காயல்பட்டினத்தின் குடிநீராதாரம் குறித்த விபரங்களை அறிந்திடும் பொருட்டு, இரண்டாவது பைப்லைன் திட்டம் மூலம் நீர் வினியோகிக்கப்படுவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொன்னன்குறிச்சி குடிநீர் வினியோகப் பகுதி மற்றும் ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் காயல்பட்டினம் அபிவிருத்தி குடிநீர்த் திட்ட தெளிவு நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, கடந்த 10.11.2011 அன்று பார்வையிட்டு, துறைசார் அதிகாரிகளிடம் பல விபரங்களைக் கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தான் பெற்ற விபரங்களை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் அறியச் செய்யும் நோக்குடன், முன்னதாக அனைத்து உறுப்பினர்களுக்கும அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் (ஃபிட்டர்) நிஸார் ஆகியோரை, 05.01.2012 அன்று காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திலிருந்து, ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, தாமிரபரணி ஆற்றிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக தண்ணீர் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திற்கு குடிநீர் வந்து சேருவதை அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர், அங்கிருந்து மோட்டார் மூலம் சுத்திகரிப்பு படுக்கைக்கு தண்ணீர் அனுப்பப்படும் முறைகளைப் பார்வையிட்டனர்.
பின்னர், சுத்திகரிக்கப்பட்ட நீரில் கிருமி நாசினி - ப்ளீச்சிங் மருந்து கலக்கப்படுவதைப் பார்வையிட்டனர்.
பின்னர், அங்கிருந்து காயல்பட்டினத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பப்படும் முறை, தண்ணீர் வினியோகத்தின் ஒரு வினாடிக்கான அளவு, ஒரு நாள் முழுக்க அனுப்பப்பட்ட அளவுகளைக் காண்பிக்கும் மீட்டர் கருவி ஆகியவற்றையும், வினியோகக் குழாய்களையும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
பின்னர், அலுவலகத்தில் ஊழியர்கள் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சுவைத்துப் பார்த்தனர்.
பின்னர், தாங்கள் சுவைத்த இந்த தண்ணீருக்கும், காயல்பட்டினத்தில் வினியோகிக்கப்படும் தண்ணீருக்கும் நிறைய வேறுபாடுகளை உணர முடிவதாகத் தெரிவித்த அவர்கள், நகரிலுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குறிப்பிட்ட காலத்தில் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டால், இதே சுவையை ஊரிலும் பெறலாம் என்று கருதுவதாகத் தெரிவித்தனர்.
பின்னர், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கேட்ட விபரங்களுக்கு, அங்கு தலைமைப் பணியிலிருக்கும் உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம் பின்வருமாறு விளக்கமளித்தார்.:-
*** காயல்பட்டினத்திற்கு தினமும் 20 லட்சம் லிட்டரிலிருந்து 23 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது... இதற்காக, தினமும் 17 மணி நேரம் மின் மோட்டர் இயக்கப்படுகிறது...
*** பகலில் ஒரு நிமிடத்திற்கு 2200 லிட்டர் என்ற அளவில் (வேகத்தில்) தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது... இரவில் பை-பாஸில் தண்ணீர் திறக்கப்படும்போது நிமிடத்திற்கு 2500 லிட்டர் வீதம் வேகமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது...
*** வினியோகிக்கப்படும் குடிநீருக்கு, ஆயிரம் லிட்டருக்கு (ஒரு கிலோ லிட்டருக்கு) ரூ.4.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
*** இந்த தண்ணீர் வினியோகத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி சுமார் 55 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது...
போன்ற விபரங்களை அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்குமாறு நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரியபோது, சுத்திகரிப்பு படுக்கைகளின் (ஃபில்டர் பெட்) எண்ணிக்கையை அதிகரிக்காமல், வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிப்பது சாத்தியமற்றது என்றார் அவர்.
தனது பணிக்காலத்தில், இதுவரை எந்த ஊரிலிருந்தும் இப்படி தலைவர் உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்தமாக வந்து பார்வையிட்டு விசாரித்ததேயில்லை என்று அப்போது அவர் வியந்து பாராட்டினார்.
நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் முறைகள் குறித்து கேட்கப்பட்ட விபரங்களுக்கு, காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் விளக்கமளித்தார்.
தினமும் 20 முதல் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக, ஆத்தூர் குடிநீரேற்று நிலைய உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளபோதிலும், அதேயளவு தண்ணீர் காயல்பட்டினத்தில் பெறப்படுவதை அளக்கும் கருவியை நிறுவ, காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள ஓரிடத்தில் 8க்கு 8 என்ற அடிக்கணக்கில் அளவீட்டறை (மீட்டர் ரூம்) நகராட்சியால் கட்டப்பட்டதாகவும், அவ்விடம் தனியாருக்குச் சொந்தமானது என அறியப்பட்டதால் அங்கு மீட்டர் பொருத்த இயலாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வரும் வழியில், காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியிலுள்ள அவ்விடத்தின் உரிமையாளரை, அவரது இல்லத்தில் நகர்மன்றக் குழுவினர் நேரில் சந்தித்து, நகர்நலன் கருதி இடத்தை விட்டுத்தருமாறும், இதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோளைக் கேட்டறிந்த, அவ்விடத்தின் உரிமையாளர் குடும்பத்துப் பெரியவரான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஏற்கனவே தனது முன்னோர்கள் இந்த ஊருக்காக பல ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியுள்ளதாகவும், அவர்களின் வழியைப் பின்பற்ற தானும், தன் குடும்பத்தினரும் என்றும் ஆவலோடு இருப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து தன் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து விரைவில் தகவல் தருவதாகவும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எஸ்.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்கள் இக்குழுவில் அடங்குவர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம்.
கூடுதல் படம் இணைக்கப்பட்டது. (07.01.2012 - 23:15hrs) |