காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணம் குறித்து கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை வழங்க தக்வா பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், 22.02.2011 செவ்வாய்க்கிழமை பின்னிரவில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில், ஒத்தமுத்து ஹாஜி எம்.ஏ.மீராஸாஹிப் முன்னிலையில் பாங்காக்கிலுள்ள பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் நடைபெற்றது.
அப்துர்ரஷீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்புரையாற்றினார்.
மவ்லவீ ஷாதுலீ ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்தோம்பல் செய்யப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - CFFCக்கு ரூ.50,000 நிதியொதுக்கீடு:
காயல்பட்டினம் நகரில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பிற்கான காரணிகளைக் கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள Cancer Fact Finding Committee - CFFC இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தக்வா மனதாரப் பாராட்டுகிறது.
அத்துடன், புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்கான அதன் தொடர் நடவடிக்கைகளுக்காக தக்வா சார்பில் ரூ.50,000 நிதியொதுக்கீடு செய்து தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கு நிதியுதவி:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்பின் நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – துளிருக்கு நிதியுதவி:
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - ஐக்கியப் பேரவை நடவடிக்கைகளுக்கு ஆதரவு:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் நடைபெற்று வரும் சுனாமி தொகுப்பு வீடுகள் கட்டிடப் பணியைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இம்மன்றம் தனது ஆதரவைத் தெரிவிக்கிறது.
மேலும் சட்ட ரீதியான செயல்பாடுகள் நமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில், அங்கு சரக்கேற்றிச் செல்லும் வாகனங்களை நம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வழிமறித்து போராட்டம் நடத்திட ஐக்கியப் பேரவையை இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - புற்றுநோய் தடுப்புக்காக சிறப்புத் தொழுகை:
புற்றுநோய் காரணிகளை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்வதைப் போன்று, ஆன்மிக ரீதியாகவும் அதற்கான தீர்வைத் தேட வேண்டுமெனவும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஸலாத்துல் ஹாஜத் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, அல்லாஹ் தஆலாவிடம் பாவமன்னிப்பு தேட வேண்டுமென சிறப்பு விருந்தினர் மவ்லவீ காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ பேசியதன் அடிப்படையில், அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 - காணொளி காட்சி மூலம் நகர் நடப்பறிதல்:
இனி வருங்காலங்களில் மன்றத்தால் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களின்போதும், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரை காணொளி காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸிங்) மூலம் கூட்டத்தில் உரையாற்றச் செய்து, நகர் நடப்புகள், நற்கருத்துக்கள் மற்றும் நல்லாலோசனைகளை நேரடியாகக் கேட்டறிய தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
M.H.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்,
பொருளாளர்,
தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா,
பாங்காக், தாய்லாந்து. |