காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நான்காவது வார்டுக்குட்பட்ட குறுக்கத் தெருவில் உள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட குப்பை மேட்டை நகராட்சி மூலம் அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் அவ்விடத்தில் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைத்துத் தர ஆயத்தமாக உள்ளதாக, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா தெரிவித்துள்ளார்.
27.10.2011 அன்று, நகர் முழுக்க மழை நீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிடுவதற்காக, நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், ஃபிட்டர் நிஜார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுடன் சென்றிருந்த நகர்மன்றத் தலைவர் ஆபிதாவை, 04ஆவது வார்டுக்குட்பட்ட குறுக்கத் தெருவில் உள்ள குப்பை மேட்டைப் பார்வையிட வருமாறு அந்த வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அழைத்தார்.
அதனடிப்படையில் அங்கு அவர்கள் சென்று பார்வையிட்டபோது, “சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்த குப்பை மேட்டை நகராட்சி சார்பில் அகற்றித் தந்தால், நான் சார்ந்துள்ள கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில், அவ்விடத்தில் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்க ஆயத்தமாக உள்ளோம்” என கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, நகர்மன்றத் தலைவர் ஆபிதா மற்றும் சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் ஆகியோரிடம் தெரிவித்தார்.
கே.வி.ஏ.டி. அறக்கட்டளை அறங்காவலர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜஹாங்கீர், அந்தோணி, பத்ருல் ஹக், அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். |