குழுப்பணி (Team Work) ஆற்றி, நல்லதொரு நகர்மன்ற நிர்வாகத்தை நகர மக்களுக்கு வழங்குவோம் என, கடந்த 22.10.2011 அன்று, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற - புதிய நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா பேசினார்.
அவரது உரை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
இந்த புதிய நகர்மன்ற திட்டமிடல் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, நல்ல பல ஆலோசனைகளைத் தரக் காத்திருக்கிற - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவியர் நாச்சி தம்பி, அ.வஹீதா அவர்களே! நகர்மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று வந்திருக்கின்ற எனது மரியாதைக்குரிய சகோதர, சகோதரிகளே! என்றும் எனது மதிப்பிற்குரிய அனைத்து சமுதாய பெரியோர்களே...
நல்லவை நடக்க வேண்டும்... அல்லவை அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையில் எந்தவொரு பாகுபாடோ, வேறுபாடோ பாராமல் ஒன்றுபட்டு உழைத்து, உண்மையை மட்டும் விரும்பும் - நன்மையை நாடும் நல்ல உள்ளங்களே! உங்களனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!
இறைவனுக்கு நன்றி...
நடைபெற்று முடிந்துள்ள நகராட்சித் தேர்தலில் நம் நகரின் அனைத்து மக்கள் மூலமாக மகத்தான தீர்ப்பைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்... அல்ஹம்துலில்லாஹ், தேங்க் யூ அல்லாஹ்!
நான் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் மனமுவந்து வழங்கிய அனைத்து மக்களுக்கும் முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரபட்சமின்றி பணியாற்றுவோம்...
நகராட்சி தலைமை மற்றும் உறுப்பினர் பொறுப்பேற்று நுழைகின்ற அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த நாம், தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஊரின் ஒட்டுமொத்த நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒன்றுபட்டு கடமையாற்றினால், நமதூரை அனைத்து நகரங்களுக்கும் முன்மாதிரி நகரமாக்கிக் காட்ட இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் உண்மையாகப் பிறக்க வேண்டும்.
உளத்தூய்மை...
நம் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், நம் வாக்கிலும், நம் செயலிலும் அது பிரதிபலித்து, அதன் மூலம் நமதூருக்கு நல்ல வழி உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
நமதூர் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக நகராட்சிக்குள் செல்கின்ற நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வைக் கூற விரும்புகிறேன்...
முன்மாதிரி தமிழர்...
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு கிராமத்தில் பிறந்த தமிழர் ராஜன். இவர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஏதோ ஒரு நாட்டில், எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த உங்களுக்கு இந்தப்பதவி எப்படி கிடைத்தது?” என அவரிடம் கேட்கப்பட்டது.
“என் மீது மற்றவர்களின் விமர்சனங்கள் எதுவானாலும், அது எப்படிப்பட்டதானாலும் அதை இயல்பான ஒன்று என்றே எடுத்துக்கொள்வேன்...
நமக்கெதிராக செயல்படுபவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என எப்போதும் நினைப்பேன்...
எனக்கெதிராக யாரேனும் செயல்படும்போது உணர்ச்சிவசப்படாதிருப்பேன்...
எதிராக செயல்படுவோர் பற்றி என்னிடத்தில் மற்றவர்கள் குறைகூறும்போதும் கூட அவற்றைக் காது கொடுத்துக் கேட்காதிருப்பேன்...
எதிராக செயல்படுவோரிடம் எனது சுய கவுரவத்தைப் புறந்தள்ளிவிட்டு, நானாகவே நேரில் சென்று பேசுவேன்...
எதிராக செயல்படுவோருக்கு இயன்றளவு என்னாலான உதவிகளைச் செய்வேன்...
அவர்களின் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்பேன்... அவர்களின் திறமைகளை அங்கீகரிப்பேன்...
இவ்வாறெல்லாம் செய்படுவது நான் எடுத்துக்கட்டி செய்யும் காரியமல்ல... மாறாக, இயற்கையாகவே எனக்கு அப்படி செய்ய வேண்டும் என்ற மனது அமைந்துவிட்டது.
நேர்மை, கடும் உழைப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்...
அனைத்து தரப்பு மக்களிடமும் எந்தவொரு பாகுபாடோ, பாரபட்சமோ பாராமல் ஒற்றுமையாகப் பழகுவேன்...
என நாம் ஒவ்வொருவரும் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டிய முத்தான கருத்துக்களை உதிர்த்துள்ளார் அந்த அமெரிக்க தமிழர்.
மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்பட வேண்டும்...
அன்பிற்குரியவர்களே... நகர்மன்றத் தேர்தல் மூலம் தமது பிரதிநிதிகளாக நம்மைத் தேர்ந்தெடுத்துள்ள மக்கள், நம்மை அவர்கள் வீட்டு சொந்தப் பிள்ளைகளாக... நம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னிற்பவர்களாக... அவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் உறுதிமிக்கவர்களாகப் பணியாற்றுவார்கள் என்ற அபரிமிதமான நம்பிக்கையோடும், மனம் நிரம்பிய எதிர்பார்ப்புகளோடும்தான் நம்மை இந்த ஐந்தாண்டு கால அளவைக் கொண்ட பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நாமும், நமது பிரச்சார காலங்களில் அவர்களிடம் வாயாற பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளோம்...
கால நிர்ணய அடிப்படையிலான செயல்திட்டம்...
நமது நகர்மன்றத்தின் மூலம் மக்களுக்கு நாம் செய்ய நினைக்கும் செயல்திட்டங்களை நல்ல முறையில் திட்டமிட்டு, தகுந்த கால அளவை நிர்ணயித்து, அதன்படி நிறைவேற்றித் தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்...
அனைவரின் ஒத்துழைப்பு...
ஊழலற்ற சிறந்த உள்ளாட்சி அமைந்திட மிகவும் அவசியமானது சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு... சிறந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு... சிறந்த அலுவலர்களின் ஒத்துழைப்பு... பொதுநல அமைப்புகளின் சிறந்த ஒத்துழைப்பு... சிறப்பான பொதுமக்களின் ஒத்துழைப்பு...
இவையனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட்டால் மட்டுமே ஒரு சிறந்த நகர்மன்றத்தை இன்ஷாஅல்லாஹ் நாம் மக்களுக்கு வழங்கிட இயலும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
முதல்வரின் பொன்மொழி...
“உள்ளாட்சி அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் தொடக்கப்பள்ளிகள்” என்ற நம் தமிழக முதல்வரின் அமுத மொழியை மனதிற்கொண்டு, சிறப்புற செயலாற்றினால் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை நாம் பெற்றிடலாம்...
குழுப்பணி அவசியம்...
நான் இதுவரை சொன்ன அனைத்தையும் குறைவின்றி நிறைவேற்ற வேண்டுமானால், வெறும் தலைவர் மட்டுமோ, அல்லது உறுப்பினர்கள் மட்டுமோ செய்ய நினைத்தால் முடியாது. அது நமது குழுப் பணியாக - டீம் ஒர்க்காக இருக்க வேண்டும்.
நீங்கள் புரிந்துகொள்வதற்காக நான் இங்கு ஓர் அம்சத்தை விளக்கிக் கூறுகிறேன்...
நமதூரில் நிறைய நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட தேதி அத்தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் மக்கள் பார்வைக்காக எழுதி வைக்கப்பட வேண்டும்.
இப்போது, ஒரு தொட்டியை சுத்தம் செய்ய நகர்மன்றத் தலைவராக நான் உத்தரவிட்டு விடலாம்... ஆனால் அதை அதிகாரிகள் சிரமேற்கொள்ள வேண்டும்... அதற்கான ஊழியர்களை உடனடியாக அனுப்ப வேண்டும்... அந்த ஊழியர்கள் அவற்றை சரிவர சுத்தம் செய்ய வேண்டும்... அப்பகுதியைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் அப்பணியை மேற்பார்வையிட வேண்டும்... அங்குள்ள பொதுமக்கள் சுத்தப்பணி நடந்ததற்கு சாட்சிகளாக இருக்க வேண்டும்...
இத்தனையும் ஒருசேர அமைந்தால்தான் ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் திட்டம் நிறைவேறும். இப்படித்தான் நகர்மன்றத்தின் ஒவ்வொரு பணியும்.
எனவே, நம்மை நம்பியிருக்கிற அனைத்து சமுதாய மக்களின் நன்னலன் கருதி இவற்றை நாம் கருத்திற்கொண்டு செயல்படுவோம்... ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...
நமது காயல்பட்டினம் நகராட்சியை நம் யாவரின் குழுப்பணி மூலம் தமிழகத்திற்கே... ஏன், இந்தியாவிற்கே முன்மாதிரி நகராட்சியாக்கிக் காட்டுவோம்...
வல்ல இறைவன் அதற்குத் துணை செய்வானாக...
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா உரையாற்றினார். இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் (06, 11, 12, 15 ஆகிய வார்டு உறுப்பினர்களைத் தவிர) அனைத்து உறுப்பினர்களும், முன்னாள் தலைவியரான கே.எம்.இ.நாச்சி தம்பி, அ.வஹீதா ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த நகரின் அனைத்துப் பகுதி பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்.
படங்கள்:
செய்யித் இப்றாஹீம். |