இம்மாதம் 30ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோரை உரையாற்றச் செய்வதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 07.30 மணிக்கு, நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், காயல்பட்டினம் ஆஸாத் தெருவிலுள்ள ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான் இல்லத்தில் நடைபெற்றது.
அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
நகர நிர்வாகத்தால் செய்யப்பட வேண்டிய செயல்திட்டங்கள், நடப்பு நிர்வாகத்தில் காணப்படும் குறைகள் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டுப் பேசி, இனி வருங்காலங்களில் அக்குறைகளைக் களைந்து சிறந்த முறையில் செயலாற்ற அனைவரும் உறுதியெடுக்க வேண்டுமென்று அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
பின்னர், நகர நிர்வாக சீரமைப்பு, இட ஒதுக்கீட்டைவலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தல், மணிச்சுடர் நாளிதழ் நிருபர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி முஹம்மத் அலீ, எம்.எச்.அப்துல் வாஹித், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, ஹாஜி எம்.ஏ.ஹஸன், எம்.இசட்.சித்தீக், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி வாவு முஃதஸிம், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணியைச் சார்ந்த ஐ.எல்.நூஹுத்தம்பி, என்.எம்.இஜாஸ் அஹ்மத், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து, நகர நிர்வாகத்தை விரைவில் சீரமைப்பது என்றும், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதியன்று காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்துவதென்றும், மணிச்சுடர் நாளிதழ் செய்தியாளர் நியமனம் தொடர்பாக, மாநில தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் நிறைவுறையாற்ற, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், அக்கட்சியின் நகர பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், சஊதி அரபிய்யா - ரியாத் காயிதெமில்லத் பேரவை துணை அமைப்பாளர் நாஸர், அண்மையில் ஹஜ் பயணம் முடித்துத் திரும்பியுள்ள முஸ்லிம் லீக் நகர முன்னாள் செயலர் ஹாஜி எஸ்.டி.கமால் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
|