இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில், நகர பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப்போட்டி, நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் குழுமத்தால் நடத்தப்பட்டது.
“ஊழலற்ற பாரத தேசத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு” எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களான எஸ்.சிதம்பரம், ஆனந்தக்கூத்தன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் ஆகியோர் போட்டி நடுவர்களாகப் பணியாற்றினர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் உரைகள் நிறைவுற்ற பின்னர், ஆசிரியர் ஆனந்தக்கூத்தன், மு.அப்துல் ரசாக், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி, மேடைப்பேச்சு குறித்த நுணுக்கங்களை அவர்களுக்கு விளக்கினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.கோபால் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், ஹயாஷி கராத்தே பள்ளியின் பயிற்சியாளர் இர்ஃபான், பதுரிய்யா ஹோட்டல் முஹ்யித்தீன், ஜெய்னுத்தீன் மரைக்கார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
போட்டியில் முதல் மூன்றிடம் பெறும் மாணவர்களுக்கு, இம்மாதம் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவருகில் நடத்தப்படும் குடியரசு தின விழாவின்போது, முறையே ரூ.1,500 - 1,000 - 500 பணப்பரிசும், சுழற்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. |