மூன் டிவி நடத்திய மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மூன் டிவியின் சார்பில், “ஆற்றல் மிகு ஹாஃபிழ் யார்?” என்ற தலைப்பில் திருக்குர்ஆன் மனனப் போட்டி, தொலைக்காட்சி வழியே இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. 30 பாகங்களைக் கொண்ட திருக்குர்ஆனிலிருந்து பத்து பத்து பாகங்களாக தனித்தனியே கேள்விகளை உள்ளடக்கி முதல் சுற்று நடைபெற்றது. 42 ஹாஃபிழ்கள் (திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்கள்) கலந்துகொண்ட இச்சுற்றிலிருந்து 23 ஹாஃபிழ்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாயினர்.
பின்னர், பதினைந்து பதினைந்து பாகங்களாக நடைபெற்ற இரண்டாம் சுற்றில் கலந்துகொண்ட 23 பேரிலிருந்து 10 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். அவர்களில் எட்டு மாணவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்களாவர். மற்ற இருவரில் ஒருவர் கீழக்கரையையும், மற்றொருவர் கம்பம் நகரையும் சார்ந்தவர்கள்.
இவர்களுக்கான இறுதிச் சுற்றுப்போட்டி 29.12.2011 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு, கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்ணாடி வாப்பா அரங்கில் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஷரீஅத் நீதிமன்றத்தின் தலைவர் அல்லாமா கே.எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் ஜமாலீ, கீழக்கரை தைக்கா அரூஸிய்யா அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் மஹ்லரா அரபிக்கல்லூரி மற்றும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
துபை இஸ்லாமிய விவகாரத்துறையின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஒமர் எம் அல் கத்தீப் தலைமை நடுவராகவும், மத்ரஸா மர்கஸுல் உலூம் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.அப்ரார் அஹ்மத் காஸிமீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ சித்தீக் அலீ பாக்கவீ ஆகியோர் இதர நடுவர்களாகவும் கடமையாற்றினர்.
அல்ஹாஜ் செய்யித் அப்துல் காதர் (சீனா தானா) வரவேற்புரை நிகழ்த்தினார். மூன் டிவி நிகழ்ச்சிகளின் தலைமை ஆலோசகர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்லரீ நிகழ்ச்சி குறித்த அறிமுகவுரையாற்றினார். துபை இ.டி.ஏ. குழும நிறுவனத்தின் துணைத்தலைவர் ஈஸா அல்குரைர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற மறைகுர்ஆன் மனனப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொண்ட பத்து மாணவர்களில், மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்றார். அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
கீழக்கரையைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஜாஃபர் ஹமீத் இரண்டாமிடத்தைப் பெற்றார். அவருக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
கம்பம் நகரைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், காயல்பட்டினம் ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் ஹாஃபிழா ஜெய்னப் ஆலிமா முஅஸ்கரிய்யா ஆகிய நால்வரும் மூன்றாமிடத்தைப் பெற்றனர். அவர்களுக்கு தலா ரூபாய் பதினைந்தாயிரம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கழைக்கழகத்தின் Pro Chancellor அல்ஹாஜ் ஆரிஃப் புஹாரி ரஹ்மான் கேடயங்களை வழங்கினார். கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபிக்கல்லூரியின் நிறுவனர் அல்ஹாஜ் செய்யிது எம்.ஸலாஹுத்தீன் பரிசுகளை வழங்கி ஆசியுரை நிகழ்த்தினார்.
மவ்லவீ எம்.ஸாலிஹ் சேட் பாக்கவீ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மூன் டிவியின் க்ரியேட்டிவ் ஹெட் எம்.ஒய்.ஆஸிஃப் அஹ்மத் குரைஷீ, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். |