கல்யாண விழாக்காலங்களில் ஆடுகளின் தலை , கால்கள் மற்றும் குடல் மலிவான விலையில் ரோட்டோரங்களில் விற்கப்படுவதை பற்றி இந்த செய்தியிலும் நம் மக்களின் கருத்துக்களிலும் விவரிக்கப்பட்டு விட்டதால் அதைபற்றி மேலும் விளக்க விரும்பவில்லை - ஆனால் அதன் விபரீதத்தை, அதன் ஆபத்தை விளக்க விரும்புகிறேன்.
---------------------------------------------
தலை , கால்கள் சுத்தம் செய்தல் :
ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் தலை, கால்களை அப்படியே வாங்கி வந்து வீட்டில்தான் சுத்தம் செய்வார்கள் - அதன் பிறகு சுத்தம் செய்வதற்கென்றே சிலர் இருந்தனர், அவர்களிடம் அதற்குண்டான கூலியை கொடுத்து சுத்தம் செய்து வாங்கி வந்தனர்.
அவர்கள் சுத்தம் செய்வது முறையாக இருந்தது - தலை, கால்களை வெந்நீரில் முக்கி எடுத்து , கத்தியினால் முடிகளை அகற்றி சுத்தம் செய்தார்கள், அதுதான் அன்று தொட்டு இன்றுவரை வழக்கமாக இருந்தது.
முடிகள் அத்தனையும் சுத்தமாகும்வரை பல முறை வெந்நீரில் முக்கி , கத்தியால் சுத்தம் செய்வார்கள் - அப்படி செய்தாலும் கூட முடிகள் அங்கொன்றும் , இங்கொன்றுமாக - கண்களை சுற்றிலும், காதுகளுக்கு அருகிலும் இருக்கத்தான் செய்யும்.
இப்படி சுத்தப்படுத்தப்படாமல் விடுபட்ட முடிகள் , சுத்தம் , சுகாதாரம் பேணும் நம் வீட்டு பெண்களின் கழுகு கண்களுக்கு தென்படும் அதை அவர்கள் அடுப்பில் காட்டி, முடிகளை பொசுக்கி சுத்தம் செய்துவிட்டுதான் சமைப்பார்கள் - அதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லாமல் இருந்தது.
----------------------------------------------
மக்களின் சோம்பல்தனம் :
சமீப காலமாக தலை, கால்கள் விற்பனையாவதில்லை - காரணம் நமது மக்களின் சோம்பல்தனம்.
வீட்டிலே சுத்தம் செய்வதற்கு பெண்களுக்கு இயலா நிலை - வெளியிலே கூலியைக் கொடுத்து சுத்தம் செய்து வாங்கி போக ஆண்களுக்கு பொறுமையில்லா நிலை அதனால் விற்பனைக் குறைந்தது.
இதன் காரணமாக கறிக்கடைக்காரர்களே தலை, கால்களை சுத்தம் , செய்து விற்க தொடங்கினர்.
கடைக்காரகள் வாடிக்கையாக அல்லது மொத்தமாக கூலியை காண்ட்ராக்டில் கொடுத்து செய்வதாலும் - விழாக்காலங்களில் அதிகமான ஆடுகள் அறுக்கப்படுவதாலும் - சுத்தம் செய்பவர்கள் வேலையை துரிதமாக செய்யவும் அதே நேரத்தில் , செலவை மிச்சப்படுத்தவும் கையாண்டதுதான் இந்த மோசமான செயல் முறை.
-------------------------------------------------
துன்பம் தரும் துரிதமான முறை:
சுத்தம் செய்யும் சுத்தமான முறை போய் - துன்பம் தரும் துரிதமான முறை உருவாகியது.
இரண்டு முறைகளில் சுத்தம் செய்வதாக பரவலாக அறியப்படுகிறது.
முதல் முறையானது வெந்நீரில் முக்கி எடுத்து, பிளேடுகளால் முடிகளை அகற்றி சுத்தப்படுத்துவது.
இரண்டாவது முறையானது : வெந்நீரில் ஒருவித சோடாவை போட்டு அதில் தலை கால்களை முக்கி எடுத்து துணியால் முடிகளை வழித்து அகற்றுவது.
--------------------------------------------------
சலூன்களில் உபயோகப்படுத்திய பிளேடு :
இந்த இரண்டு முறைகளிலும் சுத்தம் செய்வது ஆபத்தாகவே அமைகிறது - காரணம் பிளேடுகளால் சுத்தம் செய்பவர்கள், உபயோகப்படுத்தாத புதிய பிளேடுகளைக் கொண்டு சுத்தம் செய்வதில்லை.
சலூன்களில் உபயோகித்துவிட்டு குப்பையில் போடுவதற்காக வைத்திருக்கும் பழைய பிளேடுகளையே உபயோகிக்கின்றனர் - இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்.
உபயோகப்படுத்திய அதுவும் சலூன்களில் உபயோகப்படுத்திய பிளேடு என்றால் எய்ட்ஸ் நோயாளி, குஷ்டம் உள்ளோர் , சொறி சிரங்கு பிடித்தோர் மற்றும் பல வகையான கொடூரமான நோய்கள் உள்ளவர்களுக்கும் உபயோகப்படுத்திய பிளேடுகள் அல்லவா.
அவைகளை கொண்டு தலை, கால்களை சுத்தம் செய்தால் கிருமிகள் தாக்கி , உலகில் உள்ள அத்தனை வகையான நோய்களும் அதை சாப்பிடுபவர்களை அல்லவா பாதிக்கும்.
-------------------------------------------------
நீரில் " சோடா ஆஷ் " கலந்து :
இரண்டாவது முறையானது : வெந்நீரில் ஒரு வகையான சோடாவை ( ஆப்பம்,இட்லி , தோசைக்கு போடும் சோடா அல்ல ) கலந்து, அதன் பின் அதில் தலை, கால்களை போட்டு முக்கி எடுத்து அதை துணியை கொண்டு அழுத்தி துடைப்பார்களாம் அத்தனை முடிகளும் வந்து விடுமாம்.
இதை பற்றி சில பொது மக்களிடம் விசாரித்தபோது , ஆம் கொதிக்கும் நீரில் " சோடா ஆஷ் " கலந்து சுத்தம் செய்வதாக அறிகிறோம் என்றார்கள்.
எனவே வெந்நீரில் சோடா ஆஷ் கலந்துதான் சுத்தம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது - மேலும் ஒரு சிறு முடியுமில்லாது மிகவும் சுத்தமாக வழு, வழு என்று பள, பளப்பாக இருக்கும்போதே இது ஏதோ ஒரு கெமிக்கல் கலந்ததுதான் சுத்தம் செய்கிறார்கள் என்பதை என்று உணர முடிகிறது.
சோடா ஆஷ் எவ்வளவு கொடூரமான கெமிக்கல் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
--------------------------------------------------
மனித நேயமில்லாத வியாபாரிகள் :
இப்படி கெமிக்கல் கலந்தால் உயிருக்கு ஆபத்தல்லவா ?
இதை சில பொதுமக்களிடம் எடுத்து சொன்னபோது அவர்கள் வருத்தப்பட்டாலும் , வேதனை பட்டாலும் சில மக்கள் அதை பொருட்படுத்துவது இல்லை.
சமைக்கும்போது எல்லாம் சரியாகிவிடும் - வயலில் ' கெமிக்கல் கலந்த உரம்தானே போடுகிறோம் ' என்ற பொறுப்பற்ற பதில்தான் அவர்களிடமிருந்து வருகிறது.
இந்த மாதிரியான பொறுப்பற்றவர்களாக சில மக்கள் இருப்பதால்தான் - மனித நேயமில்லாத வியாபாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்.
----------------------------------------------------
மக்களுக்கு எச்சரிக்கை / வேண்டுகோள் :
அன்பான மக்களே!
இன்றைய கால சூழலில் நாம் பல, பல கொடூரமான நோய்களை சந்தித்து துன்புற்று வருகிறோம் - புற்று நோய் வர காரணம் தெரியவில்லை என்கிறோம்.
ஆனால் அந்த காரணங்கள் நமக்கு நேரிடையாக தெரியவில்லையே தவிர - இது போன்ற மறைமுகமான உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
நாம் ஹலாலான உணவை மட்டும் சாப்பிட்டால் போதாது - அது தூய்மையான உணவாகவும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, தலை , கால்களை வாங்கி சாப்பிட விரும்போவோர் , அவைகளை சுத்தம் செய்திருக்கும் முறையை தெளிவாக நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே வாங்கி செல்லுங்கள்.
அல்லது சுத்தம் செய்யப்படாத தலை, கால்களையே வாங்கி சென்று வீட்டில் சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுங்கள் இதுதான் நமக்கு சுகாதாரம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்களுக்கு தூய்மையான உணவை சாப்பிடக்கூடிய விழிப்புணர்வை தந்து சுகாதாரமாக வாழ கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross