மழைக்காலங்களில் காயல்பட்டினம் மேற்குப்பகுதி, வடமேற்பகுதி ஆகிய பகுதிகளில் தேங்கும் நீர், தாயிம்பள்ளி வளாகத்தின் தென்பகுதியில், பெரிய நெசவுத்தெருவை நோக்கிச் செல்லும் குறுக்குச் சாலையில் அமைந்துள்ள மூப்பனார் ஓடை என்றழைக்கப்படும் ஓடை வழியாக கடந்து சென்று, சல்லித்திரடு வழியாக கடலில் கலக்கும்.
இந்த மூப்பனார் ஓடை, நெசவுத்தெரு ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளிவாசலின் கிழக்குப்பகுதி சுற்றுச்சுவரையொட்டி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மழைக் காலத்தின்போது இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டபோது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இப்பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
மூப்பனார் ஓடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவ்வழியே செல்லும் மழை நீர் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 27.10.2011 அன்று
நகரில் மழை நீர் தேக்கப்பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நகர்மன்றத் தலைவர் ஆபிதாவிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர்.
இந்த மூப்பனார் ஓடை அமைவிடத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் ஓடை வடிகால் பகுதியைப் பாதிக்காத அளவிலேயே கட்டப்பட்டுள்ளதாகவும், ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வந்த இந்த நடைமுறை பேணப்படாமல், ஓடை பாதையை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும் பொதுமக்கள் அப்போது தெரிவித்தனர்.
மூப்பனார் ஓடை தொடர்பான முழு விபரங்களைப் பெற்று, ஆய்ந்தறிந்த பிறகு, அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, நியாய அடிப்படையில் ஆவன செய்யப்படும் என அப்போது அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
தனியார் ஆக்கிரமிப்பு என்று ஒருபுறம் கூறப்படும் இந்த ஓடையின் உட்பகுதியை, சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்களே குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி வருவது வேதனைக்குரிய உண்மை.
|