காயல்பட்டினம் பெரிய தெருவில் செயல்பட்டு வருகிறது ஐ.ஓ.பி. என்று சுருக்கியழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
அலுவலர்களின் அலட்சியம்:
கடந்த 18.02.2011 அன்று மதியம் அங்குள்ள அலுவலர்களின் அலட்சியப்போக்கால் நடந்த விவாகரம் குறித்து காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியைப் படித்தறிந்த பலர், உரிய நடவடிக்கை கோரி வங்கி மேலிடத்திற்கு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல்கள் - கடிதங்கள் மூலமும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மண்டல அதிகாரி நடத்திய அவசரக் கூட்டம்:
இந்நிலையில், வெளியிடப்பட்ட செய்தியின் அச்சுப்பிரதியுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல அலுவலர் திருநாவுக்கரசு கடந்த 21.02.2011 அன்று மதியம் 03.30 மணிக்கு காயல்பட்டினம் ஐ.ஓ.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் மேலாளர் மற்றும் அலுவலர்களிடம் அவர் இவ்விவகாரம் குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார். அந்நேரம் அங்கிருந்த வாடிக்கையாளர்களிடமும் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் காயல்பட்டினம்.காம் ஆசிரியர் குழுவினரை அழைத்துப் பேசிய மண்டல அலுவலர் திருநாவுக்கரசு,
வாடிக்கையாளர்களிடம் ரகசியமாக குறைகேட்பு:
வங்கியின் உயரதிகாரி என்பதைக் காண்பிக்காமலேயே நான் அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் சில குறைகளைக் கேட்டறிந்தேன். பணப்பட்டுவாடா தாமதம், அலுவலர்களின் அலட்சியப் போக்கு, அனைத்திலும் தாமதமான சேவை என அவர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துகொண்டேன்...
எங்கள் நிறுவனம் சார்ந்தவர்கள் என்பதற்காக இருக்கும் குறைகள் எதையும் மறைக்கவோ, சமாளிக்கவோ விரும்பவில்லை...
விரைவில் கூடுதல் பெண் அலுவலர் நியமனம்:
பெண்களை ஆண்கள் பகுதிக்கு வரவழைப்பது இனி இருக்காது. இக்குறையை நிரந்தரமாக போக்கிடும் வண்ணம் வரும் ஏப்ரல் மாதத்தில் இன்னொரு பெண் ஊழியர் நியமிக்கப்படுவார்...
மதிய உணவு இடைவேளை அறிவிப்புப் பலகை:
மதிய உணவு இடைவேளை 02.00 மணி முதல் 02.30 மணி வரை என்று அறிவிக்கும் அறிவிப்புப் பலகை வங்கியின் நுழைவாயிலிலும், காசாளர் பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது...
விரைவான சேவைக்காக கூடுதல் ப்ரிண்டர்:
தாமதமான சேவையைத் தவிர்த்திடும் பொருட்டு இன்னுமொரு ப்ரிண்டர் சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்...
புகார் வழிமுறை கூறும் அறிவிப்புப் பலகை இனி திறந்திருக்கும்!
புகார் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிவிப்புப் பலகை தற்சமயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை மறைக்கும் வகையில் எவ்வித அறிவிப்பும் அதன் மேல் நிறுவக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இணக்கமாக நடந்திட அறிவுரை:
வாடிக்கையாளர்கள் பல மனநிலையில் வருபவர்களாக இருந்தாலும், வங்கிச் சேவையை மேம்படுத்திடும் பொருட்டு அவர்களுடன் இணக்கமாகவும், நளினமாகவும் நடந்துகொள்ள அலுவலர்கள் அறிவுறுத்தபட்டுள்ளனர்...
வாடிக்கையாளர் வருடாந்திர குறை தீர்ப்பு நாள்:
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நாள் அறிவிக்கப்படும்... அதுகுறித்த அறிவிப்பை முற்கூட்டியே வங்கி மேலாளர் உங்களுக்கு அறியத்தருவார்... உங்கள் வலைதளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து வாடிக்கையாளர்களையும் அக்கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
இனியும் இதுபோன்று ஏதேனும் குறைகள் இருந்தால் வங்கி மேலாளரிடமோ, அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் +91 94432 39130 எனது கைபேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்... நியாயமான குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்கி மேலாளர் வேண்டுகோள்!
பின்னர் வங்கி மேலாளர் செல்வராஜன் கருத்து தெரிவிக்கையில்,
வங்கியில் நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து மேலாளரிடம் தெரிவித்துள்ளோம்... அவற்றைக் களைந்திடும் பொருட்டு பல நல்ல நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்...
ஆண்டுக்கொருமுறைதான் வாடிக்கையாளர் குறை தீர்க்கப்படும் என்றில்லை... ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் என்னென்ன குறைகள் இருப்பதாக அவர்களுக்குத் தெரிகிறதோ அவற்றை உரிமையுடன் என்னிடம் தெரிவிக்கலாம்...
உண்மையில் அவை குறைகளில்லையெனில் அதுகுறித்து விளக்கப்படும்... குறைகளிருந்தால் உடனுக்குடன் களைந்திட ஆவன செய்யப்படும்...
எனவே, நிறைவான வங்கிச் சேவையை தங்களுக்களித்திடும் பொருட்டு, வாடிக்கையாளர்கள் என்றும்போல் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். |