காயல்பட்டினம் கடற்கரையில் பாலின அடிப்படையில் பகுதி பிரிப்பு, வாகன நிறுத்த கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நகராட்சியின் ஒத்துழைப்புடன் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதுகுறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கவும், கடந்த 17.12.2011 அன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நஸீர் அஹ்மத், துணைத்தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், செயலர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் ஆகியோரடங்கிய குழு, 21.12.2011 அன்று மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அதே குழுவினர் மறுநாள் 22.12.2011 அன்று மதியம் 03.00 மணியளவில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையாவை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
நகர்நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் அனைத்தும் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டியவையே என்றும், கடற்கரையை நேரில் பார்வையிட்டு, நகர்மன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் அதுகுறித்து விவாதித்து, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோர் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது, நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் உடனிருந்தார். |