காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, ஹிஜ்ரீ 1433, ஸஃபர் மாதம் 18, 19, 20 (13.01.2012 முதல் 15.01.2012 வரை,) வெள்ளி - சனி - ஞாயிறு கிழமைகளில்,
உலகம் போற்றும் உத்தம நபியின் உதயதின விழா,
மாமறையை மனதிலேற்றிய மகளிருக்கு ‘ஹாஃபிழா‘ பட்டமளிப்பு விழா,
தீன் ஞானம் கற்றோருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது வழங்கும் விழா,
தஃப்ஸீருல் குர்ஆன் - அருள்மறை விளக்கவுரை குறுந்தகடு வெளியீட்டு விழா,
கல்லூரியின் 29ஆம் ஆண்டு துவக்க விழா
ஆகியவற்றை உள்ளடக்கி ஐம்பெரும் விழாவாக, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெற்றது.
முதல் இரு தினங்களில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்பகுதியில் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சன்மார்க்க நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), தஃப்ஸீருல் குர்ஆன், வினாடி-வினா (Aroos Quiz), பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இறுதி நாளான 15.01.2012 ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ச்சிகள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் முன்புற சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
காலை அமர்வு 10.30 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இவ்வமர்விற்குத் தலைமை தாங்கினார். மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ‘லுத்பில் இலாஹி‘ என்ற இறைவேண்டற்பாவை அனைவரும் நின்று ஓதினர்.
பின்னர், ஹாஜி எஸ்.ஏ.ஷெய்க் சுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சி தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, மத்ரஸாவின் வரலாற்றுச் சுருக்கவுரையை அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பட்டம் பெறும் மாணவியரை வாழ்த்தி மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
பன்னூலாசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் துஆவுடன் காலை அமர்வு நிறைவுற்றது.
காலை நிகழ்ச்சிகளனைத்தையும் ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நெறிப்படுத்தினார்.
அடுத்த அமர்வு மாலை 05.00 மணிக்குத் துவங்கியது. மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, ‘யா ஸெய்யிதீ யா ரஸூலல்லாஹ்‘ என்ற நபிகளார் புகழ்பா அனைவராலும நின்றோதப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் - குடும்பப் பெண்களுக்காக, அக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ நடத்தி வரும் தஃப்ஸீருல் குர்ஆன் விளக்கவுரை வகுப்புகளின் ஒலிப்பதிவுகளடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் குறுந்தகட்டின் முதல் பிரதியை வெளியிட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அதனைப் பெற்றுக்கொண்டார். அடுத்த பிரதியை ஐக்கியப் பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் வழங்க, ஹாஜி எஸ்.அப்துல் கஃப்ஃபார் பெற்றுக்கொண்டார். மூன்றாவது பிரதியை ஹாஜி உமர் லெப்பை வழங்க, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், அக்குறுந்தகடு வெளியீடு பற்றிய அறிமுகவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வழங்கினார்.
இடையிடையே, பெருமானார் புகழ்பாடும் பாடல்கள் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களால் பாடப்பட்டது.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரையாற்றினார்.
பெற்றோரின் கடமைகள், பிள்ளைகளின் பொறுப்புகள், சமுதாயத்தின் மீது பொதுமக்களின் கடமை, மார்க்க அறிஞர்களின் கடமை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய அவரது விரிவான உரை அமைந்திருந்தது.
பின்னர் ஸனது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டம் பெறும் மாணவியரின் பெயர் பட்டியலை நிகழ்ச்சி நெறியாளர் ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ வாசிக்க, பெண்கள் பகுதியிலிருந்து கல்லூரியின் கண்காணிப்பாளர்கள் (ரக்கீபாக்கள்) மாணவியருக்கு ஸனது - பட்டங்களை வழங்கினர்.
‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - சான்றிதழில் இடம்பெற்றிருந்த அரபி மொழியிலான வாசகங்களை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஐ.முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ தமிழாக்கம் செய்து விளக்கிப் பேசினார்.
பின்னர், காயல்பட்டினத்தைச் சார்ந்த - திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்து முடிக்கும் மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசு வழங்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இக்கல்லூரியில் பயின்று ‘ஹாஃபிழா‘ பட்டம் பெற்ற 6 மாணவியருக்கு தலா ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஆகியோரிணைந்து பணப்பரிசுகளை வழங்க, மாணவியரின் சார்பில் - கல்லூரி நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அம்மன்றத்தின் மார்க்க சேவைக்கு கல்லூரியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நன்றி கூற, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிகழ்வுகள் அனைத்திலும், நகரப் பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்புறத்திலிருந்தவாறு நிகழ்ச்சிகளை அவதானித்தனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சிகளனைத்தும், www.kayal.tv (காயல்.டிவி) வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
கல்லூரியில் மூன்றாண்டு கற்றுத் தேர்ந்து, ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - பட்டம் பெற்ற 35 மாணவியர் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
கல்லூரியில் திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு, ஹாஃபிழா ஸனது - பட்டம் பெற்ற 6 மாணவியரின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
தகவல்:
கல்லூரி நிர்வாகம் சார்பாக,
A.L.முஹம்மத் நிஜார் B.A.,
விழாக்குழு பொறுப்பாளர்,
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
பிரபு முபாரக்,
மற்றும்
ஹாஃபிழ் பிரபு முக்தார் இப்றாஹீம்,
தீவுத்தெரு, காயல்பட்டினம். |