கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்... posted byS.K.Salih (Kayalpatnam)[25 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15045
மறைந்த என் பெருமதிப்பிற்கும், அன்பிற்கும், பிரிக்க முடியாத பாசத்திற்குமுரிய மூஸா மாமா அவர்கள், என் தந்தை மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்களுடன் கொண்டிருந்த அளவிலா நட்பின் காரணமாக, எனது இளமைப் பருவம் முதல் என் மீதும், என் வளர்ச்சி மீதும் என்றென்றும் அக்கறை கொண்டிருந்தார்கள்...
சாளை ஜியாவுத்தீன் காக்கா குறிப்பிட்டுள்ளது போல, இவர்கள் பேசினால், நம் கையை அழுத்த்....திப் பிடித்துக்கொண்டுதான் பேசுவார்கள்... வயது முதிர்விலும், அவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களை அணுவணுவாக அனுபவித்துக் கேட்கலாம்...
நேற்று மாலை வரை, நமதூரில் நடைபெறும் திருமணங்களையொட்டிய அழைப்பு (ரிசப்ஷன்) நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள்... குறுக்கத் தெருவைச் சார்ந்த சகோதரர் ஆரிஃப் அவர்களின் இல்லத்திருமண அழைப்பிற்கு வந்த அவர்கள் என்னைச் சந்தித்து, ஸலாம் கூறி, கட்டித் தழுவி,
“தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது பற்றி உன் மனநிலை என்ன?” என்று கேட்க,
“அனைத்தும் இறைவன் நாட்டப்படியே நடக்கிறது... வென்றால் எனக்கு மகிழ்ச்சி தரும் என்றிருந்தால், தோல்விக்காக நான் வருந்தியிருப்பேன்... என்னைப் பொருத்த வரை இரண்டையுமே ஒன்றாகத்தான் பார்க்கிறேன் மாமா...” என்று கூறினேன்.
ஒரு “சபாஷ்” சொன்னார்கள்.
இன்னும் பல நாட்கள் சந்திக்கலாம்... அவர்களின் விலை மதிக்கவியலாத அளவிலா அறிவுரைகளை தினந்தினம் கேட்கலாம் என்றெல்லாம் காத்திருந்த எனக்கு இன்று காலையில் கிடைத்துள்ள இச்செய்தி என் தலையில் இடி விழுந்தது போல வலிக்கிறது... இறையோனின் விதியைப் பொருந்தித்தானே ஆக வேண்டும்...? விதியின் மீது நம்பிக்கையில்லாதிருந்தால், மற்றவர்களைப் போல நாமும் இதுபோன்ற நிகழ்வுகளில் நிச்சயம் மதியிழந்து நமது துக்கத்தை வெளிப்படுத்தியிருப்போம்...
செல்ல வேண்டிய திருமண நிகழ்வுகளில் கூட சுருக்கமாக தலையைக் காட்டிவிட்டு, வீட்டிலிருந்தவாறு இந்த கருத்தைப் பதிவு செய்கிறேன்...
என் அன்பு முனைவர் முஹம்மத் லெப்பை காக்கா, ஹாஜி அப்துல் மாலிக் காக்கா, என் நெஞ்சில் என்றும் நீங்காவிடம் பெற்ற என் பால்ய நண்பன் ஹாஃபிழ் ஹாஜி முஹம்மத் இப்றாஹீம் ஸாஹிப் ஆகியோரே...! உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு சொற்கள் இல்லை... உங்களோடு சேர்த்து எனக்கும் யாரேனும் ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று தவிக்கிறேன்... அந்தளவுக்கு அவர்களின் இழப்பு என்னை வாட்டுகிறது...
வல்ல அல்லாஹ், கருணையே உருவான எனதன்பு மாமா (தோழப்பா)வின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நிறைவான நற்கூலியாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தாராகிய என் பாசத்திற்குரிய சகோதர - சகோதரியர் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக... ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross