கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஜித்தா காயல் நலமன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
நடந்து முடிந்த நம் காயல் நகராட்சி தேர்தலில் அனைத்து பகுதி மக்களின் அமோக ஆதரவைப் பெற்று நகர்மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா சேக் அவர்களுக்கு சவுதிஅரேபியா ஜித்தா காயல் நலமன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 நகர்மன்ற உறுப்பினர்களையும் எமது ஜித்தா காயல் நலமன்றம் உளமாற வாழ்த்தி பாராட்டுகிறது.
வல்லோனை முன்னிறுத்தி அவன் தூதர் வழிதனை பின்பற்றி நல்லாட்சி வழங்கிடவும், தேர்தல் வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றிடவும் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம்.
இந்த சீரிய பொறுப்பை ஏற்றிருக்கும் நீங்கள் நமது ஊர் மக்களின் இன்றியமையா தேவைகளை அறிந்து எல்லா தரப்பு மக்களையும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அரவணைத்து, கொள்கை, சமயம், அரசியல் என்ற எல்லா விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு பணியாற்றவும், பசுமையான, வளமான, சுகாதரமான நகரை உருவாக்கிடவும், ஊழலற்ற ஒரு உன்னதமான முன்மாதிரி நகராட்சியை அமைத்திடவும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் தாங்களை அன்போடு வேண்டுகிறது.
தாங்கள் நமதூர் முன்னேற்றத்திற்காக எடுக்கும் எல்லா நல்ல முயற்சிக்கும் திட்டங்களுக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் :
தலைவர்,செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்,
காயல் நல மன்றம், ஜித்தா.
|