தொடர்ச்சியாகக் கிடைத்த அரசு விடுமுறையை உற்சாகமாக கழித்திடும் பொருட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள், திருச்செந்தூரிலுள்ள தோட்டத்தில் புத்துணர்வு முகாம் என்ற பெயரில் சிற்றுலா சென்று வந்தனர்.
இன்று காலையில் துவங்கி மாலை வரை நீடித்த இப்பயணானுபவம் குறித்து, பயண ஏற்பாட்டாளரான - அப்பள்ளியின் ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி தெரிவித்துள்ளதாவது:-
வகுப்பறை, மாணவர்கள், புத்தகம், தேர்வு, வினாத்தாள் என்று எந்நேரமும் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கைச் சூழலில், தொடர்ச்சியாகக் கிடைத்த பொங்கல் விடுமுறையின் ஒரு தினத்தை சற்று ஓய்வாக கழிக்கும் வகையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் குழுமத்திற்கு புத்துணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை 08.00 மணியளவில் பள்ளியில் ஒன்று கூடிய ஆசிரியர்கள், வாகனம் மூலம் திருச்செந்தூரிலுள்ள பசுமை படர்ந்த தோப்பிற்கு சிற்றுலா சென்றனர்.
அனைவருக்கும் காலை சிற்றுண்டி அங்கேயே ஆயத்தம் செய்து பரிமாறப்பட்டது. “கற்றுக்கொடுப்பார் கரண்டியும் பிடிப்பார்” என்ற புதுமொழிக்கேற்ப - சமையல் ஏற்பாடுகளைச் செய்திடும் பொருட்டு ஆசிரியர்களே கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர்.
இவர்களின் கைவண்ணத்தில், காயல்பட்டினம் ஸ்பெஷல் களறி சாப்பாடு மதிய உணவாக சமைத்துப் பரிமாறப்பட்டது.
தொழுகை நேரம் வந்ததும், முஸ்லிம் ஆசிரியர்கள் கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுகையை நிறைவேற்றினர்.
காலையில் தோட்டத்திற்குள் நுழைந்தது முதல், மாலையில் வெளியேறும் வரை - சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலில் ஈடுபட்ட ஆசிரியர் குழுவினர், சில மணித்துளிகளில் சிறுபிள்ளைகளாக மாறி ஓடியாடி உற்சாகமாக விளையாடத் துவங்கிவிட்டனர்.
பள்ளி நடவடிக்கைகள் பற்றியும், மாணவர் நலன்கள் பற்றியும், அவ்வப்போது வெளியாகும் அரசு உத்தரவுகள் பற்றியும் மட்டுமே பேசிக் களைத்துப் போன ஆசிரியர்கள், இப்புத்துணர்வு முகாமில் - அதைத் தவிர அனைத்து அம்சங்கள் குறித்து அரட்டையடித்து ஒய்ந்தனர்.
முற்றிலும் ஒரு மன நிறைவான சூழலில் பயனுள்ள பல தகவல்களை தமக்குள் பரிமாறிக் கொண்ட ஆசிரியர்கள், பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர் - அடுத்த தொடர்விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக!
இந்த முகாம் ஆசியர்களுக்கு மிகவும் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி தெரிவித்துள்ளார். |