காயல்பட்டின நகராட்சியில் செக் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை விசாரிக்க நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகன் இன்று காயல்பட்டினம் வந்துள்ளார். இது குறித்து தற்போதைய விபரம் வருமாறு :-
செய்யத் முஹம்மது என்பவர் பெயரில் - நகராட்சியின் வங்கி கணக்கிற்கு உரிய காசோலை - ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் மதிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காசோலை குஜராத் மாநிலத்தில் உள்ள
ஐசிஐசிஐ வங்கி கிளையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இக்காசோலை குறித்து சந்தேகம் எழுந்ததால், நகராட்சி கணக்கு வைத்துள்ள வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (தூத்துக்குடி கிளை) அலுவலர்கள் நகராட்சியில் தற்போது ஆணையர் பொறுப்பு வகிக்கும் சக்தி குமாரை அணுகியுள்ளனர். இத்தொகைக்கான காசோலையை தாம் யாருக்கும் விநியோகிக்கவில்லை என்று அவர் அவ்வேளையில் தெரிவித்துள்ளார்.
சக்தி குமார் ஜனவரி மாதம் காயல்பட்டின நகராட்சியின் ஆணையர் பொறுப்பினை ஏற்றவர். பயிற்சி நிமிர்த்தமாக பிப்ரவரி 7 முதல் கன்னியாகுமரிக்கு அவர் சென்றதாகவும், மீண்டும் பணியில் பிப்ரவரி 17 அன்று சேர்ந்ததாகவும் தெரிகிறது.
அவர் நகரில் இல்லாத வேளையில் இக்காசோலை வினியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் காசோலையை பெற்ற செய்யத் முஹம்மது என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் காயல்பட்டினத்தை சார்ந்தவர் என்றும், அவர் காயல்பட்டினம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த புகார் நகாரட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் சக்தி குமார் பெயரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், துணை ஆய்வாளர் நடராசன் ஆகியோர் நகராட்சி வந்தனர்.
இதற்க்கிடையில் - செக் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நகராட்சி தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - நகராட்சி உறுப்பினர்களிடம் நகராட்சி மன்றத்தில் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
|