காயல்பட்டினத்தில் ரேசன் கடையில் மண்டல வளர்ச்சி அதிகாரியும் தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளருமான ஸ்வரன்சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதி மக்கள் தங்களுக்கு ரேசன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்வதில்லை என புகார் தெரிவித்தனர்.
தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட மண்டல வளர்ச்சி அதிகாரியுமான ஸ்வரன் சிங் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் புதிதாக போடப்பட்டு வரும் தார்சாலை பணியை நேரில் ஆய்வு செய்தார். சாலையின் தரம் குறித்து சோதனை செய்தார். இதனையடுத்து அங்கிருந்து ரேசன் கடையில் அவர் ஆய்வு செய்ய வந்தார்.
அப்போது அங்கு குவிந்த பொதுமக்கள் தங்களுக்கு ரேசன் பொருட்கள் முழுமையாக வழங்குவதில்லை. எதை கேட்டாலும் இல்லை என கூறி விடுகின்றனர் என சராமாரியாக புகார் தெரிவித்தனர். உடனடியாக விடுமுறை தினமாக இருந்தாலும் ரேசன் கடை ஊழியரை வரவழைத்து இருப்பில் உள்ள பொருட்களை வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதி கவுன்சிலர் கணேசன் பால்ராஜ் தங்களது பகுதியில் தமிழக அரசின் இலவச எரிவாவு அடுப்பு வழங்கப்பட்டு காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படவில்லை கூறினார். இதனயடுத்து அதிகாரிகளிடம் உடனடியாக காஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றின் படுகையில் உள்ள போபாஞ்சான் மற்றும் வர பாஞ்சான் மடையில் புதிதாக அமைக்கப்பட்டு மடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிசந்திரன், திருச்செந்தூர் ஆர்டிஒ பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, மண்டல துணை தாசில்தார் ரமேஷ், திருச்செந்தூர் வட்ட வழங்கல் அதிகாரி நம்பிராயர், ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் சுகுமார், பொதுப்பணிதுறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
தகவல்:
www.tutyonline.net
|