தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) சார்பில் அண்மையில் முன்மொழியப்பட்ட - நகர இமாம், பிலால்களுக்கான வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இணைந்து செயல்படுவதென சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 14.10.2011 அன்று 19.45 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். உறுப்பினர் ஹஸன் மவ்லானா கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
கூட்டங்களில் உறுப்பினர்கள் வருகையின் அவசியம்:
அதனைத் தொடர்ந்து, இனி வருங்காலங்களில் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை மெருகேற்றி, இன்னும் சிறப்புற நடத்துவது குறித்து உறுப்பினர்கள் நீண்ட நேரம் கருத்துப்பரிமாற்றங்கள் செய்தனர். இறுதியில், குறிப்பிட்ட கால நிர்ணயப்படி முற்கூட்டியே திட்டமிட்டு, மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொண்டால் மட்டுமே ஆரோக்கியமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, நகர்நலனுக்காக நல்ல செயல்திட்டங்களை வகுத்திட இயலும் என்றும், எனவே உறுப்பினர்கள் எந்த வேலை இருந்தாலும் ஒத்தி வைத்துவிட்டு, மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்வதை தலையாயப் பொறுப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் ஆகியோர் வலியுறுத்திக் கூறினர்.
செயலர் அறிக்கை:
பின்னர், கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகளை மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
வீடு புணர்நிர்மானம்:
அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஏழை ஒருவரின் வீடு புனர்நிர்மாணப் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் துவங்கும் என்றும், இது தொடர்பான நடவடிக்கைகளை மன்ற உறுப்பினர் ஹரீஸ், உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் இணைந்து உள்ளூரிலிருந்தவாறு மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை:
நகரில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடிக்கும் ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவலறிக்கையை நகரின் அனைத்து திருக்குர்ஆன் மனனப் பயிலகங்களுக்கும் (ஹிஃப்ழு மத்ரஸா) உள்ளூர் பிரதிநிதி மூலம் முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியம் நன்கொடையளித்தல்:
அடுத்து, மன்ற உறுப்பினர்கள் சிலரால் முன்மொழியப்பட்ட - ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியத்தை மன்றத்திற்கு வழங்கும் திட்டம் தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
வரவு - செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்ற பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் தாக்கல் செய்ய, செயற்குழு அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
கோரிக்கை மனுக்களுக்கான விசாரணைக் குழு:
மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்காக உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் குறித்து மன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மன்றத்திற்கு முறைப்படி அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அவ்வாறு பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில், மன்றத்தின் மருத்துவம் மற்றும் கல்வி உதவிக்குழு இறுதி முடிவு செய்யும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உண்டியல் சேகரிப்பு:
நகர்நல செயல்திட்டங்களை இன்னும் முனைப்புடன் செயல்படுத்துவதற்காக மன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின்படி, உறுப்பினர்களிடம் வழங்கப்பட்ட உண்டியல்களை சேகரித்து மன்றத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பை, உறுப்பினர் ரப்பானீ, அப்துல்லாஹ் ஆகியோரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. இப்பொறுப்பாளர்கள் 10.11.2011 தேதிக்குள் உறுப்பினர்களிடமிருந்து உண்டியல்களை வெற்றிடமின்றி சேகரித்து மன்றத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘தக்வா‘வின் இமாம் - பிலால் வருடாந்திர ஊக்கத்தொகை திட்டத்தில் இணைதல்:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், கடந்த ரமழான் மாதத்தில் முன்மொழியப்பட்ட - நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கான வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இணையக் கோரும் அம்மன்றத்தின் வேண்டுகோள் குறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இதுகுறித்து, சிறிது நேர விவாதத்திற்குப் பின்னர், இத்திட்டத்தில் இணைவதெனவும், இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்குவது என்பது குறித்து பின்னர் முடிவெடுப்பதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி:
மன்றத்தின் வருடாந்திர செயல்திட்டங்களில் ஒன்றான, நகரின் ஆதரவற்ற - ஏழை - உழைக்கவியலாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஹஜ் பெருநாளை அவர்கள் மகிழ்வுற கொண்டாடும் பொருட்டு, பெருநாளுக்கு முன்னர், 03.11.2011 முதல் 05.11.2011 வரை பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|