காயல்பட்டினத்தில் மூன்று நாட்களுக்கொருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் வீணாக்கப்பட்டு வருவது வேதனையளிப்பதாக உள்ளது.
காயல்பட்டினம் சேதுராஜா தெரு - கோமான் புதூர் சந்திப்பில் உள்ள ஒரு கிணற்றில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதும், கூலக்கடை பஜார் பகுதியில் ஜீ-ஸ்நாக்ஸ் கடை எதிரிலுள்ள சாலையில் பல காலமாக வீணாக வெளியேறி வழிந்தோடி வரும் குடிநீர் ஆகியன இதற்கான சான்றுகள்.
அகநகரின் சில பகுதிகளிலும், புறநகரின் பல பகுதிகளிலும் குடிநீர் வினியோக பொதுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் செவ்வக வடிவில், படிகள் அமைக்கப்பட்ட நிலையில் தொட்டி கட்டப்பட்டு, அதனடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். குடிநீர் வினியோகிக்கப்படும் நேரங்களில் இக்குழாயில் வரும் நீரை, சுற்றுப்புறப் பகுதி மக்கள் தம் தேவைக்கு எடுத்துச் செல்வர்.
ஆனால், காயலப்ட்டினம் சேதுராஜா தெரு மேல் முனையில், கோமான் புதூர் செல்லும் சாலையையொட்டி அமைந்துள்ள கிணறு இந்த அளவுகோலிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது.
யாரும் இறங்கி குடிநீர் எடுக்குமளவுக்கு இது தொட்டியாகவும் கட்டப்படவில்லை. படிகளுமில்லை. வெறுமனே கிணறு மட்டும் உள்ளது. அதில் ஒரு குடிநீர் வினியோகக் குழாய் கிணற்று உறையுடன் ஒட்டினாற்போல் - வெளியில் தெரியாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. (பின்வரும் படத்தில் அது வட்டமிடப்பட்டுள்ளது.)
தண்ணீர் வரும் காலங்களில், இப்பகுதியைச் சார்ந்த மக்கள் இக்குடிநீர் குழாயிலிருந்து பீறிட்டு வரும் குடிநீரை வாளி மூலம் இறைத்து எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் தேவைக்குப் போக எஞ்சிய நீர் நீண்ட நேரம் கிணற்றுக்குள்ளேயே வீணாகச் செல்கிறது.
இந்த காட்சி, இக்குடிநீர் இணைப்பு நகராட்சியால் முறைப்படி வழங்கப்பட்டதுதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் கூலக்கடை பஜார் சாலையில், ஜீ-ஸ்நாக்ஸ் கடை எதிலிருள்ள பகுதியில் தண்ணீர் உடைப்பெடுத்து வழிந்தோடுகிறது.
“இந்நிலை இன்று நேற்றல்ல! பல மாதங்களாக இதே நிலையில்தான் உள்ளது! எங்கள் வீடுகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காத நிலையில், இங்கு தண்ணீர் வழிந்தோடுவதைக் காணக்காண எங்கள் வயிறு எரிகிறது!” என்றனர் அப்பகுதியை அடிக்கடி பயன்படுத்தும் சிலர்.
ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து தினமும் காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு தினமும் நகரில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க இயலும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டு வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெறப்படும் நீர் முழுமையாக யாருக்கும் கிடைக்காத நிலையில் அது எங்கே செல்கிறது என்றும் அண்மையில் “காயல்பட்டின குடிநீர் வினியோகம்: ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம்-இல் எழுப்பப்பட்ட வினா.
அதற்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள சிற்சிறு சான்றுகளே இவையாகும்.
தகவல் & படங்கள்:
உமர் அனஸ் (கத்தர்). |