காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யாவின் தொடர் முயற்சி காரணமாக, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள - நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாதிருந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, நீர்த்தேக்கத் தொட்டிகளை அடிக்கடி - குறைந்தபட்சம் மாதமொருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளால் கூறப்பட்டது. ஆனால், காயல்பட்டினத்திலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் அனைத்தும் பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமலேயே அவற்றின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நாள்பட்ட சகதிகள் கடும் துர்வாடையை உருவாக்குவதோடு, கிருமிகளும் உருவாகிப் பெருகி, நோய்கள் பல ஏற்பட அவை காரணமாக அமைந்துவிடுகின்றன.
இந்நிலையில், காயல்பட்டினம் 09ஆவது வார்டுக்குட்பட்ட ரெட் ஸ்டார் சங்க வளாகத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இதுபோன்று பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமலேயே இருந்து வந்துள்ளது.
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற பின்னர், அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா இது விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, நகர்மன்றத்தில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு மாதாந்திர கூட்டங்களிலும் இதுகுறித்த தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் நின்றுவிடாமல், நகர்மன்றத் தலைவர், ஆணையர் மற்றும் குடிநீர் வினியோகம் தொடர்பான அலுவலர்களை தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்ததன் காரணமாக, அண்மையில் அத்தொட்டி நகராட்சியால் சுத்தம் செய்யப்பட்டது.
தொட்டியுடன், அதனருகிலுள்ள குடிநீர் திறப்பு வால்வு தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டது.
சுத்தப்படுத்தும்போது, தொட்டிக்குள் அதிகமான உடைப்புகள் இருந்ததைக் காண முடிந்ததாகவும், துர்வாடை வீசியதை உணர முடிந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
சுத்தப்படுத்தும் பணிகளை நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா முழுமையாக மேற்பார்வையிட்டார். அவருடன் அவரது கணவர் மாஸ்டர் பஷீருல்லாஹ், அப்பகுதி பொதுமக்களான நவ்ஃபல் ரிஜ்வீ, முஹம்மத் ஃபைஸ், சல்மான் ஆகியோர் பணிகளைப் பார்வையிட்டனர்.
படங்கள்:
முஹம்மத் ஃபைஸ்.
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |