காயல்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள் குறித்து வயது மற்றும் பகுதிவாரியாக ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப நோய்த்தடுப்பு செயல்திட்டங்களை வகுத்திடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயல்திட்டம் “காயல் உடல் நலன் ஆய்வு - KAYALPATNAM HEALTH SURVEY (KHS) 2011“.
வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), காயல் நற்பணி மன்றம் - தம்மாம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த ஆய்வின் முதற்கட்ட முகாம், 13.02.2011 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளால் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின்போது நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய நகர பள்ளிக்கூடங்களில் தகவல் சேகரிப்பு நேற்று நடைபெற்றது.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அதன் துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ தலைமையிலும், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் அதன் தலைமையாசிரியர் காஜா முகைதீன் தலைமையிலும், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் அதன் தலைமையாசிரியை செண்பகவல்லி தலைமையிலும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் அதன் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன், முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் ருக்னுத்தீன் ஸாஹிப் ஆகியோர் முன்னிலையிலும், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் அதன் தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப் தலைமையிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தகவல் சேகரிப்பு முகாமில், காயல்பட்டினத்தில் வசிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடல் எடை, உயரம் அளக்கப்பட்டு, அவர்களின் உடல் நலன் குறித்த BMI பதிவுச்சீட்டு வழங்கப்பட்டது. அத்துடன், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், வழமையாக சந்திக்கும் நோய்கள் உள்ளிட்ட கேள்விகளடங்கிய தகவல் சேகரிப்பு தாளில் கலந்துகொண்டோரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஆய்வுப்பணியில் உற்சாகத்துடன் கலந்துகொள்ளும் பொருட்டு பரிசுக்கூப்பனும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. முகாமில் அதனை இணைந்து நடத்தும் வட அமெரிக்க காயல் நல மன்றத்தின் (நக்வா) ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரும், உடனிருந்து உதவும் பொருட்டு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். |