காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களான தேவராஜ் (ஆங்கிலம்), எம்.ஏ.புகாரீ (வணிகவியல்) மற்றும் ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் ஆகியோர் அண்மையில் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுள், ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் உடல்நிலை சரியின்மை காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி வழியனுப்பும் முகமாக, கடந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எல்.டி.இப்றாஹீம் முன்னிலை வகித்தார். அரபி மொழி ஆசிரியர் ஜுபைர் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியர் தேவராஜ் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... சுமார் முப்பது ஆண்டு காலம் இப்பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள அவர், நானறிந்த வரை வகுப்பிற்கு ஒருபோதும் தாமதமாகச் சென்றதில்லை...
அதுபோல, வகுப்பறையிலுள்ள ஆசிரியர் நாற்காலியிலோ, தேர்வு நடக்கும் அறையிலுள்ள் பார்வையாளர் நாற்காலியிலோ அவர் அமர்ந்து பணியாற்றியதாகவும் நான் ஒருபோதும் கண்டதில்லை... தனது பொறுப்பை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றியவர் அவர்...
தலைமையாசிரியராக எனது கடமையை ஆற்றுவதற்கு மனதில் எந்த வேறுபாடும் காண்பிக்காமல் அவர் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.
அதுபோல, ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்கள், 1978ஆம் ஆண்டு சிறிய ஊதிய அடிப்படையில் Vocational Group ஆசிரியராக பணியில் இணைந்தார். 1989ஆம் அண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியரானார். நான் இப்பள்ளியில் ஆசிரியராக வருவதற்கு முன்னரே இவர் ஆசிரியராகிவிட்டார்.
பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா, விளையாட்டு விழா, ஒரு காலத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த மீலாத் விழா என எந்த விழாவானாலும் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை ஏவாமலேயே தானாக முன்வந்து செய்து தந்தவர்... எனது நீண்ட நாள் நண்பர்...
இப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த திரு.ஞானய்யா அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர், அடுத்து நான் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டேன். அக்காலத்தில், ஆசிரியர் குழுமத்திற்குள் மனவேற்றுமையை ஏற்படுத்த சிலர் முனைந்தபோது, அவர்களின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, அன்று முதல் இன்று வரை தலைமையாசிரியராக எனது பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருபவர்...
பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர்களுக்கிடையில் ஒரு இணைப்புப் பாலமாக இருந்து செயலாற்றியவர்...
அடுத்து, ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் அவர்கள் இப்பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட பின்னர் சிறிது காலம் மட்டுமே பணியாற்ற முடிந்தது. அவரால் வகுப்பில் பாடம் நடத்த இயலாத அளவுக்கு தொண்டை பாதிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் மருத்து விடுப்பில் இருந்தவர்...
எனினும், உடல்நிலை சரியாகி மீண்டும் பாடம் நடத்த வருவார் என ஆவலோடு நாம் எதிர்பார்த்திருந்தோம்.. ஆனால் இறைவன் நாடவில்லை. எனவே அவர் பணி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ஓய்வுபெற்றுள்ள ஆசிரியர்கள் மூவரும் தமது எஞ்சிய வாழ்நாளை தம் குடும்பத்தாருடன் மனநிம்மதியோடு கழித்திட நான் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்...
இவ்வாறு தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.
அடுத்து, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை உரையாற்றினார்.
ஆசிரியர் தேவராஜ் அவர்கள் தனது பணியில் மிகுந்த கண்டிப்புடன் கடமையாற்றியவர்... தனது சொந்தப் பிரச்சினைகள் எதையும் பணியில் ஒருபோதும் காண்பிக்காதிருந்தவர்...
இயற்கையிலேயே இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர் என்பதால், தமிழ் மொழியில் பேச வராத காலகட்டத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்த இவரிடம் கற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியைப் பெற முடிந்தது.
அடுத்து, உடல் நலக் குறைவால் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ஆசிரியர் புகாரீ அவர்கள் இப்பள்ளியில் மிகுந்த ஈடுபாட்டுடன் அனைத்து காரியங்களையும் செய்து தந்து, நிர்வாகத்திற்கு உற்ற துணையாக இருந்தவர்... எனது பெரியப்பா ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி என்ற எல்.கே.அப்பா அவர்கள் காலத்தில், அவர்களால் பணியமர்த்தப்பட்ட கடைசி ஆசிரியர் புகாரீ சார்தான்.
ஓய்வுபெறும் ஆசிரியர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன்...
இவ்வாறு டாக்டர் முஹம்மத் லெப்பை உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, சக ஆசிரியர்கள் செய்யித் அஹ்மத், முஸ்தஃபா, டேவிட் செல்லப்பா, முன்னாள் மாணவர்கள் சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் சார்பில் தங்க நாணயம் வழங்கப்படுவது வழமை. அந்த அடிப்படையில், அடுத்து ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஆசிரியர்கள் டேவிட் செல்லப்பா, ஜெபராஜ் ஆகியோர், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பள்ளி ஆசிரியர் சிரோன்மணி, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பள்ளியின் சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசுகளை பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி காக்கா, எல்.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் வழங்கினர்.
நிறைவாக, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். துவக்கமாக ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் உரையாற்றினார். அடுத்து ஆசிரியர் தேவராஜ் ஏற்புரையாற்றினார்.
1979ஆம் ஆண்டில், எல்.கே.அப்பா அவர்களின் காலத்தில் நான் இப்பள்ளியில் ஆசிரியராக இணைந்தேன். எல்.கே.அப்பா அவர்களின் நிர்வாகம் ஓர் அருமையான நிர்வாகம். அவர்களின் காலத்தில் நியமிக்கப்பட்ட மூத்த ஆசிரியர்களில் நானும், என்னுடன் ஓய்வு பெறும் புகாரீ சாரும், அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள தலைமையாசிரியர் ஹனீஃபா சாரும் மட்டுமே எஞ்சியவர்கள்.
அப்போது தலைமையாசிரியராக இருந்த திரு.ஞானய்யா அவர்கள், Our school is second to none என்று அடிக்கடி சொல்வார். அது இன்றளவும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அன்று ஒரு வகுப்பில் 71 பேர் இருந்தனர். என்றாலும் Pin drop silence என்று சொல்லுமளவுக்கு அமைதி நிலவும். ஆனால் இன்றோ, மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அன்று போலில்லாமல், இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒருபுறம் அதிகமாகிக்கொண்டே செல்ல, மறுபுறம் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது மிகவும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை நான் விடைபெறும் இந்த நேரத்திலும் வேதனையுடன் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இம்மாணவர்களை அன்றிருந்த மாணவர்கள் போல மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதற்கும் மேலாக, பணியாற்றும் ஆசிரியர்கள் தமது பொறுப்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும், கடமையுணர்வுடனும், நேர்மையுடனும் பணியாற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இவ்வாண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளிவரும்போது நான் மீண்டும் இங்கு வருவேன்... மாணவர்களின் முன்னேற்றத்தையும், அதற்கு ஆசிரியர்கள் அளித்த உழைப்பையும் நிச்சயம் பார்க்கும் ஆவலோடு வருவேன்...
“கேரளாவிலிருந்து இங்கு வந்து நீங்கள் பணியாற்ற காரணமென்ன?” என்று என்னைக் கேட்டவர்கள் உண்டு. அதற்கு ஒரே காரணம், இங்கு லஞ்சம் பெறாமல் நான் பணியமர்த்தப்பட்டதுதான். இப்பணியில் நான் நிலைத்ததற்குக் காரணம், இப்பள்ளி நிர்வாகிகளின் தன்னலமற்ற குணநலன்கள்தான்.
நான் இப்பள்ளியில் ஆசிரியராக இணைந்தபோது மலையாளம் மட்டுமே எனது தாய்மொழியாக இருந்தது. இன்று நான் ஓய்வுபெற்று உங்களுடன் விடைபெறும் இப்பொழுதில், தமிழையும் இணைத்து இரண்டு தாய்மொழிகளைக் கொண்டவனாக வெளியாகிறேன்.
என்னை வாழ வைத்த இப்பள்ளியையும், இந்த ஊரையும் நான் ஒருபோதும் மறவேன்.
இவ்வாறு ஆசிரியர் தேவராஜ் உரையாற்றினார்.
அடுத்து, ஓய்வுபெறும் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ ஏற்புரை வழங்கினார்.
பெருமதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய தாளாளர் அவர்களே... ஆட்சி மன்ற உறுப்பினர்களே... பாசமிகு தலைமையாசிரியர் அவர்களே... என்னுடன் பணியாற்றிய அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே... அலுவலக சகோதரர்களே... உங்களனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், ஸலாமையும் தெரிவித்து மகிழ்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்தும் படைத்துக் காக்கின்ற எல்லாம்வல்ல இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இப்பள்ளியில் 33 ஆண்டு காலம் உடல் ஆரோக்கியத்தோடு பணியாற்றி முடிக்க அருள் புரிந்த அந்த வல்லோனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி, எனது ஏற்புரையை துவங்குகிறேன்...
வரலாற்று சிறப்புமிக்க இந்த காயல் பதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் “காயலில் கல்லாமை இல்லாமை” ஆக்க வேண்டும் என்ற உயர்ந்த - உன்னதமான நோக்கத்தோடு துவக்கப்பட்ட நமது எல்.கே.பாடசாலை, நமதூருக்கும், நமது மாவட்டத்திற்கும் மிகப்பெரிய புகழை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
எல்.கே.பாடசாலை எனும் மிகப்பெரிய ஆலமரத்தின் நிழலிலே வந்தமர்ந்து, அதன் கல்வியறிவென்னும் கனிகளை உண்டு மகிழ்ந்து, சாதனையாளர்களாகப் பறந்து சென்றோர் பலர். அந்த ஆலமரத்தின் நிழலில் வந்தமர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை எண்ணிப்பார்த்து பேருவகையடைகிறேன்...
மாணவனாக எனக்கு 1960இலிருந்து 1971 வரை 11 ஆண்டுகள் அடித்தளக் கல்வியை எனக்கு அமுதாய் ஊட்டியது இப்பள்ளி...
அடுத்து, கல்லூரிப் படிப்பை முடித்து நான் வெளிவந்தபோது, அம்மரம் தாயன்போடு மீண்டும் என்னை அரவணைத்து, “நீ எங்கும் செல்ல வேண்டாம்! என் அன்பிணைப்பில் பிணைந்திடு!!” என்று நான் கற்ற பள்ளியிலேயே என்னை ஆசிரியராக நியமித்து, 1978இலிருந்து, இன்று 2011 வரை அழகு பார்தது.
அத்தோடு நின்றுவிடாமல்,
முன்னாள் மாணவர் மன்ற உதவிச் செயலாளராக...
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக...
ஆசிரியர் - மாணவர் கூட்டுறவு பண்டகசாலை செயலாளராக...
சுற்றுலா அமைப்பாளராக...
சாலைப் பாதுகாப்புப் படை பொறுப்பாசிரியராக...
எஸ்.எஸ்.எல்.சி. அரசுப்பொதுத் தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக...
கலை, இலக்கிய போட்டிகளின் அமைப்பாளராக...
பள்ளித் தேர்வுகள் நடத்தும் பொறுப்பாசிரியராக...
அசெம்ப்ளி கன்வீனராக...
தலைமையாசிரியர் பொறுப்பு பணியாளராக...
பள்ளி விளையாட்டு விழா - ஆண்டு விழாக்களில் பரிசுப்பொருள் பொறுப்பாசிரியராக...
இலக்கிய மன்ற அமைப்பாளராக...
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக...
சிறந்த பேச்சாளராக... பாடகராக...
இன்னும் எப்படியெப்படியெல்லாம் என்னை உருமாற்றி - உயர்வாக்கியது இப்பள்ளி...? இதனை என்னால் மறக்க முடியுமா...? (கண்ணீர் விட்டு கதறியழுகிறார்...)
இதற்கு வழிகாட்டியவர்களையும், ஆர்வமூட்டி ஆதரித்தவர்களையும் இந்நேரத்தில் நினைவுகூர்வது எனது நன்றிக்கடனாகும். அந்தப் பெருமக்கள்,
மர்ஹூம் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி அவர்கள்,
மர்ஹூம் ஹாஜி ஏ.கே.செய்யித் அஹ்மத் அவர்கள்,
மர்ஹூம் ஹாஜி கே.எம்.இஸ்மத் அவர்கள்,
ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள்,
மர்ஹூம் ஜனாப் எல்.கனி காக்கா அவர்கள்... மற்றும்
தற்போதைய தாளாளர் ஜனாப் டாக்டர் முஹம்மத் லெப்பை அவர்கள்,
தலைவர் ஜனாப் டாக்டர் முஹம்மத் அஷ்ரஃப் அவர்கள்...
முன்னாள் தலைமையாசிரியர் திருமிகு டி.ஞானய்யா அவர்கள்...
இந்நாள் தலைமையாசிரியர் ஜனாப் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அவர்கள்...
இவ்வனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
என்னுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் - இந்நாள் சக ஆசிரியர்கள், சக அலுவலர்கள் என் மீது காட்டிய அன்பை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை...
அன்பார்ந்த சகோதரர்களே!
உங்களிடமிருந்து பிரியாவிடை கேட்கின்ற இத்தருணத்தில், பிரிவைத் தாங்கிக்கொள்ள எனது இதயத்தை சற்று கல்லாக்கிக்கொள்ள முயல்கின்றேன்... ஆனால் முடியவில்லை. (மீண்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்...)
உங்களின் அளப்பரிய அன்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... ஒத்துழைப்பு வழங்கிய என் அன்பிற்குரிய முன்னாள் மற்றும் இந்நாள் மாணவமணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மாணவனாக 11 ஆண்டு காலம்...
ஆசிரியராக 33 ஆண்டு காலம்...
மொத்தம் 44 ஆண்டுகள் இப்பள்ளியோடு உண்டான தொடர்பு, ஓய்வு எனும் உருவத்தில் வந்து விடை தர துடிக்கிறது... காலம் சுழலத்தான் செய்கிறது....
“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய்”
என்ற வள்ளுவனின் வாய்மொழிச் சொல்லுக்கேற்ப, நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய பெருமைகளையும், பாராட்டுகளையும், கவுரவிப்புகளையும், மரியாதைகளையும் என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு எனதன்புக் காணிக்கையாக்குகிறேன்...
இறுதியாக, உங்களனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொண்டு, ஓய்வுபெறும் எங்களது நீண்ட ஆயுளுக்காகவும், நிறைவான சுகத்திற்காகவும், எங்கள் கல்விச் சேவை மென்மேலும் தொடர்வதற்காகவும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு, எனது ஏற்புரையை இத்துடன் நிறைவுசெய்கிறேன்.
வ ஆகிர் தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்...
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இவ்வாறு ஆசிரியர் எம்.ஏ.புகாரீ உரையாற்றினார்.
அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாளாளர், நிர்வாகக்குழு அங்கத்தினர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, பள்ளியிலிருந்து அவர்களின் இல்லம் வரை சென்று வழியனுப்புவது இப்பள்ளி ஆசிரியர்களின் வழமை. அந்த அடிப்படையில், துவக்கமாக உள்ளூர் ஆசிரியர்களான எம்.ஏ.புகாரீ, ப்ரின்ஸ் ஐஸக் ஆகியோர் அவர்களின் இல்லம் வரை சென்று வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் ஆசிரியர் குழுவினர், ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவராஜ் அவர்களின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு ஒருநாள் சுற்றுலா சென்றனர். அங்கு, ஆசிரியர் இல்லத்தில் உணவருந்திய அவர்கள், அந்நகரிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இன்பமாக பொழுதைக் கழித்தனர்.
சுற்றுலா சென்ற ஆசிரியர் குழுமத்துடன், பள்ளி முன்னாள் மாணவர் மூஸா என்ற கட்டா காக்காவும் உடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:-
ஆசிரியர் தேவராஜ்: +91 94428 34766
ஆசிரியர் எம்.ஏ.புகாரீ: +91 98427 89817
தகவல் & படங்களில் உதவி:
அஹ்மத் மீராத்தம்பி,
இளநிலை ஆங்கில ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |