காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட DCW ஆலையின் - ரூபாய் 500 கோடி மதிப்பிலான உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் விளைவுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், 27.12.2011 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கலந்தாலோசனைக் கூட்டம்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட DCW ஆலையின் - ரூபாய் 500 கோடி மதிப்பிலான உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் விளைவுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், 27.12.2011 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
Cancer Fact Finding Committee - CFFC கூட்டிய இக்கூட்டத்தில், நகரின் ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், சமூக நல ஆர்வலர்கள், வெளிநாட்டு காயல் நல மன்றங்களின் நிர்வாகிகளுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
CFFCயின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தில் சங்கமித்திருந்த அனைவரையும் கூட்டத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம், கூட்ட அறிமுகவுரையாற்றி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
CFFC நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:
அதனைத் தொடர்ந்து, CFFC துவக்கப்பட்டதன் நோக்கம், அந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இதுவரை CFFCயால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் சுருக்கமாக எடுத்துரைத்தார். அப்போது அவர் தெரிவித்த முக்கிய தகவல்களின் சுருக்கம் பின்வருமாறு:-
கேன்சர் சர்வே:
சஊதி அரபிய்யாவிலுள்ள ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நற்பணி மன்றங்களின் வெண்டுகோளை ஏற்று, நகரில் புற்றுநோய் பாதிப்பு - பரவல் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக, இக்ராஃ கல்விச் சங்கம், 40 பெண் தன்னார்வலர்களைக் கொண்டு 10 தினங்களில் கேன்சர் சர்வேயை நகரின் அனைத்து வீடுகளிலும் நடத்தி முடித்துள்ளது. இந்த சர்வே மூலம், நகரில் என்னென்ன வகையான புற்றுநோய் பாதிப்புகள் உள்ளன, பாதிக்கப்பட்ட எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், எத்தனை பேர் குணம் பெற்றுள்ளனர் என்பன போன்ற தகவல்கள் பிரித்தெடுத்து, கோப்புகளாக வைத்துள்ளது. இத்தகவலை அறிந்து, இதனை CFFC மிகுந்த வேதனையுடனும், கவலையுடனும் கவனத்திற் கொண்டு தனது செயல்களை விரைவு படுத்தியது.
இயற்கை மாசு மற்றும் கலப்பட உணவு குறித்த சோதனை:
நகரில் நீர் மாசு, காற்று மாசு குறித்தும், பலசரக்கு கடைகளில் விற்கப்பட்டு வரும் பல்வேறு வகையான எண்ணெய், நெய் போன்ற பொருட்களிலுள்ள கலப்படம் குறித்தும், அரசு அங்கீகாரம் பெற்றுள்ள ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காற்று மாசுபடுவதை ஆய்வு செய்யும் Air Pollution Test நகரில் எநதெந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது, பலதரப்பட்ட எண்ணெய் ரகங்கள் எந்தெந்த கடைகளில் வாங்கப்பட்டது, அவை எங்கு பரிசோதிக்கப்பட்டன போன்ற விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்த - படங்களுடன் கூடிய ஆவணங்களை கூட்டத்தில் காண்பித்தார்.
நகராட்சிக்குக் கோரிக்கை:
இந்த விபரங்களைக் கருத்திற்கொண்டு, நகரின் அனைத்து கடைகளிலும் திடீர் சோதனை நடத்தி, குற்றங்களைக் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடந்த நகராட்சியின்போது நகராட்சித் தலைவரிடம், இந்த ஆவணங்கள் அனைத்தையும் அளித்து கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், நடப்பு நகராட்சியிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும், இந்த ஆய்வுகள் போக, இன்னும் இரண்டு முக்கிய ஆய்வுகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
அடையாறு புற்றுநோய் மையத்துடன் கூட்டு செயல்திட்டம்:
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவருமான பத்மபூஷன் டாக்டர் ஷாந்தா அவர்களை, தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களின் உதவியுடன் காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் - புற்றுநோய் குறித்த நிகழ்ச்சி CFFC- யால் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நகரில் நிரந்தரமாக (Papsmear, Breast, Oral) Cancer Screening செய்திடவும், Cancer Registryக்காக நிரந்தர அலுவலகம் அமைத்து செயல்படவும் CFFC முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு, அடையார் புற்றுநோய் மையம் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிட வாக்களித்துள்ளது.
CFFC பெயர் திருத்தம்:
இப்பணிகளையும், இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் இன்னபிற நடவடிக்கைகளையும் வெறுமனே ஒரு குழுவாகச் செய்திடாமல், ஓர் அமைப்பாக செய்திடும் பொருட்டு, Cancer Fact Finding Committee - CFFC என்ற பெயரை சிறிது மாற்றி, Cancer Fact Finding Centre - CFFC என்ற பெயரில் செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கெதிரான பொது நல அமைப்புகளின் நிகழ்ச்சிகள்:
புற்றுநோய் விழிப்புணர்வுச் சேவையின் ஒரு பகுதியாக, கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில், ஆண்டுக்கு இருமுறை புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் (Cancer Screening Camp) நடத்தப்பட்டு, புற்றுநோய் ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் இம்முகாம் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில், ‘புற்றுக்கு வைப்போம் முற்று‘ என்ற புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த ஆவணப்படம் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது.
நகரில் புற்றுநோய் பரவல் குறித்து விவாதிப்பதற்காக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், கே.எம்.டி. மருத்துவமனையில் மருத்துவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இவை, CFFCயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் சுருக்கம்.
அடுத்து, DCW ஆலை விரிவாக்கத் திட்டம், தற்போது அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவற்றின் அளவுகள், அவற்றால் ஏற்படும் மாசுகளின் அளவுகள் குறித்து, CFFC - யின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, DCW வெளியேற்றும் கழிவு நீரை எடுத்து பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டதன் அடிப்படையில் பெறப்பட்ட அறிக்கையில், அக்கழிவு நீரில் கனிசமான அளவு Mercury - பாதரசம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய விளைவுகள் சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் என்றும், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் விளக்கினார்.
பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்ட விபரங்கள்:
அதனைத் தொடர்ந்து, DCW விரிவாக்கம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, CFFC ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-
நிகழ்வில் கலந்துகொண்டோர்:
அக்கூட்டத்தில், CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, எஸ்.கே.ஸாலிஹ், இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித், ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் பொறியாளர் ஏ.பி.ஷேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, காயல்பட்டினம் 01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் தலைமையில் கோமான் ஜமாஅத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
DCW ஆலை செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு:
DCWவின் விரிவாக்கத் திட்டங்களுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
அந்த ஆலையின் PVC தயாரிப்புக்கு முறையான அனுமதி பெறப்படாமல், சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது...
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசு ஏற்படுத்தும் உள்நாட்டு நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்திகள் செய்யப்பட்டு வருகிறது...
ஆலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளை, நீராதாரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலக்கக் கூடாது என்ற அரசு விதி குறித்து சிறிதும் கண்டுகொள்ளப்படாமல், காயல்பட்டினம் கடலில், DCW கழிவு நீர் பகிரங்கமாக கலக்கப்படுகிறது...
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட இந்த DCW ஆலையின் எந்த ஆவணங்களிலும், காயல்பட்டினத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது...
உற்பத்தி விரிவாக்கம் குறித்து DCW ஆலையில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் உண்மையல்லாத பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன...
DCW ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் நச்சுத்தன்மை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு நிறுவனங்களே வெளியிட்டுள்ள பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளன...
ஆகிய வாதங்களை, தகுந்த ஆவண ஆதாரங்களுடன் அவர்கள் விளக்கிப் பேசினர். இந்த உரைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கூர்ந்து கவனித்தார். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திப் பதிவுகள்:
DCW ஆலை விரிவாக்கம் குறித்த இந்த பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததாக அடுத்தடுத்த தினங்களில் வெளியான நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இவ்வாறு, எஸ்.கே.ஸாலிஹ் தனதுரையில் தகவல்களைத் தெரிவித்தார்.
சுற்றுப்புற ஊர் மக்களும் கடும் எதிர்ப்பு:
அதனையொட்டி கருத்து தெரிவித்த, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், காயல்பட்டினம் மக்கள் மட்டுமின்றி, பேயன்விளை, புன்னக்காயல், தூத்துக்குடி பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களில் பலரும், இத்தொழிற்சாலையின் நடப்பு உற்பத்தியால் பொதுமக்கள் அடைந்துள்ள பாதிப்புகளை விளக்கி, அதன் விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான காரணங்களையும் முன்வைத்ததை நினைவுகூர்ந்தார்.
ராஜ் நியூஸ் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி:
அதனைத் தொடர்ந்து, DCW ஆலையால் காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, CFFCயால் தயாரிக்கப்பட்ட ஆவண ஆதாரங்களின் அடிப்படையில், அண்மையில் ராஜ் நியூஸ் தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் தான் அளித்த விளக்கங்கள் குறித்து, காயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் டி.கிஸார் விளக்கிப் பேசினார்.
அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பிறகு அத்தொலைக்காட்சிக்கும், தனக்கும் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிக் கூறினார்.
பிரமுகர்கள் உரை:
அதனைத்தொடர்ந்து, DCW ஆலை தயாரிக்கும் ரசாயனப் பொருட்களின் தன்மைகள் மற்றும் அதன் கழிவுகளால் விளையும் பேராபத்துகள் குறித்து பொறியாளர் ஹமீத் சுல்தான் நீண்ட நேரம் விளக்கிப் பேசினார்.
உள்ளூர் மக்களுக்கு கூடுதல் அக்கறை வேண்டும்...
அடுத்து உரையாற்றிய ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, காயல்பட்டினம் நகரின் சுகாதாரம் பற்றி விரிவாக விளக்கியதோடு, இவ்விஷயங்களில் வெளிநாடுகளில் வாழும் காயலர்கள்தான் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுவதாகவும், உள்ளூர் மக்களும் இதுபோன்ற விஷயங்களில் அதிக அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் என்றும், ஒரு செயல்திட்டம் வெற்றியடைவதற்கு ஜனபலம், பணபலம், மனபலம் ஆகிய மூன்றும் இன்றியமையாதவை என்றும் தெரிவித்தார்.
அடுத்து, கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் உரையாற்றினார்.
உண்மைக்கு மாற்றமான மருத்துவ அறிக்கைகள்...
தமது அறக்கட்டளையின் சார்பில் கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த துவக்கத்தில் முயற்சித்தபோது, ஒரு குறிப்பிட்ட கண் மருத்துவமனையின் மூலமே முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டதாகவும், அம்மருத்துவமனையின் பரிசோதனை முடிவில் தரப்படும் அறிக்கையில், யாருக்கும் பாதிப்பில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்தின் பேரில் பிற கண் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தபோது, பலருக்கு கண்ணில் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தீர விசாரித்தபோது, எவ்வித பாதிப்புமில்லை என அறிக்கையளிக்குமாறு வலியுறுத்தி, அப்பாதிப்பிற்குக்காரணமானவர்கள் சார்பில், குறிப்பிட்ட அம்மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அறிய வந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது நகரில் ஏராளமானோர் காசநோய் பாதிப்பிற்குட்பட்டுள்ளதாக ஒரு மருத்துவர் அளித்த தகவலை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், மக்கள் சக்தியைத் திரட்டி, DCW தொழிற்சாலைக்கெதிராக CFFC போராட வேண்டும் என்றும், தொழிற்சாலையை மூடச்செய்வது அதன் நோக்கமல்ல; மாறாக, சட்டத்திற்குட்பட்ட வகையில் அத்தொழிற்சாலையை செயல்படச் செய்வதே அதன் நோக்கமென்றும், இவ்விஷயத்தில் முன்வைத்த காலை பின்வைக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு அமைப்பின் (KCGC) ஒருங்கிணைப்பாளர் ஹாஜி குளம் முஹம்மத் இப்றாஹீம் உரையாற்றினார்.
நம் சந்ததியைக் காப்பது நமது கடமை...
இதுபோன்ற சூழ்நிலைகளில் இரண்டு விதமான சக்திகள் தேவை... ஒன்று ஆக்கப்பூர்வமான சக்தி... மற்றொன்று அழிவைத் தடுக்கும் சக்தி...
1986இல் போபாலில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவின் மூலம் ஏற்பட்ட கொடிய பாதிப்புகளையும், அழிவுகளையும் நாமறிவோம்... அச்சமயம், கருவுற்றிருந்த பல பெண்களின் கரு வயிற்றிலேயே அழிந்துவிட்ட கொடுமையையெல்லாம் நாம் அறிந்துள்ளோம்... இந்நிகழ்வுகளையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, நமது - நம் சந்ததிகளது உடல் நலனை நினைத்து மிகவும் அச்சமாக உள்ளது...
நம் எதிர்கால சந்ததிகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் சில நடவடிக்கைகளை எடுத்தேயாக வேண்டும்... இத்தொழிற்சாலையின் இயக்கத்தை நிறுத்த இயலாவிட்டாலும், இதன் விரிவாக்கத்தைத் தடுக்க முடியும்...
போபாலில் வாழ முடியாமல் இன்றளவும் மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்... அந்த விஷவாயுக் கசிவின் தாக்கம் இன்றளவும் அங்கே பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது... அந்நிலை நமக்கும் ஏற்பட்டு விடாமல் இறைவன் காப்பாற்ற வேண்டும்...
அனைத்து பலமும் இறையருளால் நம்மிடம் உள்ளது... அனைவரும் ஒன்றிணைந்து, ஒத்துழைத்து, இந்த விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வோம்... இதற்காக அடையாள உண்ணாவிரதம் இருப்போம்... கூடங்குளம் அணு மின் நிலையம் விஷயத்தில் மக்கள் செயல்படுவதைப் போன்று செயல்படுவோம்... இறைவன் வெற்றியைத் தருவான்...
இவ்வாறு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குளம் முஹம்மத் இப்றாஹீம் உரையாற்றினார்.
கலந்துகொண்டோர் கருத்துரை:
அதனைத் தொடர்ந்து, சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் அமைப்பின் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.
இணைந்து செயலாற்றுவது அவசியம்...
நாம் எடுக்கும் இம்முயற்சி, நமதூரின் 55,000 பேரைப் பாதுகாக்கும் அரிய முயற்சி... இங்கே, பல பெரிய பொறுப்புகளிலுள்ள பல்வேறு முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறீர்கள்... இந்த DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்... நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
இவையனைத்திற்கும் தேவையான நிதியாதாரத்தை அனைவரும் இணைந்து தாராளமாக வழங்கிட வேண்டும்... நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்களைத் திரட்டி, அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்...
இம்முயற்சிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய நான் ஆயத்தமாக உள்ளேன்... பெரியோர்களடங்கிய ஐக்கியப் பேரவையும் ஒத்துழைப்பளிக்கும் என்று உறுதியளிக்கிறோம்...
நிதியாதாரத்தைத் திரட்டுவதென்பது ஒரு பெரிய விஷயமல்ல! நமதூரில் துணை மின் நிலையம் அமைய நம் மக்கள் தந்தது போல இவ்விஷயத்திற்கும் தருவார்கள்...
DCW நமது நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியில் மோசடி நடைபெறுகிறது... இது ஆதாரப்பூர்வமான செய்தி... அக்குறையையும் சரிசெய்ய வேண்டிய கடமை உள்ளது...
இவ்வாறு, சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்க செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.
அடுத்து, இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் ஹாஜி எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் உரையாற்றினார்.
பெண்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்...
பெரும்பாலும், சமூகத்தில் ஆண்களுக்கு எல்லா நிலைகளிலும் பெண்களே உறுதுணையாக இருக்க வேண்டிய நிலையிருப்பதால், இதுபோன்ற விஷயங்களில் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு அளித்து, இத்தொழிற்சாலையின் தீங்குகள் பற்றி அவர்களுக்கு முறையாக விளக்கினால், நாம் மேற்கொள்ளும் செயல்திட்டங்களை எளிதில் வெற்றிகரமாக செய்துமுடிக்கவியலும் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நல அறக்கட்டளை செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உரையாற்றினார்.
மிரட்டல்கள்...
தாம் தயாரித்த ‘புற்றுக்கு வைப்போம் முற்று‘ என்ற ஆவணப்பட குறுந்தகடு வெளியிடப்பட்ட பின்னர், மிரட்டல்களை சந்தித்ததாகவும், DCWவின் ஒரு மூத்த அதிகாரி தன்னிடம் மிரட்டல் தொனியில் பேசியதாகவும், அதன் ஒலிப்பதிவு தன்னிடம உள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் செயல்படும் DCWவின் அத்துமீறல்கள், விரிவாக்கத்திற்கெதிராக வலிமையுடன் போராட வேண்டுமென்றும், இதில் compromise செய்து கொள்ளக்கூடாது என்றும், நீண்ட நெடிய இப்போராட்டத்தில் எதிர்ப்புகளை சந்திக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் பேசினார்.
அடுத்து, இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ உரையாற்றினார்.
DCW ஆலைக்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் கலந்துகொள்ளும் பேரணி ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பெண்களையும் இதில் ஈடுபடுத்தி முழு வலியுமையுடன் போராட வேண்டும் என்றார்.
40 பெண் தன்னார்வலர்களைக் கொண்டு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட்ட கேன்சர் சர்வே, அந்நேரத்தில், சர்வே பணிகளை தடுத்திடும் வகையில் எதிர்கொண்ட மிரட்டல்கள், உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த எதிர்ப்புகளை சமாளித்தமை ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், CFFC பல எதிர்ப்புகளுக்கிடையில் செயலாற்றி வருவதாகவும், அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இது விஷயத்தில் இன்னும் வேகமாகவும் - அதே சமயத்தில் கட்டுப்பாட்டுடனும் செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர், பின்வருமாறு கருத்துக்களைத் தெரிவித்தனர்:-
சமாதானம் வேண்டாம்...
துவக்கமாக கருத்து தெரிவித்த அமீரக காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி துணி உமர், ''தம்பி முஜாஹித் சொன்னது போல் இவர்களுடன் எக்காரணம் கொண்டும் compromise பண்ணவே கூடாது என்றும், அப்படி comprmise செய்ய முற்படுபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்'' என்றும் கூறினார்.
கடையடைப்பு போராட்டம்...
அடுத்து கருத்து தெரிவித்த ஹாஜி ஜெஸ்மின் கலீல், இந்த ஆலையின் அத்துமீறல்களுக்கு எதிராக முதற்கட்டமாக ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த வேண்டும்! என்றார்.
மார்க்க உணர்வுகளுக்கு பாதிப்பு...
அடுத்து கருத்து தெரிவித்த மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, DCW ஆலை நிர்வாகத்தால் நடத்தப்படும் கமலாவதி பள்ளியினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். அங்கு பயிலும் பிள்ளைகளுக்கு தொழுதிட வழியில்லை; இன்று வரை அதற்கு அனுமதிப்பதுமில்லை என்றும், மக்களிடம் மார்க்க உணர்வு குன்றிவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
சட்ட ரீதியான செயல்பாடு அவசியம்...
அடுத்து கருத்து தெரிவித்த தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், CFFCயால் தயாரித்து தரப்பட்ட - DCWவின் விதிமீறல்கள், அது வெளியேற்றும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த 51 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை, தமது மன்றத்தின் சார்பில் தாய்லாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் தூதரிடம் அளித்து விளக்கமளித்ததாகவும், அப்போது அவர் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்த DCW ஆலை அரசியல் ரீதியாகவும், பண ரீதியாகவும் செயல்படுபவர்கள் என்பதால், சட்ட ரீதியாகத்தான் நாம் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மக்கள் இது விஷயத்தில் வலிமையுடன் போராட வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்கள் போராட்டம்தான் வெற்றி பெறும் என்பதற்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஓர் உதாரணம் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்ட அதே 51 பக்க அறிக்கையை உலக காயல் நல மன்றங்கள் மூலம் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்களில் சமர்ப்பிக்க CFFC சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இதுவரை சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அந்நாடுகளின் காயல் நல மன்றங்களுக்கு CFFC சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதர நாடுகளிலுள்ள தூதரகங்களிலும் அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு, கூட்டத்தில் கலந்துகொண்ட நகரப் பிரமுகர்கள் உரையாற்றினர். இறுதியாக, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கடையடைப்புப் போராட்டம்:
பல்வேறு விதிமீறல்களுடன் செயல்பட்டு வரும் DCW ரசாயன தொழிற்சாலையின் விரிவாக்கத்தை எதிர்த்து, துவக்கமாக காயல்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்தல்:
காயல்பட்டினம் நகர பொதுமக்கள் மட்டுமின்றி, DCW ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள - பாதிப்பை அஞ்சுகின்ற சுற்றுப்புற ஊர் மக்களையும் இணைத்து மக்கள் போராட்டத்தை நடத்துவதெனவும், இதில் பள்ளி மாணவர்களையும் இணைத்துக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த ரசாயன தொழிற்சாலையின் விதிமீறல்கள், அதன் கழிவுகளால் ஏற்படும் மாசுகள், பாதிப்புகள், அத்துமீறல்கள், இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் வெளியிட்ட ஆய்வறிக்கைகள் மற்றும் செய்திகளை ஒன்றுதிரட்டி, சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - நகர சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமைப்பு:
காயல்பட்டினம் நகரின் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் அமைப்பொன்றை ஏற்படுத்தி, அதனை அரசுப் பதிவு செய்து, அதன்மூலம் நகரின் சுற்றுப்புறச் சூழலை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான செயல்திட்டங்களை வகுத்து செயலாற்றவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - ஊடக ஒத்துழைப்பு:
மக்கள் நலன் கருதி செயல்பட விழையும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் செய்திகளாகத் தரப்படுகையில், ஊடகங்கள் அவற்றை வெளியிட்டு முழு ஒத்துழைப்பு வழங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 - அமைப்புகள், கட்சிகளுக்கு வேண்டுகோள்:
மக்கள் நலனைப் பற்றி அக்கறையில்லாமல், பொருளாதாரம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு செயல்பட்டு வரும் DCW ஆலையுடன் இணைந்து, எந்தவொரு மருத்துவ முகாமும் நடத்தக் கூடாது எனவும், அவர்களிடமிருந்து எந்தவிதமான நன்கொடைகளையோ, சன்மானங்களையோ, விளம்பரங்களையோ பெறுவதில்லை என்றும், நமதூரில் செயல்படும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் முடிவெடுத்து செயல்படுமாறு, CFFC அன்புடன் வேண்டுகிறது.
(DCW வினரால் நடத்தப்படும் மருத்துவ முகாம்களின் இறுதி அறிக்கையில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறும் பொய் அறிக்கையை தயாரித்து, அதனையே அரசுக்கு ''தங்களால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முகாம்களில் இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று ஆய்வறிக்கையாக அளிக்கவும் வாய்ப்புள்ளது. காரணம் ''காயல் நகரில் ஏராளமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டுள்ளனர்'' என்று DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்ட்த்தில் CFFC சார்பில் எடுத்துக்கூறப்பட்டபோது, “அப்படி எதுவும் தாங்கள் கேள்விப்படவில்லை” என்று இவர்கள் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது).
தீர்மானம் 7 - சட்ட நிபுணர் குழு:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும இதர நடவடிக்கைகளுக்காக சட்ட நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துஆ, ஸலவாத், கஃப்ஃபாராவுடன், இரவு 08.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் செயலர் ஹாஜி பிரபு சுல்தான், துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி ஜெஸ்மின் கலீல்,
கே.எம்.டி மருத்துவமனை சார்பில் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், டாக்டர் ஃபாஸீ,
ஃபாயிஸீன் சங்கம் சார்பில் எம்.இசட்.எம்.அபூபக்கர், எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், எம்.எம்.அபூபக்கர், எம்.ஐ.முஹம்மத் நூஹ், ஹாஜி ஓ.எல்.எம்.ஆரிஃப், கானி மிஸ்கீன் ஸாஹிப், எம்.எஸ்.முஹம்மத் நூஹ், எம்.என்.நூருல் அமீன், ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிர், எம்.எச்.ஷாஹுல் ஹமீத், ஏ.எம்.முஹம்மத் அய்யூப், ஏ.ஆர்.முஹம்மத் இர்ஃபான், எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபீ, எம்.எச்.முஹம்மத் அலீ, ஜி.எம்.முஹம்மத் சுலைமான்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் எம்.எஸ்.மஹ்மூத் ரஜ்வி, கே.எம்.ஏ,முஹம்மத் முஹ்யித்தீன், ஜே.எம்.ஹைதர் அலீ,
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில், டி.எம்.ஏ.சி.முஹம்மத் லெப்பை,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஏ.எச்.எம்.முக்தார்,
இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.செய்யித் முஹம்மத், கே.கனீ முஹம்மத், எம்.எம்.அப்துர்ராஸிக், நவ்ஃபல், எஸ்.ஏ.ஷேக் முஹ்யித்தீன், டி.செய்யித் இஸ்மாஈல், ஏ.கே.அஹ்மத் சுலைமான்,
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் பி.ஏ.புகாரீ,
கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் அதன் செயலர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ,
ஹாம் ரேடியோ சார்பில் ஹாஜி எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்.எம்.பி.அஸ்ஹர், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் அதன் செயலர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, கோனா அஜ்வாத்,
ஜாவியா அரபிக்கல்லூரி சார்பில் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஷாதுலீ ஃபாஸீ, ஏ.கே.செய்யித் அஹ்மத், என்.கே.எம்.இப்றாஹீம் ஹாஜி, ஏ.எச்.முஹம்மத் நூஹ், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ, ஏ.முஹம்மத் இப்றாஹீம், எம்.எஸ்.அபுல் ஹஸன்,
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
மக்கள் சேவாக் கரங்கள் சார்பில் பா.மு.ஜலாலீ,
CFFC சார்பில் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது,
கவ்திய்யா சங்கம் சார்பில் பி.மஹ்மூத் நெய்னா,
மன்பஉல் பரக்காத் சங்கம் சார்பில் அப்பாஸ்,
அமீரக காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, ஹாஜி துணி உமர், ஹாஜி டி.ஏ.எஸ்.மீராஸாஹிப், ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், எம்.இ.ஷேக், பி.ஹபீப் முஹம்மத், அஹ்மத் நிஜாம்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா,
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு அமைப்பின் (KCGC) சார்பில் ஆடிட்டர் எஸ்.எஸ்.அஹ்மத் ரிஃபாய், பி.ஏ.கே.முஹம்மத் சுலைமான், சாளை பஷீர், எம்.என்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா, ஏ.ஏ.இப்றாஹீம் ஃபைஸல், ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்,
கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத்,
இலங்கை காயல் நல மன்றம் சார்பில் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ,
சென்னை - காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் செயலர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அதன் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்,
தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் என்.ஏ.முஹம்மத் நூஹ்,
பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் எஸ்.எச்.ஷேக் சுலைமான்,
ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் ஹாஜி ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ்,
தாய்லாந்து காயல் நல மன்றம் சார்பில் அதன் செயலர் எம்.எஸ்.செய்யிது முஹம்மது, விளக்கு நூர் முஹம்மத்,
ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் பி.எம்.இ.முஜீபுர்ரஹ்மான்,
தாயிம்பள்ளி சார்பில் ஹாஜி எம்.அஹ்மத், எம்.எச்.அப்துல் வாஹித்,
கோமான் மொட்டையார் பள்ளி சார்பில் என்.எம்.முஹம்மத் ஃபாரூக், எஸ்.எஸ்.தாஹிர்,
மகுதூம் ஜும்ஆ பள்ளி சார்பில் அதன் செயலர் ஹாஜி வி.எம்.ஏ.நூஹ் ஸாஹிப், ஹாஜி ஏ.ஆர்.இக்பால்,
ஆறாம்பள்ளி சார்பில் ஹாஜி எஸ்.ஏ.கே.ஷேக் தாவூத்,
புதுப்பள்ளி சார்பில் எ.ஐ.அஹ்மத் மீராஸாஹிப்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோரும்,
ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், ஹாஜி எல்.டி.இப்றாஹீம், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
மாலையில் துவங்கிய கூட்டம், கலந்துகொண்டோரின் ஒப்புதலைப் பெற்று இரவு வரை நீட்டிக்கப்பட்டது. இடையில் மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. கலந்துகொண்டோர் அனைவரும் துவக்கம் முதல் இறுதி வரை அமைதியுடன் அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு படம் அகற்றப்பட்டது. (10.01.2012 - 16:12hrs) |