ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து, அபூதபீ காயல் நல மன்றம் என்ற பெயரில், புதியதோர் அமைப்பு, இம்மாம் 13ஆம் தேதி நடத்தப்படும் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அமைப்பிற்கு வாழ்த்து தெரிவித்தும், அதன் முதல் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், துபையில் செயல்படும் அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வாழ்த்துகிறோம்!
ஐக்கிய அரபு அமீரகங்களின் தலைநகரான, அபூதபீயில் புதிதாக 'காயல் நல மன்றம்' உருவாகும் செய்தி இவ்வலைத்தளத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியானதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.
சென்ற வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற எம்மன்றத்தின் மாதந்திர செயற்குழுக் கூட்டத்திற்கு புதிய மன்றத்தின் நிர்வாகிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் பேசவேண்டிய விசயங்களுக்குப்பின், புதிய மன்ற நிர்வாகிகளின் கருத்துகள் பரிமாறப்பட்டன. அமீரக காயல் நலமன்றத்தின் கடந்த கால பணிகள் பற்றியும், அபூதபீ காயல் நல மன்றம் அமைய வேண்டியதின் அவசியம் பற்றியும் மன்றத் தலைவர் ஜனாப் J S A புஹாரி அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்தியதோடு, தனது ஐந்து வருட கால கனவு தற்போதுதான் செயல்வடிவம் பெறுகிறது என்றும் கூறினார்.
மேலும் அபூதபீயில் காயல் நல மன்றம் அமைந்ததே நமது துபை மன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் பேரில் தான் என்பதனை தலைவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இப்புதிய மன்றத்தின் செயற்பாடுகள், பணிகள் போன்ற விபரங்களை, அவ்வப்போது அமீரக காயல் நலமன்றத்தினருடன் கலந்து ஆலோசித்து செய்வதென்றும், இம்மாதம் 13ம் தேதி நடைபெறவிருக்கும் அபூதபீ காயல் நல மன்றத்தின் துவக்க விழாவிற்கு, அமீரக காயல் நலமன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறும் புதிய மன்றத்தின் தலைவர் மௌலவி, அல்ஹாபிள் M A ஹபீப் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி தனது உரையில் தெரிவித்தார்.
இன்ஷா அல்லாஹ், வருகிற வெள்ளிக்கிழமை உதயமாக இருக்கும் அபூதபீ காயல் நல மன்றம் சிறப்பாக இயங்குவதற்கும், நமதூருக்குத் தேவையான அனைத்து நற்காரியங்களையும் தொடர்ந்து செய்வதற்கும் அமீரக காயல் நல மன்றம் மனமார வாழ்த்துகிறது.
இப்புதிய மன்றத்தின் சேவைகளில், எம் மன்றம் எல்லாவிதமான ஒத்துழைப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அபூதபீ, அல்ஐன், ருவைஸ் போன்ற பகுதிகளில் வசிக்கும் நம் காயல் சகோதரர்கள், இம்மன்றத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து காரியங்களிலும் முழுமையாக உங்களை ஈடுபடுத்தி, இம்மன்றத்தினை பலப்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம். வஸ்ஸலாம்,
இவ்வாறு, அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |