தொழில் திறன் மிக்க எளியோர் 22 பேருக்கு ஹாங்காங் பேரவை சார்பில் தொழிற்கருவிகள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
தொழில் முனைவோர் 22 பேருக்குத் தேவையான தொழிற்கருவிகள் உதவியாக வழங்குவதென 02.02.2011 அன்று காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அக்கருவிகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் பொருட்டு, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். நிறுவனங்களிடம் அதற்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பிடம் பொறுப்பளிக்கும் நிகழ்ச்சி 26.02.2011 அன்று (நேற்று) இரவு 08.15 மணிக்கு காயல்பட்டினம் பெரிய பள்ளி வளாகத்திலுள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாங்காங் நகரில் தொழில் செய்யும் மூத்த காயலரான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி டி.எம்.ஆர்.மர்ஸூக் முன்னிலை வகித்தார்.
கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தொகுத்தளித்த்தோடு, இத்திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
பின்னர், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பயனாளிகளுக்கு,
தையல் இயந்திரம் - 12,
ஓவர்லாக் தையல் இயந்திரம் - 1,
மாவரைப்பான் (வெட் க்ரைண்டர்) - 5 ,
அடுமனை இயந்திர அடுப்பு (பேக்கரி ஓவன்) - 4
ஆகிய - 22 பயனாளிகளுக்கு வழங்குவதற்கான தொழிற்கருவிகளில் ஒரு பகுதி காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை முன்னிலையில், பொருளாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வசம் பொறுப்பளிக்கப்பட்டது.
மற்ற தொழிற்கருவிகள் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். சார்பாக பேரவையின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் வசம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், மவ்லவீ என்.எம்.ஓ.முஹம்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயின் துஆவடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகுதியுள்ள பயனாளிகளை நேரில் ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பித்தமைக்காக காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கிதுரு ஃபாத்திமா, இணைந்து களப்பணியாற்றிய ஆசிமா ஆகியோருக்கும், இத்திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். ஆகிய நிறுவனங்களுக்கும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக, அவ்வமைப்பின் பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். |