காயல்பட்டினம் நகருக்குத் தேவையான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா 02.01.2012 அன்று கோரிக்கைகளை நேரில் முன்வைத்துள்ளார்.
அம்மனுவின் வாசகங்கள் பின்வருமாறு:-
மதிப்பிற்குரிய ஆட்சியருக்கு,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காயல்பட்டணம் நகர்மன்றத்திற்கு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
என்னுடன் வார்டு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்கள் பதவிக் காலமான ஐந்தாண்டுகளில் - காயல்பட்டணம் நகர்மன்றத்தை ஒரு முன்மாதிரியான நகர்மன்றமாக உருவாக்க நாங்கள் அனைவரும் உறுதி பூண்டுள்ளோம். இக்கனவை நனவாக்க மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் மேலான முழு ஒத்துழைப்பையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் நகர்மன்றம் சார்பாக கீழ்காணும் வேண்டுகோள்களை தங்கள் முன் சமர்பிக்கிறோம்.
01) காயல்பட்டணம் நகர்மன்றப் பணிகள், போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. காலி இடங்களை நிரப்பி, புதிய பணியாளர்களை பணியமர்த்த நகர்மன்றம் சார்பாக அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசரத்தை கருத்தில் கொண்டு பணி நியமனங்களை துரிதப்படுத்தும்படி அரசுக்கு பரிந்துரைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
02) அண்மையில் நகரில் பெய்த மழை காரணமாக பல சாலைகள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக - நெடுஞ்சாலைகளும் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுகின்றன. ஆகவே காயல்பட்டணம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் துரிதப்படுத்த உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
03) காயல்பட்டணத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பலர் - தங்கள் பெயரை அரசு பட்டியலில் (Below Poverty Line - BPL - List) இணைக்க முடியாமல் உள்ளனர். அவர்களின் பெயர்களை அரசின் BPL பட்டியலில் இணைத்திட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
04) நகரில் புதிய குடும்ப அட்டை, பயன்பாட்டில் உள்ள அட்டையில் திருத்தங்கள் ஆகிய பணிகளுக்காக பலர் காத்துள்ளனர். அச்சேவைகளை மக்கள் விரைவாகப் பெற்றிட ஆவன செய்யும்படியும் அதற்கான சிறப்பு முகாம்களை நடத்துமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
05) மாவட்ட / மாநில / மத்திய நிர்வாகங்களின் வளர்ச்சி திட்டங்களில் - முன்மாதிரி நகர் தேர்வு விசயங்களில் - காயல்பட்டணம் நகராட்சிக்கு முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
06) மாநில / மத்திய அரசாங்கங்களின் வளர்ச்சி திட்டங்கள் காயல்பட்டணம் நகர மக்களை முழுமையாக சென்றடைந்திட - அனைத்து ஒத்துழைப்புகளையும் எங்கள் நகர்மன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட ஆயத்தமாக உள்ளது. அத்திட்டங்கள் குறித்த முழு விபரங்களையும் அதிகாரிகள் முறைப்படி உரித்த நேரத்தில், நகர்மன்றத்திற்குத் தெரியப்படுத்திட ஆவன செய்யம்படி கேட்டுக்கொள்கிறோம்.
07) காயல்பட்டணத்தில் நிறைவேற்றப்படும் / நிறைவேற்ற திட்டமிடப்படும் அனைத்து அரசுநல திட்டங்கள் குறித்தும், நகர்மன்றத்திற்கு முழுமையான தகவல்களை வழங்கி, நகர்மன்றத்தின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும் அவற்றை நிறைவேற்றும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
08) மகளிர் மேம்பாட்டு திட்டங்களில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி சாதாரண பெண்களை சாதனை பெண்களாக்கும் முயற்சியில் காயல்பட்டணத்திற்கு முன்னுரிமை வழங்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
09) மத்திய / மாநில அரசுகளால் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் காயல்பட்டணம் மக்களுக்கு முழுமையாக சென்றடைய ஆவன செய்யும்படி தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
10) மின்சார கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினைக் குறைப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினை ஊக்குவிப்பதையும் குறிக்கோளாக கொண்டு தற்போதுள்ள தெருவிளக்குகளை சூரிய சக்தி விளக்காக மாற்றம் தமிழக அரசின் திட்டத்தில் காயல்பட்டணத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.
11) ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக பயன்பெறும் காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், நிரந்தர பெண் மருத்துவர் (DGO)-ஐ நியமனம் செய்யவும் உடனடியாக ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
12) காயல்பட்டணம் நகராட்சியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட கிளை நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்து அதில் மகளிருக்கான தனிப்பிரிவினை அமைத்துதரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர காயல்பட்டணம் நகர்மன்றம் சார்பாக தங்களை பணிவன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு கோரிக்கை வாசகங்கள் அமைந்திருந்தன. காயல்பட்டினத்தை இணைக்கும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கப்படுவது குறித்த கோரிக்கையும் இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
M.ஜஹாங்கீர்,
காயல்பட்டினம். |