தொலைவிலிருந்து கல்வி பயில வரும் மாணவியரின் போக்குவரத்திற்காக வாகன வசதியை வரும் புதிய கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக, காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஆண்களுக்கு மட்டுமே - ஆலிமாகவும், ஹாஃபிழாகவும் வாய்ப்பிருந்த நம் காயல் பதியில், பெண்களுக்கும் பிரத்தியேக பாடத்திட்டத்துடன் இஸ்லாமிய மகளிர் கல்லூரியை துவக்கமாக அறிமுகப்படுத்தியது அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியாகும்.
அதுபோல, வரும் புதிய கல்வியாண்டில் புதியதோர் திட்டத்தை எம் கல்லூரி அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது, தொலைவான பகுதிகளிலிருந்து கல்வி கற்க வருவோருக்காக தற்போது உலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மட்டுமே வாகன வசதி நடைமுறையில் உள்ளது. மார்க்கக் கல்வி பயில வரும் மகளிருக்கு தொலைவு ஒரு பிரச்சினையாகி, அவர்களின் மார்க்க அறிவுக்கு அது முட்டுக்கட்டையாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், வரும் புதிய கல்வியாண்டு முதல் மாணவியரை அழைத்து வர வேன் வாகன வசதியை இன்ஷாஅல்லாஹ் அறிமுகப்படுத்தவுள்ளது எம் கல்லூரி.
நமதூரின் தொலைதூர தெருக்களிலிருந்து வரும் கல்லூரி மாணவியர் மற்றும் பழைய காயல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், சிறுதொண்டநல்லூர், ஏரல், குரும்பூர், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி, குலசேகரன்பட்டினம், நாலுமாவடி, சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களிலிருந்து மார்க்க அறிவு தேடி வரும் மகளிருக்காகவும் இந்த வாகன வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த புதிய வசதி மூலம், மாணவியர் தினமும் அவர்கள் இல்லங்களிலிருந்து வாகனத்தில் புறப்பட்டு வந்து கல்வி கற்ற பின்னர், மாலையில் அதே வாகனத்தில் இல்லம் திரும்ப வாய்ப்புள்ளதால், மாணவியருக்கு மார்க்க அறிவு பெற்றிட இனி தூரம் ஒரு தடையாக இருக்காது, இன்ஷாஅல்லாஹ்!
காயல்பட்டினம் புறநகர் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுவட்டார ஊர்களைச் சார்ந்த மகளிர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |