செய்தி: குழுப்பணியாற்றி நல்ல நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவோம்! துளிர் கேரளங்கில் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சூளுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லதொரு தொடக்கம்... posted byMohamed Buhary (Chennai)[26 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12258
நகர்மன்றத் தலைவரின் உரைவீச்சு வரவேற்கும்படியாக இருப்பதுடன், தெளிவாகவும் உள்ளதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். அல்லாஹ் அவருக்கும் அவருடன் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றிட அருள்வளம் பொழிவானாக! எனப் பிரார்த்திக்கிறேன்.
நகர்மன்றத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இதன் மூலம் அவர்களுக்கு பயன் ஏற்படும் என நம்புகிறேன்.
உங்களுக்கு வழங்கப்பட்ட இப்பொறுப்பு அல்லது இப்பதவி ஏக இறைவனால் அளிக்கப்பட்ட ’அமானத்’ (கையடைப் பொருள்) என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இப்பதவி உங்களை அலங்கரித்துக்கொள்வதற்காக அல்ல. மாறாக, மக்களை நீங்கள் அலங்கரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே...
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றினார்கள் எனும் வரலாற்றை நீங்கள் அவசியம் படித்துணர வேண்டும். அவற்றில் நமக்கு ஏராளமான படிப்பினைமிகு சம்பவங்கள் உண்டு. உண்மையை உரத்துப் பேசினார்கள். பொய்மையைப் பொசுக்கித் தள்ளினார்கள்.
நீதி, நேர்மை, நியாயத்திற்காக சற்றும் தயங்காமல் முழங்க வேண்டும். அது நமக்கு நெருக்கமானவர்களாக இருப்பினும் சரியே... அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
ஒரு சாரார்மீது (உங்களுக்கு) ஏற்பட்ட பகைமையானது, எல்லை மீறி நடப்பதற்கு உங்களை ஒருபோதும் தூண்டிவிட வேண்டாம். நன்மைக்கும் இறையச்சத்துக்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்துக்கும் எல்லை மீறலுக்கும் துணைபோய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். (அல்குர்ஆன், 5:2)
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை, (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்தங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன், 5:8)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை நீங்கள் மக்கள் பணியாற்றுவதற்குத் தாரக மந்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
மக்கள் பணியில் ஈடுபடுகின்றபோது உங்களை புகழ்ச்சிகளும் வந்தடையும். இகழ்ச்சிகளும் வந்தடையும். அவற்றை மிக நிதானமாகவும் சாதுர்யத்தோடம் எதிர்கொள்ள வேண்டும். புகழில் மயங்கிவிடாதவாறு நடந்துகொள்வது மிகவும் முக்கியமானதொரு அம்சம். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மெத்தனப் போக்கும் வரவேற்கத் தக்க செயலன்று.
”நம் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், நம் வாக்கிலும், நம் செயலிலும் அது பிரதிபலித்து, அதன் மூலம் நமதூருக்கு நல்ல வழி உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை” என்ற தங்களது உரை வீச்சில் உள்ளதோர் அம்சம். அல்லாஹ் அதை கபூல் செய்வானாக.
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாக வேண்டுமென்றால் ‘இறையச்சம்’ எனும் தக்வா மேலோங்கியதாக இருக்க வேண்டும். இறையச்சத்தை மேலோங்கச் செய்ய அடிப்படைக் கடமைகளான வணக்க வழிபாடுகளிலிருந்து ஒருபோதும் நழுவிவிடக் கூடாது. அவற்றில் நழுவுகின்ற உள்ளங்கள், நிச்சயமாக இறைவனால் உதாசீனப்படுத்தப்பட்ட இறையுதவி கிட்டாத உள்ளங்களாக மாறிவிடும். இது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.
கடந்த கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும்போது, ”அவர்கள் பகலில் குடிமக்களுக்காக உழைத்தார்கள்; இரவில் இறைவனை நினைத்து அழுது தொழுதார்கள்“. அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிட்டியது.
வரலாறு படைத்த மனிதர்களின் வரலாறு நமக்கு ஒரு பாடத்தை எடுத்துச் சொல்லும்: சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர் என்பது வெற்றி வரலாற்றுக்குச் சொந்தமானவர்களின் பின்னணி.
நீங்கள் தேர்தல் காலங்களில் சந்தித்த சோதனைகளைவிட இனி எதிர்வரும் காலங்களில் நகர்மன்றத் தலைவராக பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும். அந்த சோதனைகளையெல்லாம் சாதனைக்கான படிக்கட்டுகளாக எண்ணி, அதை பொறுமையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.
உங்கள் வாழ்வில் இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க இறையை அதிமதிகம் நினைவுகூர்வதுடன் இறைமறையுடனும் உங்கள் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் இம்மைக்கும் வெற்றி மறுமைக்கும் வெற்றி.
رَبَّناَ آتنا فى الدنيا حسنة وفى الآخرة حسنة وقنا عذاب النار
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross