Re:அதிகாலையில் இதமழை!... posted byசாளை பஷீர் (சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்)[31 December 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 15263
வெயிலும், மழையும் இறைவனின் அருட்கொடைகள் என்பதை நம் அறிவு அறிந்தாலும் அவற்றை இதமாகவும் பதமாகவும் அனுபவிக்கும்போது மனதும் அந்த இயற்கையின் அழகியலை அருட்கொடையை ஆழ்ந்து உணருகின்றது.
இன்று வைகறைத் தொழுகைக்குப் பின் சாமு கடையில் தேனீரும், எண்ணைக் கடியும் முடித்து விட்டு நண்பர்களுடன் கடற்கரை நோக்கி நடந்தோம். கடலை நெருங்க நெருங்க அதன் ஜ்வலிக்கும் அழகு மனதை பறித்தது.
மேலே தென் திசை வானத்தில் மழையை சுமந்த கர்ப்பிணி மேகங்கள் பிரசவத்திற்கு ஆயத்தமாக வட வானில் வலம் வர அணியமாக இருந்த இளஞ்சூரியக் கதிர்களின் ஒப்பனையில் கடலின் மேற்பரப்பு வரிவரியாக மின்னியது15 வருடங்களுக்கு முன்னர் நானும், எஸ்.கே. ஸாலிஹும் முன்காலைப் பொழுதில் இக்கடலில் முங்கிக்குளித்தது நினைவில் வந்து போயிற்று.
கடற்கரைக்கு வந்து போகும் நமக்கு மட்டும் காலத்தின் பிடிவாதமான ஓட்டத்தில் முடியில் நரையும் தோலில் திரையும் வந்து சேர்ந்து கொள்கின்றது. ஆனால் திரை மாலை எனப்படும் நொங்கும் நுரையுமான ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு சொந்தக்காரியான நமதூர் கடலுக்கு மட்டும் வயதாவதே இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross