காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தான் நகர்மன்றத் தலைவரானால் வெளிப்படையான நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் (Manifesto) துவக்க அறிக்கையாக தெரிவித்திருந்தார்.
வெளிப்படை நிர்வாகத்தை நோக்கிய தனது முதல் நகர்வாக, நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நகரின் அனைத்துப்பகுதி மக்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக, இம்மாதம் 15ஆம் தேதியன்று நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மற்றும் மக்கள் கூட்டமைப்புகளுடன் கலந்தாலோசனை நடத்திடும் பொருட்டு, அவற்றின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள கடித வாசகங்கள் பின்வருமாறு:-
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்....
அன்புடையீர், சாந்தியும் - சமாதானமும் தங்களின் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
எங்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்தில், வெளிப்படையான - நேர்மையான - தூய்மையான நிர்வாகத்தைத் தந்து, மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அத்தியாவசிய சேவைகளான குடிநீர், தெருவிளக்கு, குப்பைகளை அகற்றல், திடமான சாலைகள், சுகாதாரமான - பசுமையான நகரம் போன்றவற்றை துரிதமாக இறைவனின் அருளால் வழங்கிட நாங்கள் அனைவரும் உறுதி பூண்டுள்ளோம்.
மக்களின் குறைகளை - தேவைகளை முறையாக அறிந்திட, நகர்மன்ற தலைவியாகிய நான் சில திட்டங்களை வகுத்துள்ளேன். அதில் ஒன்றாக, மாதம் ஒருமுறை நமதூரின் ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகள் மற்றும் புறநகர் பகுதிகளைச் சார்ந்த சமூக ஆர்வாலர்களைச் சந்தித்து அவர்களுடன் மேற்கண்ட விஷயங்கள் குறித்து கலந்தாலோசனை செய்ய நாடியுள்ளேன்.
முதல் ஆலோசனை கூட்டம், எதிர்வரும் ஞாயிறு 15.01.2012 அன்று மாலை 04:30 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் தெருவில் செயல்பட்டு வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழழையர் பள்ளி வளாகத்தில் வைத்து (இறைவன் நாடினால்) நடத்த நான் திட்டமிட்டுள்ளேன்.
ஆகவே தங்கள் ஜமாஅத் / பொதுநல அமைப்பு / புறநகர்களின் ஊர் தலைவர் / சார்பாக ஒரு பிரதிநிதியை, இவ்வாலோசனை கூட்டத்திற்கு தாங்கள் தவறாது அனுப்பித் தரும்படி தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மற்றும் மக்கள் கூட்டமைப்புகளுக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். |