காயல்பட்டினம் நகராட்சி வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் காசோலை மோசடி செய்யும் முயற்சியில் செய்யித் முஹம்மத் என்பவர் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காயல்பட்டினம் நகராட்சியின் துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்காரின் சகோதரர் என அறியப்படுகிறது. இதுகுறித்து நகராட்சிகள் மண்டல அதிகாரி மோகன் நேற்று நகர்மன்ற அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
தற்போதைய காசோலை மோசடி முயற்சி பல கேள்விகளை எழுப்புகிறது. வரும் அக்டோபரில் புது தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ள காயல்பட்டினம் நகராட்சி, தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற தவறு இதற்கு முன்னர் நடைபெறவில்லை என்பதை மக்கள் முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என்ற அவசியத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் நகராட்சி மூலம் நகரில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நேற்று மதியம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அவசரக் கூட்டத்தில், நகராட்சி உறுப்பினர்கள் சிலர் பதவி விலக முன் வந்ததாகத் தெரிகிறது. தார்மீகப் பொறுப்பேற்று உறுப்பினர்கள் பதவி விலகுவது பல மக்கள் மன்றங்களில் காணப்படும் காட்சிதான் என்றாலும், பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இது அவசியமற்ற செயலாகவே தெரிகிறது.
மேலும், உறுப்பினர்கள் பதவி விலகினால், நகராட்சி நிர்வாகம் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் வரும். கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருப்பது அரசாங்கத் துறைகள் தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது.
ஆகவே, உறுப்பினர்கள் பதவி விலகல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொண்டு, கடந்த 4.5 ஆண்டில் நகராட்சி மேற்கொண்ட பணிகள், அவற்றுக்கான செலவுகள் போன்ற விபரங்களை மக்களிடம் தெரிவிக்கலாம். தற்போது நகராட்சியின் மேல் மக்கள் கொண்டுள்ள அதிருப்திக்கு விளக்கம் கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்வாவதற்கு ஒரு விளக்க வாய்ப்பாகவும் இது அமையும். |