காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், சூரிய ஒளியில் தானியக்க முறையில் செயல்படும் மின் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்விளக்குகளை இயக்கி துவக்கிவைக்கும் நிகழ்ச்சி 29.12.2011 வியாழக்கிழமை மாலை 04.30 மணிக்கு, துளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம முன்னாள் தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தலைவர் கே.எம்.இ.நாச்சி தம்பி விழாவிற்குத் தலைமை தாங்கினார். துளிர் அறக்கட்டளை கவுரவச் செயலாளரும், காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவருமான அ.வஹீதா, இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குனர் ஹாஜி எச்.என்.சதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளை சுபாசுரேஷ் நெறிப்படுத்தினார். துளிர் பள்ளியின் ஆசிரியர் என்.எஸ்.ஹலீமுன்னிஸா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். துளிர் நிறுவனர் - வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், Tamilnadu Energy Development Agency நிறுவனத்தின் மதுரை மண்டல துணை பொதுமேலாளர் எஸ்.இ.எஸ்.செய்யித் அஹ்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளக்குகளை இயக்கி வைத்ததோடு, வாழ்த்துரை வழங்கினார்.
சூரிய ஒளி, சூரிய வெப்பம் மூலம் பெறப்படும் மின்சாரம், அதனால் விளையும் நற்பயன்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
நிறைவாக, துளிர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் வி.எஸ்.ஏ.ஆயிஷா ஸாஹிப்தம்பி நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நகரின் பல்வேறு பிரமுகர்களின் அனுசரணையுடன், சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தால் தானியங்கும் 15 விளக்குகள் இப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
|