தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவருக்கு வழியனுப்பு விழா நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) அன்று நடைபெற்றன. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி அவர்களுக்கு வழியனுப்பு விழா 30-12-2011 வெள்ளியன்று சகோதரர் பாலப்பா அஹ்மதுவின் இல்லத்து நீண்ட உள்ளரங்கில் இஷா தொழுகைக்குப்பின் நடந்தேறியது.
சகோதரர் சாதுலி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க - இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் பாலப்பா அவர்களின் பாலகன் யூசுப் சாஹிப் அழகான முறையில் வரவேற்புரை நிகழ்த்தி வந்தோர் அனைவரையும் வியக்க வைத்தார்.
தலைவர் முன்னுரை:
அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் இந்நாள் வரையில் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துகளுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் சவூதியில் தன்னுடைய பணி முடித்து தாயகம் திரும்பி நம் மன்ற பணிகளை தொடரவிருக்கும் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி அவர்களின் 18 ஆண்டு காலம் நம் மன்றத்திற்கு ஆற்றிய சேவைகள் குறித்து பாராட்டி பேசியதோடு, நம் மன்றத்து பணிகளை அவர்கள் தாயகம் திரும்பியும் தொடர வேண்டும் என்ற அன்புக் கட்டளையோடு அவர்களை வாழ்த்தி உரையை நிறைவுற்றார்கள்.
அதனை தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள்
சகோதரர் இஸ்மாயில், சகோதரர் இம்தியாஸ், சகோதரர் சதகத்துல்லாஹ், சகோதரர் ஹசன் ஜாபர், சகோதரர் செய்யது இப்ராகிம், சகோதரர் புஹாரி ஆகியோர்கள் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்களின் 18 ஆண்டு காலம் நம் தோளோடு தோளாக நின்று நம் மன்றத்திற்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் மேலும் அவர்கள் சவூதி பணியில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார்களே தவிர நம் மன்றத்து உறுப்பினர்களின் இதயத்திலிருந்து அல்ல என்று பெருமையாக கூறினார்கள்.
மேலும் அன்னாரின் ஓய்வு காலம் சீராகவும், நோய் நொடி இல்லாமலும், நிம்மதியாகவும் நம் ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்டு கண்ணீர் மல்க உரையாற்றினார்கள் .
பொதுச்செயலாளர் உரை:
அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் நம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்த மனுக்களின் பரிசீலனை குறித்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் நம் மன்றத்து நிதி நிலையை அதிகரிப்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு அவர்களது கருத்தையும் கேட்டறிந்தார்கள்.
அதனை தொடர்ந்து 18 ஆண்டு காலம் நம் மன்றத்திற்காக தன்னுடைய உடலாலும், பொருளாலும் இறைவனின் திரு பொருத்தத்தை மட்டுமே நாடி பல சேவைகள் புரிந்து தாயகம் திரும்ப இருக்கும் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்களை கவுரவிற்கும் பொருட்டு தலைவர் டாக்டர் இத்ரீஸ், செயற்குழு உறுப்பினர்கள் கிங் செய்யது இப்ராஹீம் காக்கா மற்றும் சகோதரர் அப்துல் அஜீஸ் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள் .
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சகோதர் இம்ரான், சகோதரர் முஹம்மது லெப்பை, சகோதரர் சதக் இப்ராஹீம், சகோதரர் அப்துல் காதர், சகோதரர் பைரோஸ் ஆகியோர்கள் அணைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் பெட்ரோலியம் இஞ்சினியரிங் மேற்படிப்பிற்காக சவூதி வந்திருக்கும் சகோதரர் மதார் சாஹிப் அணைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டார் .
உதவித்தலைவர் மெஹர் அலி அவர்களின் ஏற்புரை:
அடுத்து பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்பும் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்கள் ஏற்புரையில் , அழகான திருமறை வசனங்களுடன் துவங்கி - அன்று முதல் இன்று வரை நம் மன்றம் ஆற்றிய பணிகளையும் அதற்காக அவ்வப்போது சந்திக்க நேர்ந்த சிரமங்களையும் பட்டியலிட்டார். அறிவுரைகளைத் தன் அனுபவம் கலந்த வார்த்தைகளால் அற்புதமாக எடுத்துரைத்து - பொருளாதார பலம் ஒரு மன்றத்துக்கு எத்தனை அவசியம் என்பதை வலியுறுத்தினார். நம் தாயகம் காயல் நகரில் இறைவன் அருளால் தான் துவங்க எண்ணியுள்ள மருந்தகம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கும் கலந்துரையாடல் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்து - தம் மீது அன்பு கொண்டு மன நெகிழ்வுடன் உணர்ச்சிப் பெருக்குடன் வாழ்த்திய சகோதரர்களுக்கும், மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, அனைவரும் தனக்காக இறைவனிடம் துஆ கேட்கும் படி கூறி அமர்ந்தார்.
அடுத்து நடைபெற்ற உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்கு பின் தேநீர் சிற்றுண்டிகள் சுவையான கறிக்கஞ்சி மற்றும் அனைவருக்கும் சிக்கன் ப்ரோஸ்டட் வழங்கப்பட்டது. இறுதியாக தலைவரின் நன்றியுரையுடனும் இனிய துஆவோடும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு மற்றும் புகைப்படங்கள்:
B.A.முத்துவாப்பா,
தகவல் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம் - தம்மாம்.
|