மாவட்ட அளவில் மீடியா சென்டர்களை அமைத்து தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி
தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பயிற்சி அளித்து
வருகிறார். பயிற்சி நாளையுடன் முடிகிறது.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். இதை கருத்தில் கொண்டு
அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு
சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மீடியா சென்டர்’ அமைத்து அதில் மாவட்ட அளவில் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட தேர்தல் தொடர்
புடைய அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவினர், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வதை கண்காணிக்க
வேண்டும். தினமும் நாளிதழ்களில் வெளியாகும் தேர்தல் செய்திகளை கவனித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல்
பிரசாரத்தின்போது கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் யாராவது மத, சாதிக் கலவரத்தை தூண்டும் வகையிலோ அல்லது வன்முறையை தூண்டும்
வகையிலோ பேசினால் அதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து மத்திய தேர்தல் பார்வையாளருக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்பாளர் பெயரில் வரும் விளம்பரம், கட்சி சார்பில் வெளிவரும் விளம்பரங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்
என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தகவல்:
தினகரன்
|