காயல்பட்டினத்தில் தற்போது கல்யாண சீசன். பொதுவாக டிசம்பர் மாதங்களில், குழந்தைகளின் அரையாண்டு விடுமுறையைக் கருத்திற்கொண்டும், ஏப்ரல் - மே மாதங்களில் கோடை விடுமுறையைக் கருத்திற்கொண்டும், நகரிலுள்ள இல்லங்களில் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வழமை உள்ளது.
இந்நிகழ்ச்சிகளின்போது விருந்துகள் தடபுடலாக நடைபெறும். அவ்விருந்துகளுக்காக பல நூற்றுக்கணக்கில் ஆடுகள் அறுக்கப்படும். அவ்வாறு அறுக்கப்படும் ஆடுகளின் இறைச்சி மட்டும் எடை கணக்கில், நிகழ்ச்சி நடத்தும் குடும்பத்திற்கு விற்பனை செய்யப்படும். அதன் தலை, கால், குடல் ஆகியவற்றை மொத்த விலை நிர்ணயித்து சிலர் எடுத்துச் செல்வர்.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் தலை, கால்களிலுள்ள முடிகள் வெந்நீரில் வக்கியெடுப்பதன் மூலம் நீக்கப்படும். பின்னர், காயல்பட்டினம் ஆஸாத் தெரு முனையில் அவை மொத்தமாக விற்பனைக்கு வைக்கப்படும்.
பொதுவாக இறைச்சிக் கடைகளில் இவற்றை வாங்கும் பொழுது விற்கப்படும் விலையை விட இது சற்று மலிவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்லும் வழமை உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இவ்வாறு தலை, கால், குடல்கள் தனி வணிகர்களால் விற்கப்படும் வழமையில்லை. அந்தந்த திருமண வீடுகளைச் சுற்றிய குடும்பத்தினரே அவற்றை மிகவும் மலிவாக வாங்கிச் செல்வர். ஆனால், தற்போது அவற்றை தனி வணிகர்கள் விற்பதால் விலையில் பெரியளவில் மலிவு என்று சொல்லிவிட இயலாது.
கடைகளில் 50 ரூபாய் அளவில் விற்கப்படும் தலை இங்கும் அதே விலையிலோ அல்லது அதை விட சற்று குறைந்த விலையிலோ விற்கப்படுகிறது. அதுபோல, 4 கால்கள் கொண்ட ஒரு கால் செட் கடையிலும் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே விலையிலேயே இங்கும் விற்கப்படுகிறது. தற்காலங்களில், மிகச் சிறிய குட்டி ஆடுகளே அறுக்கப்படுவதால் தலை, கால், குடல்கள் (விலையைத் தவிர) மிகச் சிறியதாகவே உள்ளன. குடல் 20 முதல் 25 ரூபாய்க்கு இந்த நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம், சாதாரணமாக ஹஜ் பெருநாள் காலங்களில் ஒரு செட் தலை, காலை வெந்நீரில் வக்கியெடுப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றிருக்க, இந்த நடைபாதைக் கடைகளிலுள்ள தலை - கால்கள் சில மணித்துளிகளில் வக்கியெடுத்து வரப்படுகிறது.
இதுகுறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், இவை ப்ளேடு கத்தி கொண்டு மயிரிறக்கப்படுவதில்லை என்றும், சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி மொத்த மயிர்களையும் வழித்தெடுத்து விடுவதாகவும் கூறுகின்றனர். ப்ளேடு கத்தி கொண்டு மயிரறக்கப்படும் தலை - கால்களில் அடிமயிரை உணரும் வகையில் சொறசொறப்பு காணப்படும் என்றும், ஆனால் இதுபோன்ற நடைபாதைக் கடைகளிலும் - இறைச்சிக்கடைகளிலும் தற்காலங்களில் விற்கப்படும் தலை - கால்கள் முழுமையாக வழுவழுப்பாகவே இருக்கும் என்றும், இந்த வேறுபாடுகளைக் கொண்டு ஏதோ சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே இவை வக்கியெடுக்கப்படுகின்றன என்றும் அறியலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
இனம்புரியாத பல நோய்கள் உலாவரும் இக்காலகட்டத்தில், இதுபோன்று நடைபெறுகிறதா என ஆய்ந்தறிவது அத்துறை சார்ந்த பொறுப்பாளர்களின் கடமையாக உள்ளது. |