இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணியருக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மற்றும் ஜாவியாவில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
21.10.2011 அன்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹஜ் பயணம் செய்யவுள்ள ஹாஜிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பகுதியிலிருந்து அன்று ஹஜ் பயணத்திற்காக புறப்பட ஆயத்தமாக இருந்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி மற்றும் கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர், நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் இந்நிகழ்ச்சியில், பொதுமக்களால் கைலாகு (முஸாஃபஹா) செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே தினத்தில் காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவில் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில், அப்பகுதியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் முஸாஃபஹா செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும். காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஹஜ் பயணியருக்கு வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.
இவ்விரு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் - சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் செந்தூர் விரைவுத் தொடர்வண்டி அண்மையில் தினசரி சேவையாக்கப்பட்டதையடுத்து, காயல்பட்டினத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பெரும்பாலும் அந்த வண்டியிலேயே தமது சென்னைப் பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. |