கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசைப் பகுதிகள் பெரும்பாலும் மூழ்கியுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்மன்றத் தலைவர் ஆபிதா 26.10.2011 முதல் பார்வையிட்டு வருகிறார்.
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் அமைந்துள்ள பெரிய சதுக்கை வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்த வளாகத்தில்தான் துணை அஞ்சலகமும் அமைந்துள்ளது.
பெரிய சதுக்கையையொட்டி குத்பா பெரிய பள்ளிவாசலுக்குச் செல்லும் லெப்பப்பா தர்ஹா அமைந்துள்ள குறுக்குச் சாலையில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளதால், தேங்கிய மழை நீர் வற்றாமல், அப்பகுதி போக்குவரத்தை துண்டித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நகர்மன்றத் தலைவர் ஆபிதா 26.10.2011 அன்று மாலை 05.30 மணியளவில் அப்பகுதியைப் பார்வையிட்டார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்தன்று அச்சாலை வழியாகவே பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளதாகவும். அந்நாளில் காலை நேரத்தில் பம்ப் செட் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தித் தருமாறும், இனி வருங்காலங்களில் சிமெண்ட் சாலை போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென்றும் அப்போது பொதுமக்கள் நகர்மன்றத் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.
பெரிய குத்பா பள்ளிக்குச் செல்லும் லெப்பப்பா சாலையில் தேங்கியுள்ள நீரை ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையன்று அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிமெண்ட் சாலை இதர கோரிக்கைகளை அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு மனுவாக அளித்து, அவர் மூலம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும், நகர்மன்றத் தலைவராக தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து மக்கள் சிரமத்தைப் போக்கிட ஆயத்தமாக உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். |