கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு, நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில் இன்றிரவு பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நகரில் இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக ‘மெகா‘ அறிவித்துள்ளது. இதுகுறித்து, ‘மெகா‘ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!
காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டி, இன்றிரவு 07.00 மணிக்கு நமது நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில் நடத்தப்படவிருந்த பாராட்டு விழா பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
நகரில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாலும், நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நமதூரில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வருவதன் காரணமாகவும், இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர்,
நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா),
காயல்பட்டினம். |