கோவை மாவட்டம் கருத்தம்பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், இம்மாதம் 04, 05 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே சிறப்பு பயிற்சி முகாமில் காயல்பட்டினம் நகர பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முகாம் நிகழ்வுகள் குறித்து, ஏற்பாட்டாளர்கள் சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
கோவை மாவட்டம் கருத்தம்பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், இம்மாதம் 04, 05 தேதிகளில் அகில இந்திய கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 200 கராத்தே வீரர் - வீராங்கனைகள் பங்கேற்ற இம்முகாமில், ஜப்பானின் ஐந்தாம் நிலை கருப்புப் பட்டை கொண்டவரும், மலேசிய நாட்டின் கராத்தே தலைமை பயிற்சியாளருமான சென்செய் அறிவழகன் பயிற்சியளித்தார்.
ஆசிய கராத்தே கூட்டமைப்பின் நடுவரும், ஜப்பானின் 7ஆம் நிலை கருப்புப்பட்டை கொண்டவருமான ஷிகான் டோனி பொன்னையா, இப்பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்ற வீரர் - வீராங்கனையருக்கு கருப்புப் பட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து, சென்ற மாணவர்களில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் ஹக்கீம், ரிழ்வான், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.எச்.மெய்தீன் ஸாஹிப், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் சுபுஹானீ ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சியாளர் இர்ஃபான், என்.அப்துல் வாஹித் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இம்முகாமில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட கராத்தே மாணவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டிக்குத் தேர்வுபெற்றுள்ளனர்.
முகாம் ஏற்பாடுகளை அகில இந்திய ஹயாசிஹா கராத்தே கழக செயலாளர் கோவை வி.எம்.சி.மனோகர் செய்திருந்தார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |