விழிப்புணர்வு துவங்கி இரண்டாண்டுகளாகிறது! posted byKavimagan Kader (Dubai, U.A.E.)[29 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1320
அன்பிற்கினிய காயலர்களே...! நமதூரில் புற்றுநோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி துவங்கி இரண்டாண்டுகளாகின்றன.
நமது நகர பெரியவர்கள் மற்றும் மருத்துவர்களால் நமது கே.எம்.டி.மருத்துவமனையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அந்த விழிப்புணர்வு முயற்சியின் தொடர்ச்சி என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், அமீரக காயல் நல மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம், பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா), குவைத் காயல் நல மன்றம் ஆகிய உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து கடந்த 27.07.2009 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் புற்றுநோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கத்தர் காயல் நல மன்றங்களின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இதே மன்றங்களின் உறுதுணையுடன் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான காயலர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு, பெண்களுக்கான கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி சலுகைக்கட்டண அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்திலுள்ள உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பொதுமக்கள் - குறிப்பாக தாய்மாரின் புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு நீண்ட - தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வரும் 2020ஆம் ஆண்டிற்குள் காயல்பட்டினத்தை கர்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து முழுமையான விடுதலை பெற்ற நகரமாக்குவதற்கான செயல்திட்டத்துடன் நமது கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, இந்த 2010ஆம் ஆண்டில், இரண்டாமாண்டாக புற்றுநோய் பரிசோதனை முகாம் மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்கள் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளன.
மேற்சொன்ன நிகழ்ச்சிகளில், புற்றுநோய் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? அதற்கான காரணங்கள் என்னென்ன என்பன குறித்து திருச்சியிலுள்ள ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் மூலம் அதன் தலைமை மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜனின் தன்னிகரற்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய மருத்துவக் குழுவினர் இணைந்து விளக்கங்கள் அளித்து, மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒரு முகாமில் 12 நபர்களுக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, துவக்கத்திலேயே தடுப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு இன்று அவர்கள் இறையருளால் நலமுடன் உள்ளதால், அவர்களின் பல லட்சம் ரூபாய் பணம், அவர்களது உடல் ஆரோக்கியம், நேரம், உழைப்பு உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உலக காயலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முகாம் நடத்தப்பட்ட நிலையில் 12 பேருக்கு புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறதென்றால், இதுவே வருடத்திற்கு குறைந்தது 4 முகாம்கள் நடத்தப்பட்டால், 50 பேருக்காவது புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு ஏற்படும் என்பதையும், இதனால் பல லட்சம் ரூபாய் தொகை மருத்துவ உதவித்தொகையாக காயல் நல மன்றங்கள் அளிக்க வேண்டிய நிலை இல்லாமலாகும் என்பதை மிக முக்கியமாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிகப் பெரிய அளவில் - பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சிகளை நடத்திய காயல் நல மன்றத்தினர் தவிர்த்து, உள்ளூரிலிருந்து அவற்றை ஒருங்கிணைத்தவர்கள், கே.ஜே.ஷாஹுல் ஹமீத் (காயிதேமில்லத் சங்கம்), தர்வேஷ் முஹம்மத் (இக்ராஃ கல்விச் சங்கம்), எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்), எம்.எஸ்.ஸாலிஹ் (காயல்பட்டினம்.காம் அட்மின்), எஸ்.அப்துல் வாஹித் (ஐ.ஐ.எம். டிவி) ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில காயலர்கள் மட்டுமே...! (அப்போது சகோ. அப்துல் வாஹித் மோட்டார் பைக் விபத்தில், பலத்த காயமுற்றிருந்த நிலையிலும் கலந்துகொண்டு உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
கத்தர் காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளான நாங்கள் அன்று பல காயலர்களை உறுதுணைக்காக எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே எங்களுக்கு மிஞ்சியபோதிலும், இந்நிகழ்ச்சிகள் நடந்தேறிய பின்னர் நகரில் உருவான விழிப்புணர்வு எங்களது மனச்சோர்வுகளை மறக்கடித்தது என்றால் அது மிகையாகாது.
புற்றுநோயை நமதூரிலிருந்து முற்றிலும் அகற்றிடும் பொருட்டு உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து இன்னும் பல செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
எனவே, எடுக்கப்படும் முயற்சிகள் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளாக அமைந்தால் மட்டுமே அதன் பலன் முழுமையாக இருக்கும் என்பது எனது பணிவான கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross