்களுக்கு பொருள் வழங்குவது, கடை அலுவலருக்கு அவ்வப்போது ஏதேனும் கொடுத்து, அங்கு கிடைக்கும் பொருட்களை கருப்புச் சந்தையில் விற்பது, பதுக்கல் செய்வது உள்ளிட்ட பல வேண்டாத செயல்களை அவர் செய்வதாக எனக்கும், இப்பகுதிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம்...
அதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளால் இவர் பலமுறை கண்டிக்கப்பட்டிருந்தும் திருந்த ஆயத்தமாக இல்லை... என்று தெரிவித்தார்.
இப்படி தினமும் பிரச்சினை ஏற்படுவதால் இப்பகுதியில் அமைதி கெட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வரும் திங்கட்கிழமை (நாளை) இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் எழுத்து மூலம் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.
சம்பத்தைக் கேள்வியுற்று அவ்விடம் வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை நிர்வாகிகள் ஜப்பான் சுலைமான், லக்கி மக்கீ ஆகியோர், இக்குற்றச்சாட்டுகள் இங்கு மட்டுமின்றி நகரின் பல கடைகளிலிருந்தும் பெறப்படுவதாகவும், சரக்கு பதுக்கல் குறித்து பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்ததோடு, இக்கடையில் சரக்கு எடை போட்டு வழங்கும் முகைதீன் அப்துல் காதர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தமதமைப்பின் சார்பில் முறையிடப்படும் என்றும் தெரிவித்தனர்.
வாங்காத பொருட்களுக்கும் குடும்ப அட்டையில் பதிவு செய்து, அப்பொருட்களை பின்பு கருப்புச் சந்தையில் விற்றல், தரமான அரிசியுள்ள மூடைகளை தனியே ஒதுக்கி, கூடுதல் விலைக்கு கருப்புச் சந்தையில் விற்றல், நள்ளிரவில் வாகனத்துடன் வந்து மூடை மூடையாக பொருட்களைக் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காயல்பட்டினம் நகரின் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளைச் சார்ந்த பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், அந்நடவடிக்கைகளின்போது கையும் களவுமாகப் பிடிக்க அவர்கள் ஆயத்தப்படாதது வேதனைக்குரிய உண்மை. |