நேற்று இரவு நடைபெற்ற புதிய நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா மற்றும் 14 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விபரம் பின்வருமாறு:-
தேர்தல் முடிவுகள்:
கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேரும், 18 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 86 பேரும் போட்டியிட்டனர். 21.10.2011 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக ஆபிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வார்டு 01 உறுப்பினராக ஏ.லுக்மான்,
வார்டு 02 உறுப்பினராக வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (போட்டியின்றி தேர்வு),
வார்டு 03 உறுப்பினராக பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
வார்டு 04 உறுப்பினராக முத்து ஹாஜரா,
வார்டு 05 உறுப்பினராக ஜஹாங்கீர்,
வார்டு 06 உறுப்பினராக ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
வார்டு 07 உறுப்பினராக அந்தோணி,
வார்டு 08 உறுப்பினராக பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
வார்டு 09 உறுப்பினராக ஹைரிய்யா,
வார்டு 10 உறுப்பினராக பத்ருல் ஹக்,
வார்டு 11 உறுப்பினராக எஸ்.எம்.முகைதீன்,
வார்டு 12 உறுப்பினராக ரெங்கநாதன் என்ற சுகு,
வார்டு 13 உறுப்பினராக எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
வார்டு 14 உறுப்பினராக பாக்கியஷீலா,
வார்டு 15 உறுப்பினராக ஜமால்,
வார்டு 16 உறுப்பினராக தைக்கா சாமு,
வார்டு 17 உறுப்பினராக அபூபக்கர் அஜ்வாத்,
வார்டு 18 உறுப்பினராக இ.எம்.சாமி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகர்மன்ற அங்கத்தினர் அறிமுகக் கூட்டம்:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் தமக்குள் அறிமுகம் செய்துகொள்ளும் பொருட்டும், தத்தம் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்திட்டங்கள் குறித்தும் கலந்து பேசி, புதிய நகர்மன்ற செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக, நகர்மன்றத் தலைவர் ஆபிதா சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்டம் 22.10.2011 சனிக்கிழமை (நேற்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை கேளரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவியர் நாச்சி தம்பி, அ.வஹீதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அழைப்பின் பேரில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகரின் அனைத்துப்பகுதி பிரமுகர்களும் இக்கூட்டத்தில் சங்கமித்திருந்தனர்.
கூட்ட நிகழ்வுகளை அப்துல் காதிர் நெய்னா நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அவரது உரை பின்வருமாறு:-
அன்பு சகோதர சகோதரிகளே,
எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிறைவாக நின்று நிலவட்டுமாக. நாம் பிறந்த மண்ணின் ஆட்சிப் பிரதிநிதிகளாக உங்களை நம் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். உங்களையும் உங்களுக்கு பக்கபலமாக நின்று தேவையான ஆலோசனைகள் வழங்கி வழி நடத்தவுள்ள நகரப் பிரமுகர்களையும் சகோதரி ஆபிதா ஷேக் அவர்கள் சார்பாக வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.
இறையருளால் நடந்து முடிந்த நமது நகர்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நகர்மன்றத் தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற நீங்கள் அனைவரும் உங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வல்ல இறைவன் அருள்புரிவானாக.
நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சொல்வதைவிட உங்கள் மீது புதிய பொறுப்புகள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எண்ணவேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் உங்களுடைய கடமைகளை இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும். மக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை அப்புறப்படுத்திய மனிதருக்கு இறைவன் நன்றி தெரிவிக்கிறான், அவருடைய பாவங்களையும் மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மக்களுக்கு பணி செய்வதை இறைவனும் இறைத்தூதரும் எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்பதை இந்தச் செய்தி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எனவே மக்களுக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளை எந்தவித பாகுமாடுமில்லாமல் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமையாக எண்ணி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரி ஆபிதா அவர்கள் நிறைய கனவுகளோடும், அவருடன் உழைத்த சகோதரர்களின் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த உங்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்நோக்கியவராகவும் தனது பொறுப்பை ஏற்க உள்ளார்கள். தனது திட்டங்களுடன், சக உறுப்பினர்களின் எண்ண ஓட்டங்களையும் தேவைகளையும் அறிந்து அதற்கேற்ப தனது செயல்பாடுகளை அமைத்து திறம்பட செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமாகிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புச் சகோதர சகோதரிகளே இந்த நகர்மன்றத்திடமிருந்து நகர மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர். எனவே வீண் அரசியலோ ஒருவருக்கொருவர் அணி சேர்த்துக் கொண்டு நமக்கிடையே போட்டி பொறாமை உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாமல், சகோதர வாஞ்சையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, மிகத் தேவையுள்ள பகுதிகளுக்கு அதிகம் செய்து, ஒரு சிறந்த முன் மாதிரியான நகராட்சி நிர்வாகத்தைத் தருவீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.
அன்புச் சகோதர சகோதரிகளே தேர்தல் காலத்தில் நிகழ்ந்துவிட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டு, நம்மிடையே சகோதர உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் இறைவனுடைய நாட்டப்படியே நடந்துள்ளது என்ற நம்பிக்கையோடு, தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து நகர்நலப் பணிகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை கொச்சைப் படுத்தும் விதத்தில் செயல்படாமல் மிகவும் வெளிப்படையான, ஊழலற்ற, செயலாக்கமிக்க ஒரு நிர்வாகத்தைத் தரவேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு அமர்கிறேன். நன்றி.
இவ்வாறு ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.
நகர்மன்ற முன்னாள் தலைவியரின் வழிகாட்டு உரை:
(அ) நாச்சி தம்பி:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் நாச்சி தம்பி வழிகாட்டு உரையாற்றினார்.
நகர்மன்றத் தலைவராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபிதா அவர்கள் பெரும் சோதனைகளைச் சந்தித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், மக்கள் உணர்வுகளை மதித்து, மக்கள் வேட்பாளராகப் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
நாங்கள் இந்த நகராட்சியில் அங்கம் வகித்த காலங்களில் பணம் சேர்ப்பதற்காக செல்லவில்லை. ஏதோ நம்மைக்கொண்டு நம் நகருக்கு நல்லது நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் சென்றோம். அதுபோல, தங்கை ஆபிதாவும் தனது பணியை நகர்நலனை முன்னிறுத்தி செய்திட வேண்டும்.
நம் நகரின் பெரும்பாலான முஸ்லிம் மக்களும், புறநகரில் வசிக்கும் அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் இவருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர்களிடையே எவ்வித பாரபட்சமும் இன்றி, நியாய அடிப்படையில் நடுநிலையோடு இவர் செயல்பட வேண்டும்.
அவ்வாறு இவர் செயல்படுவதற்கு எங்கள் ஆதரவையும், வழிகாட்டுதல்களையும் எப்போதும் வழங்கக் காத்திருக்கிறோம்.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு என் சார்பில் ஒரு முக்கிய வேண்டுகோள்...
நம் நகரில் சிமெண்ட் சாலை என்பது தேவையில்லாத ஒன்று. இந்த சாலைகளால் மழை நீர் மணலுக்குள் செல்லாமல் பல நாட்கள் சாலையின் மேற்பரப்பிலேயே தேங்கி, கொசுக்களை உற்பத்தி செய்கின்றன. அதுபோல நமது இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு பள்ளம் தோண்டும்போதும் இதர தேவைகளின்போதும் இந்த சிமெண்ட் சாலைகள் மிகவும் இடைஞ்சலாக அமைந்துவிடுகின்றன.
எனவே, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இனி வருங்காலங்களில் நம் நகரில் எந்தப் பகுதியில் புதிய சாலை அமைத்திட தீர்மானித்தாலும் அது தார் சாலையாக மட்டும் இருக்கட்டும். சிமெண்ட் சாலை நம் நகருக்கு வேண்டாம். இதை எனது அன்பான வேண்டுகோளாக உங்கள் முன் வைத்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் நாச்சி தம்பி உரையாற்றினார்.
(ஆ) அ.வஹீதா:
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா வழிகாட்டு உரையாற்றினார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயலாற்றிட இந்த get together மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தும் நகர்மன்றத் தலைவி மற்றும் அவருடன் இணைந்து நடத்தும் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
நான் நகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில், தினமும் நகர்மன்ற அலுவலகத்திற்குச் சென்று பணிகளைப் பார்வையிடுவேன். அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டிய நமதூருக்கான குடிநீர் வினியோகத் தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் பல்லாண்டு காலமாக சுத்தமே செய்யப்படாமல் இருந்தது. இந்நிலை எனக்கு முன் பணியாற்றிய யாருடைய கவனத்திற்கும் வராமலேயே போனது.
வெயில் காலங்களில் கெட்ட நாற்றத்துடன் தண்ணீர் வினியோகிக்கப்படுவதையறிந்து, அதற்கான காரணிகளைக் கண்டறியும் பொருட்டு எனது பணிக்காலத்தில் கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். நகர்மன்ற அளவில் இதற்கான தீர்வைக் காண இயலாத நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்தேன். அவர் தன் குழுவினருடன் வந்து பார்வையிட்டு, பல்லாண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் சேறும், சகதியுமாக இருந்த குடிநீர் வினியோகப் பகுதிகளைப் பார்வையிட்ட பின், இதனை நாம் மட்டும் சரிசெய்ய இயலாது என்று தெரிவிக்க, யாரைக் கொண்டு சரி செய்ய வேண்டுமோ அவர்களைக் கொண்டு சரிசெய்து தாருங்கள்! என்று நான் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இறுதியில், அவரது முயற்சியில் சென்னையிலிருந்து குழு வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதை நான் இங்கு ஏன் தெரிவிக்கிறேன் என்றால், இதுதான் நமது தலையாயப் பணி என்பதை நகர்மன்றத் தலைவி உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
இளமைத் துடிப்புடன் கூடிய இவரது செயல்பாடுகளால் நமது நகர்மன்றம் மென்மேலும் வளர்ச்சியடையட்டும். அதற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா உரையாற்றினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் கருத்துரை:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் வார்டு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்,
11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால்
ஆகிய நான்கு வார்டு உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து வார்டுகளின் உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
கருத்துரை வழங்குவதற்காக வார்டு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களது பெயர், தந்தை / கணவர் பெயர், தொழில், சமூக சேவையில் அவர்களது முன்னனுபவம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வார்டு 01:
துவக்கமாக, 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் உரையாற்றினார்.
01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது. இதற்கு நான் தகுதியானவன்தானா என்பதை நான் அறியேன்... இருப்பினும் என்னாலியன்ற அளவுக்கு சிறப்பாக எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்.
ஒன்றை மட்டும் நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்... நான் ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டேன்... பிறரை வாங்க விடவும் மாட்டேன்... இதை அல்லாஹ்வை முன்னிறுத்தி இக்கூட்டத்தில் வாக்குறுதியளிக்கிறேன்...
சுருக்கமாச் சொன்னால், எனக்கு முன் எங்கள் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பை அலங்கரித்த திருத்துவராஜ் அவர்களது பெயரைப் பாதுகாக்கும் விதமாக எனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்.
First ward is the best ward என்று அனைவரும் போற்றும் வகையில் எனது நகர்மன்றப் பணிகளை அமைத்திடுவேன்...
தலைவியின் கனவான ‘பசுமைக் காயல்‘ திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட என்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்குவேன்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 02:
அடுத்து இரண்டாவது வார்டு உறுப்பினராக போட்டியின்றித் தேர்வான வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா உரையாற்றினார். 02ஆவது வார்டுக்குட்பட்ட தனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றம் ஆகிய பணிகளுக்கு முன்னரிமை கொடுப்பதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
வார்டு 03:
அடுத்து, மூன்றாவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் உரையாற்றினார். 03ஆவது வார்டுக்குட்பட்ட தனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றம் ஆகிய பணிகளுக்கு முன்னரிமை கொடுப்பதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
வார்டு 04:
அடுத்து, நான்காவது வார்டு உறுப்பினர் முத்து ஹாஜரா உரையாற்றினார்.
நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவியின் அனைத்து நல்ல செயல்பாடுகளுக்கும் எனது முழு ஆதரவை அளிப்பேன்...
எனது வீட்டின் பின்புறமுள்ள குப்பைத் தேக்கத்தை அகற்றி, அதனை சிறுவர் பூங்காவாக மாற்றிட ஆவன செய்வேன்...
தெரு விளக்கு பழுதின்றி இயங்கவும், சீரான குடிநீர் வினியோகத்திற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். குறிப்பாக, குடிநீர் வினியோகத்தின்போது மின் வினியோகத்தைத் துண்டித்து, முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க ஆவன செய்திடுவேன்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 05:
அடுத்து, ஐந்தாவது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் உரையாற்றினார்.
நகர்மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிக்கடி வருவது குடிநீர் இணைப்பு பெற்றிட, வீடு வரைபட ஒப்புதல் பெற்றிட, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெற்றிட... இதுபோன்ற காரியங்களுக்காகத்தான்.
எனவே, இவ்வகையான காரியங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மக்கள் பார்வையில் படுமாறு தெளிவாக நகர்மன்றத்தில் அறிவிப்புப் பலகை நிறுவப்பட வேண்டும்...
இக்கட்டண நிர்ணயத்தைத் தாண்டி எந்த அலுவலராவது கட்டணம் வசூலிக்க முற்பட்டால், அதுகுறித்து புகார் அளிக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதையும் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்புப் பலகையாக நிறுவ வேண்டும்...
யாரும் லஞ்சம் வாங்கவும் கூடாது... யாரையும் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ விடவும் கூடாது! இதை நகர்மன்றத் தலைவர் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் எங்கள் முழு ஒத்துழைப்புகளையும் தர ஆயத்தமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 07:
ஆறாவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனவே, ஏழாவது வார்டு உறுப்பினர் அந்தோணி அடுத்து உரையாற்றினார்.
நகர்மன்ற உறுப்பினராக தனது அனைத்துப் பணிகளையும், மன்றத் தலைவியுடன் கலந்தாலோசித்தே மேற்கொள்வேன்... எனது செயல்பாடுகள் எதுவும் தன்னிச்சையாக இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வார்டு 08:
அடுத்து, எட்டாவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் உரையாற்றினார்.
என்னை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த என் வார்டு மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
எனது குணநலன்களில் நம்பிக்கை வைத்து, என்னை எனது வார்டுக்குட்பட்ட குருவித்துறைப்பள்ளி ஜமாஅத் பொது வேட்பாளராக அறிவித்தது. அவர்களின் அம்முடிவை எனது வார்டுக்குட்பட்ட மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி ஜமாஅத்துகள் ஆதரித்து தீர்மானமியற்றியதோடு, எனக்காக பிரச்சாரமும் செய்தது.
இத்தனை ஜமாஅத்துகளின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எனது அனைத்து செயல்பாடுகளையும் இந்த ஜமாஅத்துகளின் கலந்தாலோசனையின்படியே செய்வேன்.
ஒருபோதும் நானும் லஞ்சம் வாங்க மாட்டேன்... மற்றவர்களையும் வாங்க விட மாட்டேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 09:
அடுத்து, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா உரையாற்றினார்.
லஞ்சமற்ற - நேர்மையான நடவடிக்கைகளாக எனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்...
எனது பகுதி தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்...
எனது வார்டுக்குட்பட்ட ரெட் ஸ்டார் சங்க வளாகத்தை மக்கள் நலப் பணிகளாற்ற களமாகப் பயன்படுத்துவேன்...
என்னிடம் குறைகளிருப்பின், வெளியில் பேசாமல் என்னிடம் தெரிவித்தால், அதைப் புரிந்து செயல்படுவேன்...
ப்ளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக களப்பணியாற்றி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 10:
அடுத்து, பத்தாவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் உரையாற்றினார்.
எனது வார்டுக்குட்பட்ட பரிமார் தெரு மீன் மார்க்கெட்டை சுகாதாரமாகப் பராமரிக்க ஆவன செய்வேன்.. தினமும் அதை சுத்தப்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...
ஒருவழிப்பாதை மிகவும் அவசியம். அதைக் கருத்திற்கொண்டு, நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
தாயிம்பள்ளியையொட்டிய பேருந்து நிறத்தத்தில் ஒருசில சிற்றுந்துகள் மட்டுமே நின்று செல்கின்ற நிலையை மாற்றி, அரசு விதிகளின்படி நிறுத்தப்பட வேண்டிய அனைத்து பேருந்துகளையும் நிறுத்திட ஆவன செய்வேன்.
இருளில் மூழ்கியிருக்கும் காயிதேமில்லத் நகரை ஒளிமயமாக்க தேவையான தெரு விளக்குகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 13:
11அவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் எல்.கே.மேனிலைப்பள்ளி - தாமரை ஸ்கூல் வளாகத்திற்கருகிலுள்ள் குப்பை மேட்டைத் துப்புரவாக்கி, மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்கிக் கொடுப்பேன்...
ஊழலற்ற நகராட்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்...
நம் தலைவியின் அனைத்து நகர்நலப் பணிகளிலும் துணை நிற்பேன்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 14:
அடுத்து, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா உரையாற்றினார்.
எனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், பழுதில்லா தெரு விளக்கு பராமரிப்பு, சுத்தமான சுற்றுப்புறச் சூழல் அமைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...
நகர்நலப் பணிகளில் நம் தலைவிக்கு உறுதுணையாக இருந்து உதவிகள் செய்வேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 16:
பதினைந்தாவது வார்டு உறுப்பினர் ஜமால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அடுத்து, பதினாறாவது வார்டு உறுப்பினர் தைக்கா சாமு உரையாற்றினார்.
எனக்கு மேடைப்பேச்சு பேசி பழக்கமில்லை...
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்... ஒருபோதும் லஞ்சம் வாங்கவும் மாட்டேன்... யாரையும் வாங்கவிடவும் மாட்டேன்... இது உறுதி.
என் வார்டுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளையும் குறையில்லாத பகுதியாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 17:
அடுத்து, 17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் உரையாற்ற அழைக்கப்பட்டார். தொண்டை வலி காரணமாக அவரது உரையை கவிமகன் காதர் வாசித்தார்.
எனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உறுப்பினராகப் பணியாற்றிடுவேன்...
மகுதூம் பள்ளியில் கட்டப்பட்டு, செயல்படாமல் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை செயல்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...
காட்டு தைக்கா தெரு பகுதியில் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...
எனது வார்டுக்குட்பட்ட மகுதூம் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, அரூஸிய்யா பள்ளி ஆகிய பள்ளிகளிலும், அவற்றையொட்டிய சங்கங்களிலும் புகார் பெட்டி வைத்து, மக்கள் குறைகளை அவ்வப்போது சேகரித்து, அவற்றை நிவர்த்தி செய்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
வார்டு 18:
நிறைவாக, பதினெட்டாவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி உரையாற்றினார்.
திருச்சியில் பணியாற்றிய நான் பணி ஓய்வு பெற்று, காயல்பட்டினத்தில் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என் பகுதி மக்களின் தொடரான விருப்பத்தைக் கருத்திற்கொண்டு, ஓய்வுக்கு ஓய்வளிக்க முடிவு செய்து மீண்டும் பொதுப்பணியாற்ற முடிவு செய்துள்ளேன்...
நான் எனது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் சுமார் 50 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்திருக்கிறேன். நல்ல ஊதியத்திலான அந்த வேலைகளைப் பெற்றுத் தருவதற்காக நான் ஒரு பைசா கூட லஞ்சமாக யாரிடமும் பெற்றதில்லை.
என் கம்பெனி துவக்கத்தில் 500 கோடி ரூபாய் லாபம் பெற்று வந்தது. Truth, Discipline, Punctuality, Hardwork ஆகிய தாரக மந்திரங்களை உள்ளடக்கிய எங்கள் கூட்டு முயற்சி காரணமாக அதன் வருவாய் 1000 கோடி என இரட்டிப்பானது.
நாம் செய்ய முனையும் எந்தப் பணியையும் ஒரு கால நிர்ணயத்திற்குட்பட்ட பணியாக வகைப்படுத்தி செய்தால் அது செம்மையாக அமையும்.
நமது புதிய தலைவரின் திட்டங்கள் அனைத்தும் மக்களைக் கவருவதாக உள்ளது. என்னையும் அது வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவை நிறைவேற்றப்பட நான் உற்ற துணையாக இருப்பேன்.
இன்று நமதூரில் ஜீவாதாரப் பிரச்சினை குடிநீர் பிரச்சினைதான். இக்குறையைப் போக்கிட, இரண்டாவது பைப் லைன் திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் என்னளவில் மேற்கொள்வேன்.
நீர்த்தேக்கத் தொட்டி சுத்தப்படுத்தலுக்கு போதிய கவனம் செலுத்தி செயல்படுவேன்.
மூன்று சக்கர (ட்ரை சைக்கிள்) வண்டிகள் மூலம் அந்தந்த வார்டுகளின் குப்பைகளை சேகரித்துச் செல்ல ஆவன செய்வேன். வெறுமனே குப்பை லாரிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையை மாற்றி, நகர சுகாதாரத்திற்கு வழிவகை செய்வேன்.
திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறுமிடங்களில் சிறப்புப் பணியாளர்களை அனுப்பி, அப்பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்...
ஆடு அறுப்பிடத்தை போதிய சுகாதாரத்துடன் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
இருளான பகுதிகளில் தெரு விளக்கு அமைத்தல், பழுதான சாலைகளை சரிசெய்தல் உள்ளிட்டவற்றை இயன்றளவு சிறப்பாக செய்வேன்...
சேது ராஜா தெரு, கோமான் புதூர், முத்தாரம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகள் வழியே சுடுகாட்டுக்குச் செல்லும் வழி முட்புதருடன் காட்சி தருகிறது. பிணத்தைச் சுமந்து செல்வோர் செருப்பின்றிதான் செல்வர். அவர்களது சிரமங்களைப் போக்கும் வகையில் அப்பகுதியை மேடு பள்ளமற்ற சமதளமாக்கி, முட்புதரை அகற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...
என் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை என் பதவிக்காலத்திற்குள் குறைவின்றி நிறைவேற்றப் பாடுபடுவேன்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பின்னர், அனைத்து வார்டுகளின் நகர்மன்ற ஆண் உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவுக்கு சால்வை அளித்தும், பெண் உறுப்பினர்கள் சால்வை அணிவித்தும் தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், டி.சி.டபிள்.யு. நிறுவனம், முத்தாரம்மன் கோயில் தெரு, ரிஸ்வான் சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), திருவனந்தபுரம் காயல் நல மன்றம் உள்ளிட்ட ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பிலும் நகர்மன்றத் தலைவருக்கு சால்வை அளிக்கப்பட்டது.
பின்னர், வரும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில், நகர்மன்றத்தின் புதிய அங்கத்தினரை வாழ்த்தும் வகையில் பாராட்டு விழா பொதுக்கூட்டம், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்படவுள்ளதாக, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் இக்கூட்டத்தில் அறிவித்தார்.
நிறைவாக, நகர்மன்றத் தலைவர் ஆபிதா சிறப்புரையாற்றினார். (அவரது உரை தனிச்செய்தியாக தரப்படும்.)
நன்றியுரைக்குப் பின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், அழைப்பின் பேரில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது.
நிறைவாக, நகர்மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |