காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா வளாகத்தில் அமைந்துள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் 01.01.2012 அன்று முறைப்படி செயல்படத் துவங்கியது.
இதற்காக, அன்று மாலை 05.00 மணிக்கு, குருவித்துறைப்பள்ளி செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர் தலைமையில், ஹாஃபிழ் ஷெய்க் அலீ மவ்லானா முன்னிலையில் எளிய நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
குருவித்துறைப்பள்ளியின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், மைதானத்தின் டென்னிஸ் விளையாட்டு அமைப்புக்குழு தலைவர் ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத் ஆகியோரிணைந்து, டென்னிஸ் மைதானத்தில் முதல் விளையாட்டைத் துவக்கி வைத்தனர்.
இத்துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தினமும் இம்மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது.
இதே மைதானத்தின் மற்றொரு பகுதியில் ஏற்கனவே பூப்பந்து விளையாட்டு (ஷட்டில்) நடைபெற்று வருகிறது.
பல காலமாக நடைபெற்று வந்த கைப்பந்து (வாலிபால்) விளையாட்டு, ஆர்வலர்கள் குறைவால் தற்சமயம் இடைநிறுத்தம் கண்டுள்ளது.
நகரின் பல தெருக்களைச் சார்ந்த இளைஞர்களும், சிறுவர்களும் இம்மைதானத்தில் தினமும் விளையாடி வருகின்றனர். மைதானத்தில் விளையாட வலை (நெட்) வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும, டென்னிஸ், பூப்பந்து (ஷட்டில்) விளையாட ஆர்வமுள்ளோர் அவற்றுக்கான உபகரணங்களுடன் வந்து இம்மைதானத்தில் உரிமையுடன் வந்து விளையாட வரவேற்கப்படுவதாகவும், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். |