தமிழக அரசு 27-2-2011 (ஞாயிறு) அன்று இரண்டாம் தவணை பல்ஸ் போலியோ முகாம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்று முகாமில், ஐந்து வயதிற்குட்பட்ட 70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இந்த குழந்தைகள் அனைவருக்கும்
மற்றும் முதல் சுற்றிற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் வருகின்ற ஞாயிறன்று சொட்டு மருந்து வழங்கப்படும்.
சென்ற முகாம் போலவே, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும்
குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பஸ் நிலையம், இரயில் நிலையம், மற்றும் சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் (Transit) மையங்கள் நிறுவப்பட்டள்ளன. மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள் (Migrant) மற்றும் இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் இடம் பெயர்ந்து வாழும் வெளி மாநிலத்தவர் குழந்தைகள் மூலம் போலியோ நோய் பரவும் அபாயம் இருப்பதால், தற்போதைய போலியோ இல்லாத நிலையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
உலகில் பல்வேறு நாடுகள் போலியோ சொட்டு மருந்து வழங்கியதன் மூலம் போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்து விட்டன. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது; இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், வரும் முகாமின்
போது இச்செய்தியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வழக்கமான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாம் நாளன்று அவசியம் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். பல்ஸ் போலியோ முகாமின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்தால் மட்டுமே ஒவ்வொரு குழந்தையும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய முடியும்.
இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயை அறவே ஒழிக்க உறுதி எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை. |