அமீரகம் வாழ் காயல் தவ்ஹீது சகோதரர்கள் அமைப்பின் செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 04.02.2011 அன்று துபாய் அல் குசைஸில் உள்ள VSA ஷேக் தாவூத் அவர்களின் இல்லத்தில் வைத்து காலை 10:30 முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற்றது. இதில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு துணி உமர்சாகிபு அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இது குறித்து அமைப்பின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-
ஆரம்பமாக திருவேதம் அல்குர்ஆனிலிருந்து சில வசனங்கள் ஓதப்பட்டு அவற்றிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
பின்னர் கூட்டத்தலைவர் அவர்கள் தற்போது நடந்து வரும் அல்-ஜாமிஉல் அஸ்ஹர் கட்டட விரிவாக்கப்பணிகளின் நடப்பு விபரங்களை எடுத்து கூறினார்கள். பள்ளியின் நிர்வாகத்தினர் பொதுநல நோக்கில் இறைவனுக்காக செய்து வரும் சேவையை உறுப்பினர்கள் பாராட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் பள்ளி கட்டிட தேவைக்கான நிதி வசூல் நிலைமையை சகோதரர் VSA ஷேக் தாவூத் அவர்கள் மன்றத்தின் முன் எடுத்து வைத்தார்கள். கூட்டத்திலும் நிதி வசூல் செய்யப்பட்டது.
அடுத்து சமீபத்தில் மறைந்த சமூக நல ஆர்வலரும், ஆரம்ப காலம் முதலே தௌஹீத் நம்பிக்கையில் உறுதியாக இருந்து, ஏகத்துவ கொள்கையை நமதூர் மக்களிடையே பல வகைகளில் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொண்டவருமான SK என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படும் எம். எல். ஷாகுல் ஹமீத் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்னாருடைய பாவ பிழை பொறுப்புக்காக துஆ செய்யப்பட்டது. அத்துடன் அன்னாரின் வாழ்க்கையில் அன்னார் ஆற்றிய சில இறைவழிப்பேச்சுக்கள் மற்றும் இதர செய்திகள், வந்திருந்த உறுப்பினர்களிடையே பரிமாறப்பட்டது.
அடுத்ததாக, வரும் 25.02.2011 வெள்ளிக்கிழமை அன்று துபாய் அல்-துவார் பூங்காவில் வைத்து மன்றத்தின் பொதுக்குழுவை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. வரும் நாட்களில் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் இது குறித்து விரிவாக விவாதித்து இப்பொதுக்குழு கூட்டத்தைப்பற்றிய முடிவினை மன்றத்தின் மற்ற எல்லா உறுப்பினர்களுடனும் பகிர்ந்துக்கொண்டு குடும்பத்தினர் சகிதம் வருமாறு அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் மன்ற நிதி நிலை அறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இறுதியாக, ஹம்து சலவாத்தோடு கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பீ.எம். ஹுசைன் நூருதீன், துபாய். |