காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியரின் 2011-2012ஆம் ஆண்டு பருவத்திற்கான முகாம் 22.12.2011 அன்று துவங்கி, 28.12.2011 தேதியுடன் நிறைவுற்றது.
இம்முகாம் குறித்து, அக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.187 பிரிவின் 2011-2012ஆம் ஆண்டுக்கான சிறப்பு முகாமின் தொடக்க விழா 22.12.2011 வியாழக்கிழமை அன்று நடந்தது.
அவ்விழாவில் கல்லூரியின் இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி இ.பானுமதி வரவேற்புரை வழங்க, முகாம் விளக்க உரையை முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி எம்.சிவரஞ்சனி வழங்கினார். கல்லூரி துணைச் செயலர் ஜனாப் டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.அஹமது இஸ்ஹாக் அவர்கள் வாழ்த்துரை கூற, அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வரும், நாட்டு நலப்பணித்திட்ட தலைவியுமான டாக்டர். திருமதி. மெர்ஸி ஹென்றி மற்றும் கானம் பேரூராட்சித் தலைவர் திரு. வே.செந்தமிழ் சேகர், அருள்நெறி இந்து உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டாக்டர். திருமூலன், அருள்நெறி இந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி. எஸ்.ஸ்ரீமதி, சோனகன்விளை பேரூராட்சி உறுப்பினர் திரு. டி.தங்கவேல் ராஜ், சோனகன்விளை தொழிலதிபர் திரு. ஏ.பி.ரமேஷ், நீள்புரம் தொழிலதிபர் திரு. சுடலைகுமார் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு முகாம் சிறப்புற வாழ்த்தினார்கள். ஊர் பொதுமக்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.
23.12.2011 வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை யோகா பயிற்சி நடைபெற்றது. பின்னர் நமது நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மதியம் 2.00 முதல் மாலை 5.00 மணி வரை நாள்தோறும் கணினி பயிற்சி வகுப்புகள் எம் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகளால் சுமார் 40 சிறுவர், சிறுமிகள் பயனடைந்தனர். மாலை 6.00 மணி அளவில் திருமலையப்பபுரம் இந்து அருள்நெறி தலைமையாசிரியரான டாக்டர். மு. திருமூலன் அவர்கள் மக்கள் மத்தியில் சுற்றுச் சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
24.12.2011 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்லூரி மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடாந்து மாலை 6.00 மணி அளவில் சோனகன்விளையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாளர் திரு. ஆர். தனராஜ் அவர்கள் மக்கள் மத்தியில் வங்கி லோன் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
25.12.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சுந்தரம் நல்லதம்பி மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஜெ. சுப்பிரமணியன் சிறுநீரகவியல் நிபுணர் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதியம் 2.00 மணி அளவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வி கு.துரைசெல்வி அவர்கள் ஆளுமைத் திறன் பற்றி கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடினார். மாலை 6.00 மணி அளவில் வளமான பாரதத்தை உருவாக்குவதற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் இளைஞர்களே! முதியவர்களே! என்ற தலைப்பில் ஆதித்தனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். திரு. கு.கதிரேசன் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதன் முடிவில் இருகரம் சேர்ந்தால் தான் ஒசை வரும் என்பது போல வளமான பாரதத்தை உருவாக்குவதற்கு முதியவர்களும் இளைஞர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.
26.12.2011 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை எம் கல்லூரி மாணவிகள் உடல் உழைப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மதியம் 2.00 - மாலை 5.00 மணி வரை கணினி பயிற்சி வகுப்புகள் எம் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி அளவில் இன்றைய சூழலில் கல்வியின் அவசியம் குறித்து காட்டுநாயக்கன்பட்டி, தமிழாசிரியை திருமதி. இரா. ஜாக்குலின் இசபெல்லா அவர்கள் கல்வியின் அவசியம் குறித்து விவாpத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
27.12.2011 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி அளவில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.187 மற்றும் கானம் பேரூராட்சி அலுவலகமும் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் எம் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துரைத்தனர். மாலை 6.00 மணி அளவில் பூச்சிக்காடு பள்ளி தலைமையாசிரியர் ஆபேத் நேகொ அவர்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஜி. சண்முக சுந்தர குமார், மனித உரிமைகள், பிறப்பு, இறப்பு பதிவு உரிமை மற்றும் இலவச சட்ட ஆலோசனை பெறும் உரிமை பற்றி பொதுமக்களிடையே மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியல் கல்லூரியின் உடற்கல்வியல் துறை பேராசிரியை திருமதி. அ.கிறிஸ்டி ஆனந்தி ஹேமலதா அவர்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை பற்றி அழகாக எடுத்துரைத்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திரு. செ.சுவாமிதாஸ் அவர்கள் சிறப்பு முகாமின் பணிகளை மேற்பார்வையிட்டு முகாம் சிறப்புற வாழ்த்துக்களை கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
28.12.2011 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை யோகா பயிற்சி நாள்தோறும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10.00 மணிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 187ன் சார்பாக சோனகன்விளை ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏழு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா மாலை 6 மணி அளவில் நடந்தேறியது. இவ்விழாவிற்கு வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்றார்கள். கல்லூரியின் செயலாளர் ஹாஜி டபிள்யு.எம்.எம்.மொகுதஸீம் அவர்களும், கல்லூரியின் துணை செயலாளர் ஜனாப் டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.அஹமது இஸ்ஹாக் அவர்களும் முன்னிலை வகித்தார்கள். கல்லூரி முதல்வரும் நாட்டு நலப்பணித் திட்ட தலைவியுமான முனைவர் திருமதி. மெர்ஸி ஹென்றி அவர்கள் வாழ்த்துரை வழங்கி அமர அதைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வி. கு.துரைசெல்வி வரவேற்புரை வழங்கினார். அதைதொடர்ந்து அருள்நெறி இந்து உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் திரு. மு. திருமூலன் அவர்களும் வரவேற்று அமர விழா இனிதே ஆரம்பமானது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் திரு. இ.பாஸ்கர் பனிராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி எம். சிவரஞ்சனி முகாம் அறிக்கை வாசித்தார். அதன் பிறகு முகாமில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் பொருளியில் துறை விரிவுரையாளர் திருமதி. கே.சூரத் ஷிபா அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் முகாம் நிறைவு விழா இனிதே முடிவுற்றது.
இவ்வாறு, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |